-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரும் உரிமையை தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரிக்கிறது.
த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களை குறிப்பாக சமஷ்டி கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, ஆர்.எம். இமாம், செல்வம் அடைக்கலநாதன், வினோதரலிங்கம், சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோரை இலகுவாக உணர்ச்சியடையக்கூடிய தமிழ் பேசும் மக்களை தப்பாக வழி நடத்த வேண்டாமென மிக பணிவாக கேட்டுக் கொள்கிறேன. ஜனவரி 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லீம் மக்கள் எடு;த்த பொது நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்து அறிக்கைகள் விட்ட தலைவர்களின் செயற்பாடு அநாவசியமற்றதும், நிலைமையை மேலும் மோசமடைய செய்யும் எனவும் கூறி வைக்க விரும்புகின்றேன். த.தே.கூ இனர் எமது அப்பாவி மக்களை பல தடவைகள் ஏமாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் அடைந்த பலன் சிங்கள மக்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி அவர்கள் அனைவரையும் ஒரு பக்கம் சார வைத்துள்ளது. எனக்குத் தெரிந்த வைகயில் தமிழ் ஈழம் அமைந்து விடுமோ என்ற பீதியை சிங்கள மக்களின் சிந்தனையில் உருவாக்கியது. அவர்கள் தாம் எடுத்த தீர்மானத்தை மக்களிடம் விடாது தீர்வுக்கு விடாது பல இடங்களிலும் கொக்கரித்தமை சிங்கள மக்களை விழிப்படையச் செய்துள்ளது.
மேலும் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை மக்கள் எடுத்ததன் பின்னர் த.தே.கூ இனர் புதுடில்லிக்கு விஜயம் செய்ய எவ்வித அவசியமும் ஏற்படவில்லை. மிக மோசமானதும், முட்டாள்தனமாதுமான இவர்களின் செயற்பாடுகள் டில்லி விஜயம் சம்பந்தமாக இந்திய-இலங்கை அரசுகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்காது அறிக்கையை விட்டதேயாகும். இந்திய காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கூறியது போல இக் குழுவினர் தாமாகவே இந்தியா சென்றார்கள் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரை தவிர வேறு எவரையும் சந்தித்து பேசவில்லை என்பதே உண்மைபோல் தோன்றுகிறது. த.தே.கூ இல் உள்ள பல்வேறு கட்சிகள் மிக விரைவாகவும், தமக்கு வசதியாகவும் தம் கட்சிகளின் அண்மைக்கால வரலாற்றை மறந்து தமிழ், முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்பட்டதற்கு தாமே காரணம் என பிதற்றுகிறார்கள். ஆனால் உண்மையில் அரசு ஆயுதக் குழுக்களை தம் பகுதிகளில் நடமாட அனுமதித்ததற்கு எதிர்ப்பை காட்டவே ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட பெருமை மக்களுக்குரியதே. ஆகும். வடக்கு கிழக்கு ஆகிய இவ்விரு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆயுதக் குழுக்களின் கொடூரச் செயல்கள் பற்றி பல தடவைகள் ஆட்சேபித்து இருந்தும் அதனை அரசு பொருட்படுத்தாமையே அவர்களின் வெறுப்புக்கு காரணமாகும். அவர்கள் தமது பகுதிகளில் சுதந்திரமாக சிந்திக்கவோ செயற்படவோ முடியாமல் இருந்தமை அரசுக்கு நன்றாகத் தெரியும். தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைவதாக கூறியமை அந்த வேட்பாளருக்கு வாக்களிக்க தூண்டியதே அன்றி பல்வேறு பிரிவுகளாக உடைந்திருக்கின்ற த.தே.கூ இன் வேண்டுகோளுக்காக அல்ல என்பதுதான் உண்மையும் ஆகும்.
விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறிய த.தே.கூ இனர் பாராளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாகவே அமர்ந்திருந்தனர். தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இவர்கள் இன்று யாரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள? நாடுகடந்த தமிழ் ஈழத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு விடுதலைப்புலி; தலைவர்கள் சிலருக்கு இவர்களில சிலர் முகவர்களாக செயற்படுகின்றனர். எமது மக்கள் தமது உற்றார் உறவினர்களையும், சொத்துக்கள் அத்தனையையும் இழந்துள்ளனர். யுத்தம் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தோல்வியடையும் நிலையிலும் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைசி தமிழன் இருக்கும் வரை போராடுவான் என்று உற்சாகமூட்டி வந்தனர். வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தார்மீக உரிமை இவர்களுக்கு உண்டா என மக்கள் கேட்கின்றனர்.
ஒரு ரெலோ உறுப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அதே கட்சியைச் சேர்ந்த இருவர் அவருக்கு ஆதவு தெரிவிக்க மற்றும் சிலர் த.தே.கூ இன் தீர்மானத்திற்கு முரணாக வேறு வேட்பாளரை ஆதரிக்கும் நிலையில் த.தே.கூ எவ்வாறு உரிமை கோர முடியும்? தினக்குரல் பத்திரிகைக்கு ஜனவரி 23ம் திகதி ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தானோ அல்லது செயலாளர் பிரசன்னா இந்திரக்குமாரோ ஒப்பமிட்டு ரெலோ உறுப்பினர்கள் திருவாளர்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரை வெளியேற்றும் கடிதத்தில் தாங்கள் ஒப்பமிடவில்லை எனக் கூறியிருந்தார். இக் கூற்று உண்மையாயின் இந்த உறுப்பினர்கள் இருவரும் இப்போதும் ரெலோவில் இருக்கின்றார்களா? என்பதும் இவர்களது பாராதூரமான செயற்பாட்டிற்கு கட்சி நடவடிக்கை எடுக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. தேர்தலை பகிஷ்கரிக்குமாறு அறிக்கைவிட்ட ஒரோயொரு தமிழ் காங்கிரஸ் உறுப்பினரின் நிலைப்பாடு என்ன? அவர் தமிழ் காங்கிரஸில் அங்கம் வகிக்கின்றார். ஆனால் வேறு வேட்பாளரை ஆதரிக்கின்ற த.தே.கூ இல் அவர் இருக்கின்றாரா என்று மக்கள் கேட்கின்றனர். த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சிலரின் இத்தகைய செயற்பாடுகள் தாம் வகிக்கும் கொள்கைக்கு துரோகம் விளைவிப்பதாக அமையும்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களை முட்டாள்களாக்க வேண்டாமென த.தே.கூ இனரை மிகப் பணிவாக கேட்டுக் கொள்கிறேன். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்ற கோதாவில் வடக்கு முஸ்லீம் மக்களை மீளக் குடியமர்த்தவும், கிழக்கே அவர்களின் வயல்களில் விவசாயம் செய்ய அனுமதிக்கவும் விடுதலைப் புலிகளை இணங்க வைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், த.தே.கூ இனரின் செயற்பாடுகளை எவ்வாறு பொறுத்துக் கொள்கிறார்கள் எனவும், விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறுகின்றவர்களோடு எவ்வாறு ஒரு இணக்கப்பாடு என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
ஆட்கடத்தல், சித்திரவதை போன்ற விடுதலைப் புலிகளின் கொடூர செயல்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்காத த.தே.கூ இனர் மீது இடம்பெயர்ந்த மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வர். இடத்துக்கிடம் மாறி இடம் பெயர்ந்து தமது சொத்துக்களை இழந்து இறுதியாக சில சொற்ப உடைகளுடனும், சிலர் உடுத்த உடைகளுடனும் இடம்பெயர்ந்த போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை மக்கள் எவ்வாறு சகித்துக் கொள்வார்கள். விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்பது உறுதி என தெரிந்தும் புலிகளை மேலும் போராட உற்சாகமூட்டி வந்த த.தே.கூ இனர் மீது இடம்பெயர்ந்த மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பர். அத்துடன் தம் உறவினர்கள் அனைவரையும் பிற நாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேறு வழியின்றி விரக்தியுடன் தப்பி செல்ல முயற்சித்தவர்களை சுட்டுக் கொல்வது உட்பட பல்வேறு துன்பங்களை அனுபவித்த இடம்பெயர்ந்த மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச சமூகமும், உலகளாவிய பல்வேறு சமூக அமைப்புக்களும் இணைந்து விடுதலைப் புலிகளால்; மனிதக் கேடயமாக வைக்கப்பட்டிருந்த அப்பாவி மக்களை விடுவிக்குமாறு வற்புறுத்தி கேட்டவேளையிலும் த.தே.கூ இனர் மௌனம் சாதித்தனர். நானும் அப்பாவி மக்களை விடுவிக்க விடுதலைப் புலிகளை இணங்க வைக்க முடியாவிட்டால் தமது பாராளுமன்ற ஆசனங்களை துறக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தேன். பாராளுமன்ற ஆசனங்களை துறப்பதாக மிரட்டியாவது த.தே.கூ இனர் சாதித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் தம் பாவங்களை மறைத்து இலகுவாக பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு புது அங்கியை கண்டுபிடித்துள்ளனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கணக்கில் அடங்கா பல அப்பாவி உயிர்கள் பறிபோனமைக்கு இவர்களே பொறுப்பேற்க வேண்டும். இந்தத் தலைவர்களைப் பற்றி இன்னும் பல கூறலாம். அவற்றில் ஒன்று பாராளுமன்றத்தில் பதவி வகிக்கும் தார்மீக உரிமை இவர்களுக்கு இல்லை என்பதாகும். அவர்களின் 22 உறுப்பினர்கள் மோசடி மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களாவர் என்பதால் சுதந்திரமான நீதியான தேர்தல் பற்றி பேசுகின்ற உரிமை இவர்களுக்கு இல்லை. 2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 22 த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இவர்களின் கெடுபிடியும் மிரட்டலுமே காரணமாக அமைந்தது. மாற்றுக் கட்சியின் வேட்பாளர் எதுவித தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் கண்காணிப்புக்குழு நான்கும் ஒரே மனதாக தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகள் நடந்து கொண்ட முறையை கண்டித்துள்ளன. அவற்றில் உள்ளுரைச் சேர்ந்த பவ்ரல், சி.எம்.ரி.வி ஆகிய இரு அமைப்புக்களும் வடக்கு கிழக்கில் நடந்த தேர்தலை ரத்துச் செய்து புதிதாக நடாத்துமாறு வற்புறுத்தி கேட்டிருந்தன.
பல்வேறு சிறுபான்மை இனங்களும் ஒரே கொடியின் கீழ் இணைந்து செயற்பட வேண்டுமென்ற அவசியத்தை உணர்கின்றேன். அரசுடன் முரண்படுவதற்கு அல்ல. நேர்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சிங்கள மக்களையும் இணங்க வைத்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் சகல நியாயமான கோரிக்கைகளுக்கும் தீர்வுகாண வேண்டும் என்பதற்காகவே. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மோசடி மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இன்றுவரை அங்கத்துவம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவமான முறையில் தம் பதவிகளை துறக்க வேண்டும். அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செயற்பட்டு பல்வேறு சமூகத்தினரும் சமமாக சகல உரிமைகளுடனும், சலுகைகளுடனும் வாழக்கூடிய ஒரு தீர்வை உருவாக்கக்கூடிய ஓர் அணியினரை செயற்பட வழிவிட வேண்டும்.
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’