வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


காசாவின் ஐ.நா. வளாகத்தில் நடந்த எரிரசாயன தாக்குதல்
காசாவின் ஐ.நா. வளாகத்தில் 2009 ஜனவரியில் எரிரசாயன தாக்குதல் நடந்திருந்தது

காசா தாக்குதலில் எரிரசாயன குண்டுகள்: இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

மத்தியகிழக்கின் காசாவில் சென்ற வருடம் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதலின்போது, வெள்ளை பாஸ்பரஸ் எரிரசாயன குண்டுகள் விழுந்து அங்குள்ள ஐ.நா. கிடங்கொன்று தீக்கிரையாகிய சம்பவம் தொடர்பில், தமது இராணுவத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.

யுத்த விதிமுறைகளை மீறும் விதமாக பொதுமக்கள் அடர்த்தியாக வாழும் ஒரு பகுதியில் ஆர்டில்லரி ஷெல் குண்டுகளைப் பயன்படுத்தி சிவிலியன்களின் உயிருக்கு பங்கம் விளைவித்தன் பேரில் இந்த இராணுவ அதிகாரிகள் கண்டிக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் போர்க்குற்றங்கள் நடந்ததாகத் தெரிவிக்க்கப்படுவது குறித்து இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று இருதரப்புமே விசாரணை செய்ய வேண்டும் என்று ஐ.நா. கோரியிருந்த நிலையில், ஐ.நா.வுக்கு இஸ்ரேல் வழங்கிய ஒரு அறிக்கையில் அந்நாடு இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளது.

காசா தாக்குதலின்போது நடந்த முப்பத்து ஆறு சம்பவங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசு பிரதிநிதி தெரிவித்துள்ளார்.


பாக்தாத் தற்கொலை தாக்குதல் 40 பேர் பலி

ஷியா பக்தர்கள் ஊர்வலமாக சென்றவேளை தாக்குதல் நடந்துள்ளது
இராக்கின் தலைநகர் பாக்தாதில் ஒரு பெண் தற்கொலை குண்டுதாரி நடத்திய குண்டுத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் சுமார் நூறு பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இராக்கிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் தற்கொலை குண்டுதாரி தனது உடலில் மேற்பகுதியில் உடுத்தியிருந்த உள்ளாடையில் குண்டுகள் திணித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள்.

இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம் கள். அவர்கள் இராக்கின் தலைநகருக்கு தெற்கே இருக்கும் கர்பலா நகரில் துக்கத்தை அனுஷ்டிக்கும் ஒரு மத நிகழ்வில் கலந்து கொள்ள புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கடந்த சில வருடங்களாகவே இராக்கில் சுன்னி முஸ்லிம் தீவிரவாததிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஷியா இன மக்களை குறிவைத்து தாக்குதலை நடத்தி வந்துள்ளனர்.


தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என்ற சவுதிஅரேபியாவின் குற்றச்சாட்டுக்கு யேமன் கிளர்ச்சிக்காரர்கள் மறுப்பு

போர்நிறுத்தம் அறிவிக்கும் கிளர்ச்சிக்காரர்
சவுதிஅரேபியா மீது தாக்குதல்கள் நடத்துவதை யேமனின் வடபகுதியில் இருக்கும் கிளர்ச்சிக்காரர்கள் நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அந்த ஷியா கிளர்ச்சிக்காரர்கள் மறுத்துள்ளனர்.

தாங்கள் போர்நிறுத்தம் செய்வதாக கடந்த வாரம் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்தும் சவுதிஅரேபிய விமானங்களும் எறிகணைகளும் தம்மீது இலக்குவைத்து தாக்குவதை நிறுத்தவில்லை என இக்கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் தாங்கள் திருப்பிச் சுடவில்லை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சவுதிஅரேபியா மீது தாக்குவதை கிளர்ச்சிக்காரர்கள் நிறுத்தவில்லை என்பதுதான் அவர்கள் முன்வைத்த போர்நிறுத்த கோரிக்கையை தாங்கள் நிராகரித்ததன் முக்கிய காரணம் என யேமன் அரசாங்கம் நேற்று ஞாயிறன்று கூறியிருந்தது.


பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களை வெளிநாடு கொண்டு செல்ல முயற்சி: ஹெய்டியில் அமெரிக்கர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

பூகம்பத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகள்
ஹெய்டியிலிருந்து ஒரு பஸ் நிறைய சிறார்களை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்வது தடுக்கப்பட்ட பிறகு அதனுடன் தொடர்புடைய பத்து அமெரிக்கர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

அந்தப் பேருந்தில் இருந்த 33 சிறார்களும் பெற்றோர்களை இழந்தவர்கள் என்றும், ஹெய்டிக்கு அருகில் இருக்கும் டொமினிக்கன் குடியரசில் இருக்கும் ஒரு அனாதை இல்லத்துக்கு இவர்கள் கொண்டு செல்லப்படவிருந்தனர் என்றும், இடஹோ நகரில் தேவாலயங்களுக்கு செல்லும் குழுவைச் சேர்ந்த இந்த அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்.

எனினும் இந்தச் சிறார்களில் சிலரது உறவினர்கள் உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது என ஹெய்டியின் உதவி வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் கூறுகிறார்கள்.

இதில் குறிப்பாக ஒரு சிறுமி தனது பெற்றோர்கள் உயிருடன் இருப்பதாக வலியுறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹெய்டியில் மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலநடுக்கத்தை அடுத்து அங்கிருந்து சிறார்களை வெளியே எடுத்துச் செல்வது தொடர்பில் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிறார்களை கடத்தி தத்தெடுக்கும் முகமாக விற்கப்படுகிறறார்கள் என்கிற அச்சங்கள் எழுந்ததால் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

செய்தியரங்கம்
இலங்கையின் பாதுகாப்பு படையினர்
இலங்கையின் பாதுகாப்பு படையினர்

இலங்கையில் சில இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் எனக் கூறி சில இராணுவ அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பபடுகிறார்கள்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநரான லக்ஷமன் ஹுலுகல்ல இந்தத் தகவலை பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.இப்படியாக எவ்வளவு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் கூறவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக இந்த அதிகாரிகள் செயற்பட்டார்கள் என்கிற தகவல் கிடைத்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

நாட்டின் முப்படைகள் மற்றும் காவல்துறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு ஒழுங்கு நடவடிக்கையே இது எனவும் லக்ஷமன் ஹுலுகல்ல கூறுகிறார்.

இந்த இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


லங்கா பத்திரிகையை மூட அரசு எடுத்த நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

சிக்கலிலுள்ள பத்திரிகையும் அதன் ஆசிரியரும்
இலங்கையிலிருந்து வெளியாகும் லங்கா வாராந்திர பத்திரிகையின் அலுவலகத்தை மூட இலங்கையின் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையை கொழும்பிலுள்ள ஒரு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே வி பி கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தாகக் கூறப்படும் அந்த பத்திரிகையில் அலுவலகத்தை மூட இலங்கையில் குற்றத் தடுப்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்திருந்தாலும் அதன் ஆசிரியர் இன்னமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசின் உத்தரவுகளுக்கு அடிபணியாத ஊடகங்களுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகாக உள்ளூர் ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த பத்திரிகையில் வெளிவந்த சமீபத்திய கட்டுரை ஒன்று பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அரசு மேற்கொண்டுவரும் விசாரணைகள் சம்பந்தமான் விதிமுறைகளை மீறியுள்ளது என்று குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.


புலிகளுடனான போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை கிடையாது:கோத்தபாய ராஜபக்ஷ

போர் வெற்றியை குறிக்கும் சிலை
போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை இல்லை
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் ஃபொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார்.

இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்படும் என அறிவிப்பு

சம்பந்தர் மற்றும் ரவூஃப் ஹக்கீம்
சம்பந்தர் மற்றும் ரவூஃப் ஹக்கீம்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் அத்துமீறல்களுக்கு மத்தியிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேண்டுகோளின்படி வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அக்கட்சிகள், அடுத்து வரவரவிருக்கின்ற பொதுத் தேர்தலிலும் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன.

இந்தத் தகவலை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை நிராகரித்து வாக்களித்திருக்கின்ற போதிலும், அரசாங்கத்துடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து பேச்சுக்களை நடத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்பும் தமது கட்சிக்காரர்கள் மீது வன்முறைகள் தொடர்வதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் அரசுக்கு எதிராக வாக்களித்தமைக்காக திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதில் பாஸ் நடைமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்


பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்கிறார் சிதம்பரம்

பிராபகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கை உறுதி
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது என்று இந்தியா கூறுகிறது
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபாகரின் மரணத்தை உறுதி செய்யும் மரணச் சான்றிதழ் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு தெரிவித்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கை முறைப்படி முடித்து வைப்பதற்காக அதற்கான மரனச சான்றிதழை இந்தியா இலங்கையிடம் கோரியிருந்தது.

ஆனால் அத்தகைய மரணச் சான்றிதழ் ஏதும் இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் தலைவரை மேற்கோள்காட்டி ஞாயிறன்று செய்திகள் வெளியாயின.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் இது தொடர்பான தகவலைக் கோரியபோதே இந்தியாவின் மத்திய புலனாய்வு நிறுவனம் இதை தெரிவித்ததாக செய்திகள் கூறின.

இந்நிலையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதனை உறுதி செய்யும் முகமான மரணச் சான்றிதழ் இலங்கையிடமிருந்து இந்திய அரசுக்கு கிடைத்துவிட்டது என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’