
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றால் இராணுவ ஆட்சியொன்றை அமைக்கும் நடவடிக்கையில் அரசுத் தரப்பு ஈடுபட்டு வருகின்றது என ஜே.வி.பியின் நாடாளு மன்றக் குழுத் தலைவரும், எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பேச்சாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பாக அங்கு மேலும் கூறியவை வருமாறு:
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள் மாத்திரமே உள்ளன. இத்தேர்தலில் அரசின் தோல்வி நிச்சயமாகியுள்ளதால், அரசு எப்படியாயினும் வென்றுவிடவேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இப்போது தேர்தல் சட்ட விதிகளை மீறி மேடைகளில் ஏறி உரையாற்றுகின்றார். முழுக்க முழுக்க தேர்தல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியின் சகோதரராக இருக்கலாம். அவர் சகோதரர் என்றதாலேயே அவருக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி கிடைத்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
கோத்தபாய யாராக இருப்பினும், பதவி வழியில் அவர் ஓர் அரச அதிகாரி. அரச அதிகாரியொருவர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதமாகும். அதுவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஈடுபடுவது நிலைமையை மோசமாக்கும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை மாத்திரமல்ல, படை அதிகாரிகளையும் அரசு தேர்தல் நடவடிக்கைகளில் முற்றுமுழுதாக ஈடுபடுத்தி வருகிறது. மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் தோற்றால் இராணுவ ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில்தான் அரசு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
நாட்டைப் பாதுகாப்பது படையினரின் கடமை. அவர்களை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் படையினர் மீது இந்நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர்.
இந்நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக படையினர் கடும் தியாகங்களைச் செய்தனர். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம். அந்தத் தியாகம் வீண்போகும் வகையில் படையினர் செயற்படக்கூடாது.
அரசு, சரத் பொன்சேகாவைக் கொலை செய்தாவது வெற்றிபெறவேண்டும் என்ற முடிவில் இருக்கின்றது. அரசின் கூற்றுகள் அப்படித்தான் இருக்கின்றன. பொன்சேகா தானே குண்டை வெடிக்கச்செய்து, தனக்குக் காயமேற்படுத்தி, அனுதாப வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார் என்று விமல் வீரவன்ஸ கூறுகின்றார். இந்தக் கூற்றின்மூலம் அரசு பொன்சேகாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதோ என்ற நியாயமான சந்தேகம் எமக்கு எழுகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முதுகெலும்பு இருந்தால், இதுதொடர்பில் விமல் வீரவன்ஸவிடம் விசாரணை நடத்தவேண்டும். இதுதொடர்பில் விமலுக்கு எவ்வாறு தகவல் கிடைத்தது என்று குற்றப் புலனாய்வினர்கள் விமலின் ஊடாகக் கண்டுபிடிக்கவேண்டும்.
அரசு என்ன ஆட்டம் போட்டாலும் 27 ஆம் திகதி பொன்சேகா ஜனாதிபதியாகுவார் என்பது உறுதி. அதனை யாராலும் தடுக்க முடியாது. என்றார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’