வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


டச் படையினர்
டச் படையினர்

ஆப்கான் பிரச்சனையால் நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் தங்கியிருப்பது தொடர்பான சர்ச்சையில் நெதர்லாந்து அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் செயற்பாடு குறித்து உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் டச் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானியர்கள் நேட்டோவின் ஆதரவை தொடர்ந்து பெறுவார்கள் என நேட்டோவின் சார்பில் பேசவல்லவரான ஜேம்ஸ் அப்பாதுரை கூறியுள்ளார்.

தலிபான்களுக்கு எதிரான மிகப்பெரிய படை நடவடிக்கையில் நேட்டோவினர் ஈடுபட்டு வரும் இந்நிலையில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே, டச் படைகள் நிலைகொண்டுள்ள உருஸ்கான் மாகாணத்தின் ஆளுநர், டச் படைகள் வெளியேறினால் மீள்கட்டமைப்பு பணிகள் பின்னடைவை சந்திக்கும் என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சாலைகளை அமைப்பது, கட்டிடங்களை கட்டுவது, ஆப்கான் காவல்துறையினருக்கு பயிற்சி கொடுப்பது, பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற விஷயங்களில் டச் படையினர் முக்கிய பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மொரோக்கோ மசூதி விபத்தில் பலர் பலி

மசூதியில் விபத்து
மசூதியில் விபத்து

மொராக்கோவின் மெக்னஸ் நகரத்தில் மசூதியின் கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் சிக்கிக்கொண்டவர்களை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில் குறைந்தபட்சம் 40 பேர் பலியாகி 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த போது சுமார் 300 பேர் மசூதியில் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற பகுதி பூகம்பம் ஏற்பட்ட பகுதி போல இருப்பதாகவும், ஏராளமான இடிபாடுகள் கிடப்பதாகவும் அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


முப்பது ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது

பாகிஸ்தான் இராணுவத்தினர்
பாகிஸ்தான் இராணுவத்தினர்

பாகிஸ்தான் ஆப்கான் எல்லைப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பலமாக நிலைகொண்டுள்ள பகுதியொன்றின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் ஆயுததாரிகள் முப்பது பேரைக் கொன்றுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

தமக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றையடுத்து தெற்கு வாசிரிஷ்டானில் ஷாவல் மலைப்பகுதிகளில் உள்ள ஆயுததாரிகளின் இந்த மறைவிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பழங்குடியின மக்களின் வாழ்விடப்பகுதிகளில் ஒன்றாக விளங்கும் தெற்கு வாசிரிஸ்டானில் உள்ள தாலிபன்களை இலக்குவைத்து அந்நாட்டுப் படையினர் கடந்த ஒக்டோபரில் பாரிய படைநடவடிக்கையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.


அல் கையிதா தான் பெரிய பிரச்சனை - அமெரிக்கா

ரிச்சர்ட் ஹோல்புரூக்
ரிச்சர்ட் ஹோல்புரூக்

மத்திய ஆசிய நாடுகளுக்கு தலிபான்களை விட அல் கையிதாவினர் மிகப்பெரிய ஆபத்து என மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்பு அமெரிக்க தூதரான ரிச்சர்ட் ஹோல்புரூக் கூறும்போது, மத்திய ஆசிய நாடுகளுக்கு ஊடுருவ விரும்பும் அல் கையிதா அங்கு சர்வதேச பயங்கரவாதிகளை உருவாக்கி அந்த பகுதியை ஒரு ஸ்திரமற்ற பகுதியாக உருவாக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் இருக்கும் தஜிகிஸ்தானில் பேசிய அவர், இந்த பிரச்சனையானது, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

செய்தியரங்கம்
இராமலிங்கம் சந்திரசேகரன்
இராமலிங்கம் சந்திரசேகரன்

ஐக்கிய தேசியக் கட்சி - ஜே.வி.பி. இடையே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை கூட்டாக சந்தித்த கட்சிகளிடையே தற்போது வேறுபாடுகள் தோன்றியுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் தேர்தலை தனித்து போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பொது சின்னத்தின் கீழ் தேர்தலை எதிர்கொள்ள மறுப்பதன் காரணமாக - தான் கூட்டணியில் இருந்து விலகிச் செல்வதாக ஜே.வி.பி. கூறியுள்ளது.

வேறு சில எதிர்க்கட்சி அமைப்புகளுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஒரு கூட்டமைப்பை ஜே.வி.பி. அமைத்துள்ளதாகவும், இந்தக் கூட்டமைப்பின் சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகர் பிபிசியிடம தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு காரணம் குறித்து தமிழோசையிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சுவாமிநாதன், தமது கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட ஜே.வி.பி. உடன்படவில்லை என்பதே இந்தப் பிளவுக்குக் காரணம் என்று கூறினார்.

யானைச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் வேறு கட்சிகளுடன் தாம் அணி சேர விரும்பியே இருந்ததாக சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சுவாமிநாதன் ஆகியோர் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்

இலங்கை தேர்தல் ஆணையாளர்
இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 19ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி நண்பகல் வரை தமது வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸநாயக்க அறிவித்திருக்கின்றார்.

வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில் பார்க்கையில், நாடளாவிய ரீதியில் 27 சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இறுதித் தினத்திலோ அதற்கு சற்று முன்னரோ வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினாகள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 196 பேரும் தேசியப் பட்டியல் அடிப்படையில 29 பேருமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.


இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை தெரியாது: ஐ.நா.

முகாம்வாசிகளுடன் ஜான் ஹோம்ஸ் (பழைய படம்)
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ எண்ணிக்கை எதனையும் ஐ.நா. கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு நாற்பதாயிரத்துக்கும் இடைப்பட்டது என்று இலங்கையில் ஐ.நா.வின் சார்பாகப் பேசவல்ல முன்னாள் அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை ஐ.நா. அறிந்திருக்கவில்லை என்று ஜான் ஹோம்ஸ் கூறினார்.

"ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது உண்மை என்றாலும், கொல்லப்பட்டோரின் சரியான எண்ணிக்கையை ஐ.நா. அறிந்திருக்கவில்லை" என்றார் ஜான் ஹோம்ஸ்.

போரில் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கையில் சுயாதீன விசாரணை வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துவதாக அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், முன்பை காட்டிலும் முகாமில் இருப்போருக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


குருத்தணு அடிப்படையில் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும்: ஆராய்ச்சியாளர் நம்பிக்கை

நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை அடுத்த 10- 12 ஆண்டுகளில் கிடைத்துவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஸ்டெம் செல் எனப்படுகின்ற குருத்தணு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிதியங்களில் உலகிலேயே மிக அதிக பணபலம் மிக்க நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.

குருத்தணு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஹெச்.ஐ.வி. தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றும் பேராசிரியர் அலன் ட்ரவுன்சன் கூறுகிறார்.

மனிதக் கருவின் குறுத்தெலும்பைப் பயன்படுத்தி இன்சுலின் சுரக்கும் உயிரணுக்களை உருவாக்கி, அந்த செயற்கை உயிரணுக்களை ஜவ்வுப் பை ஒன்றுக்குள் வைத்து நோயாளியின் உடலுக்குள் பொருத்துகிற ஆராய்ச்சியில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுவருகிறது என்று பேராசிரியர் அலன் ட்ரவுன்சன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குருத்தணு மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் சுரக்கும் உயிரணுக்கள் எலிகளின் உடலில் பொருத்தப்பட்டபோது அவை பலன் தந்துள்ளதாக பரிசோதனைகள் காட்டுகின்றன. மனிதர்களுக்கு இவ்வகையில் சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவதாக அலன் ட்ரவுன்சன் கூறுகிறார்.

ஆனால் குருத்தணுவின் மருத்துவ பலன்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பாக பார்க்கின்சன்ஸ் போன்ற சில நோய்களை குருத்தணு அடிப்படையில் குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கைகள் வற்றிப்போய்விட்டன என்றும் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’