வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

இராணுவ நீதிமன்றில் அநீதி இழைக்கப்படின் சரத் மேன்முறையீடு செய்யலாம் : அரசாங்கம்


சட்டத்தை அமுல்படுத்தவிடாமல் நாடொன்று தடுக்குமாயின் அந்த நாட்டில் சட்டமிருக்காது. இது சட்டத்திற்கும் சுயாதிபத்தியத்திற்கும் முரணானதாகும். ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவ நீதிமன்றத்தில் தனக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அவர் மேன்முறையீடு செய்யலாம் என்று அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரும் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வங்கி பெட்டகங்களிலிருந்து மீட்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கள்ளப் பணத்தை நாட்டின் பொருளாதரத்திற்குள் இணைப்பது சட்டத்தின் பிரகாரம் அவதூறுக்குரிய தவறாகும். அதேபோன்று, இலங்கையில் ஒருவர் 2000 டொலர்களை மட்டுமே தம்வசம் வைத்திருக்கமுடியும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

"முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான வழங்கு தொடர்பில் மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். பொன்சேகாவின் மருமகனின் தயாரின் வங்கி பெட்டகங்கள் நான்கிலிருந்து 750 லட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள அரசாங்கத்தினால் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்தாமலும் இருக்கமுடியாது.

நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம், சட்டரீதியில் செயற்படவேண்டாம் என யாராவது யோசனைகளை முன்வைக்க முடியுமா? ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த பணம் வங்கி பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

நான்கு பெட்டகங்களில் பணம்

இந்தப் பணம் தன்னுடையதல்ல என்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காரியாலயத்திலிருந்தே கொண்டுவரப்பட்டதாகவும் ஜெனரலின் மகளே இந்தப் பணத்தைப் பெட்டகங்களில் வைக்குமாறு கோரியாதாக தனுனவின் தயார் தெரிவித்துள்ளார். பணத்தை வைப்பதற்கு பெரிய பெட்டகம் இன்மையினால் நான்கு பெட்டகங்களில் பணம் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெட்டகங்கள் தனுனவின் தாயாரது பெயரிலும் ஏனைய இரண்டு பெட்டகங்கள் அவருக்கு நெருங்கிய மிகவும் நம்பிக்கையான நண்பர்களின் பெயர்களிலும் இருந்தன. அந்த நான்கு பெட்டகங்களின் திறப்புகளும் தனுனவின் தாயாரான அசோகா திலகரத்னவிடமே இருந்தன.

குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரது வங்கி பெட்டகங்களைக் கடந்த 15 ஆம் திகதி திறந்த போது, அங்கு வங்கி அதிகாரிகள், தனுனவின் தாயாரான அசோகா திலகரத்ன, அவரின் சட்டத்தரணிகள் இருந்தனர். நான்கு பெட்டகங்களிலும் மூன்று நாடுகளின் நாணயங்கள் இருந்தன.

நான்கு பெட்டகளிலிருந்தும் 750 லட்சம் ரூபா மீட்கப்பட்டன. அதில் 5லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், 150 லட்சம் பவுன்களும் இலங்கை ரூபாக்களும் அடங்குகின்றன. இந்தச் செயற்பாடு, வெளிநாட்டு நாணயங்களை நிர்வகிக்கும் சட்டமூலத்தை முழுமையாக மீறுகின்ற செயற்பாடாகும்.

நகைகள், தங்கம் மற்றும் கோவைகளை வைத்திருக்க வேண்டிய வங்கிப் பெட்டங்களில் பணத்தை வைத்திருந்தமை ஏன்? அந்தப் பணத்தை நடைமுறை கணக்கிலோ அல்லது நிலையான கணக்கிலோ வைப்பிலிடாததேன்?

ஒருவர் 2000 டொலர் மட்டுமே....

சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் ஒருவர் 2000 டொலர்களை மட்டுமே வைத்திருக்கமுடியும். வெளிநாட்டில் தொழில் புரியும் ஒருவர் 15 ஆயிரம் டொலர்களுக்கு மேல் நாட்டுக்குள் கொண்டு வருவராயின் அவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் அறிவிக்கவேண்டும். அதுவும் அந்தப் பணத்தை 90 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் அதற்குப் பின்னர் இலங்கை பண பெறுமதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

கைப்பற்றப்பட்ட டொலர்களில் இலக்கங்கள் ஒழுங்கு முறையில் இருக்கின்றன. அந்த பணம் எங்கிருந்து, எந்த நிதியத்திலிருந்து வந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. கள்ள நோட்டாயின் அதனை நாட்டில் பொருளாதார சக்கரத்திற்குள் இணைக்க முயற்சிப்பது அவதூறு தவறாகும்.

இவைத்தொடர்பில் நீதிமன்றம் செல்லமுடியாது; விவாதிக்க முடியாது என்று யாராலும் கூறமுடியாது. 'ஐகோப்' பிரச்சினை மிகவும் அபாயகரமானவை. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளோம். சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதனைத் தவறென்று யாருமே கூறமுடியாது.

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்குப் பின்னரே விசாரணையை இராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

இது சட்டத்திற்கு முரணானதல்ல, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவ நீதிமன்றத்தில் தனக்கு அநீதி இழைக்கப்படுமாயின் அவர் மேன்முறையீடு செய்யலாம். இராணுவ நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கண்காணிக்கப்படுகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தை நாடலாம். சட்டத்தை அமுல்படுத்தவிடாமல் நாடொன்று தடுக்குமாயின், அந்த நாட்டில் சட்டமிருக்காது. இவை யாவும் சட்டத்திற்கும் சுயாதிபத்தியத்திற்கும் முரணானதாகும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’