வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 5 ஜனவரி, 2010

செய்தியறிக்கை


யேமன் வரைபடம்
யேமன் வரைபடம்

யேமனில் உள்ள தனது தூதரகத்தை பிரான்ஸும் மூடியுள்ளது

யேமன் நாட்டின் தலைநகரான சானாவில் இருக்கும் தனது தூதரகத்தை பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக மூடுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

அல் கயீதாவின் அச்சுறுத்தல்கள் என்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளளால் கூறுவது தொடர்பில், அங்குள்ள தமது தூதரகங்களை மேலும் ஒரு நாள் அந்த நாடுகள் மூடியுள்ளன.

அல் கயீதாவுக்கு தொடர்புடைய இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கையில் தற்போது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக யேமன் அரசு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட இந்த இருவரும் அமெரிக்க தூதரகத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலில் தொடர்புடையவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்கா செல்லும் விமானப் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்புச் சோதனைகள் அறிமுகம்

அமெரிக்காவுக்கு செல்லும் விமானப் பயணிகள் அனைவரையும் தீவிர பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்துவது என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அமெரிக்கா சென்று இறங்கவிருந்த விமானம் ஒன்றை சென்ற மாதம் வெடிவைத்துத் தகர்க்க முயன்று ஒரு பயணி தோல்வியடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுவதை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா கருதும் - பாகிஸ்தான், இரான், யேமன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானம் ஏறும் பயணிகள் அனைவரையும் விமான நிலைய ஊழியர்கள் முழுமையான உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை கூறுகிறது.

டிசம்பர் 25ஆம் தேதி நடந்த அந்த விமான தகர்ப்பு முயற்சிக்கு பின்னர் ஏற்கனவே தாங்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளை கடைப்பிடித்துவருவதாக பாகிஸ்தான் மற்றும் வேறுபல நாடுகளின் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.


சீனாவில் ஆற்றில் கொட்டிய டீஸல் வேகமாகப் பரவி வருகிறது

உடைந்த குழாயை ஊழியர்கள் பழுது பார்க்கின்றனர்
சீனாவில் எண்ணெய்க் குழாய்ப் பாதை உடைந்து ஆற்றில் சிந்திய டீசலினால் பரவிவரும் மாசு, சீனாவின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமான மஞ்சள் நதியை எட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெய் என்கிற ஒரு கிளையாற்றில் சிந்தியிருந்த டீஸல் மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றாலும், தற்போது மஞ்சள் நதியில் அமைந்துள்ள ஒரு அணைக்கட்டில் சோதிக்கப்பட்ட நீரில் எண்ணெய்ப் பிசிர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்பிராந்தியத்தில் உள்ள மூன்று மாகாணங்களை சேர்ந்த மக்களும் அங்குள்ள தொழிற்சாலைகளும் மஞ்சள் ஆற்றின் நீரை குடிக்கவோ புழங்கவோ வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்ற ஒரு பிராந்தியம் இது.


மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து 19 பேர் பலி

சில விமான நிலையங்களில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேனர் கருவிகளும் கொண்டுவரப்படவுள்ளன
இந்தியாவில் கொல்கத்தா நகருக்கு தென்மேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில், மிக அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 19 பேர் மூழ்கி இறந்துள்ளனர் என்று மேற்கு வங்க மாநில அதிகாரிகள் கூறுகிறார்கள்.

நீர்ச்சுழலில் சிக்கி அந்தப் படகு கவிழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்தப் படகில் பயணம் செய்த பத்து பேர் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து ஞாயிறன்று பின்னேரம் இடம்பெற்றுள்ளது.

ரூப்நாராயண் எனும் ஆற்றுக்கு அருகேயுள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலத்துக்கு சென்ற பலர் அங்கிருந்து திரும்பும் போது, 12 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய ஒரு மீன்பிடி படகை வாடகைக்கு அமர்த்தி அதில் 29 பேர் பயணம் செய்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த ஆற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இந்த விபத்தில் சிக்கியவர்களில் உயிருடன் தப்பியவர்களை கண்டுபிடிப்பதற்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது என்று போலீசார் கூறுகிறார்கள்.


உலகின் மிக உயரக் கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறப்பு

உலகிலேயே மிக உயரமானக் கட்டிடம் என்று கூறப்படுகின்ற புர்ஜ் துபாய் என்ற புதிய கட்டிடம் இன்று திறக்கப்படுகிறது.

எண்ணூறறு மீட்டர்களுக்கும் அதிகமானது என்று கருதப்படும் இக்கட்டிடத்தின் துல்லியமான உயரம் என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நூற்று அறுபது மாடிகளைக் கொண்டதாக இக்கட்டிடம் அமைந்திருக்கும்.

துபாய் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவந்த சமயத்தில் இக்கட்டிடம் கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எமிரேட்டுகளின் வெற்றிச் சின்னமாக இக்கட்டிடம் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, செல்வச் செழிப்பு மிக்க தனது அண்டை ஊரான அபுதாபியால் மீட்கப்படவேண்டிய நிலைக்கு துபாய் தள்ளப்பட்டுள்ள ஒரு தருணத்ததில் இக்கட்டிடம் திறக்கப்படுகிறது.

செய்தியரங்கம்
பிரச்சாரத்தில் சரத் பொன்சேகா
பிரச்சாரத்தில் சரத் பொன்சேகா

போரில் பங்கேற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு: சரத் பொன்சேகா வாக்குறுதி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், போரில் ஈடுபட்டதாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் மறு வாழ்வு அளிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்துள்ளார்.

திங்களன்று தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் சரத் பொன்சேகா வழங்கிய ஆவணத்தில் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

தான் ஆட்சிக்கு வந்தால், தகுந்த ஆதாரமில்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்து நபர்களையும் ஒரு மாதகாலத்துக்குள் விடுவிக்கப்போவதாக பொன்சேகா கூறியிருக்கிறார்.

இலங்கையில் தற்போது அமலில் இருக்கும் அவசர காலப் பிரகடனமும் அதன்கீழான அனைத்து விதிகளும் முடிவுக்கும் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மீன்பிடி தடை நீக்கம் 'முழுமை பெறவில்லை'

இலங்கையின் வட கடலில் மீன்பிடி தொழிலில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் மேலும் தளர்த்தப்பட்டதாகக் கடந்த வாரம் அதிகாரிகள் அறிவித்திருந்த போதிலும், இராணுவத்தின் பொறுப்பில் உள்ள பகுதிகளில் இன்னும் இந்த அறிவித்தலுக்கமைய தடைகள் நீக்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

முன்னர் மீன்பிடித் தொழிலில் இருந்து வந்த தடைகளில் அநேகமானவை நீக்கப்பட்டு உள்ளுர் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லக் கூடியதாக இருக்கின்ற போதிலும், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதற்காக வருகின்ற இந்திய மீனவர்களினால் வடபகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத் தலைவர் சின்னையா தவரட்னம் தெரிவிக்கின்றார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்ந்துள்ள பகுதிகளில் கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

கிளிநொச்சி பிரதேசத்தில் முன்பு செயலாற்றிவந்து பின்பு மூடப்பட்டிருந்த 5 பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் இவற்றை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

உக்கிர போர் நடைபெற்ற பகுதிகளில் பாடசாலைகள் மீண்டும் செயற்படத் தொடங்கிருப்பது குறித்து பெற்றோர், மாணவர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டிருக்கின்றார்கள்.

பூனகரி பிரதேசம் உட்பட, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும் பல பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் தற்போது தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கிளிநொச்சிக்கு வந்துசெல்வதற்காக இலவச பேருந்து சேவைகளும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.


ஹெச்.ஐ.வி./எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் அமெரிக்காவில் நுழைவதில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது

அதிபர் ஒபாமா
எய்ட்ஸ் நோய் வந்தவர்கள் ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்றுள்ளவர்கள் எவரும் அமெரிக்காவுக்குள் நுழைய கடந்த இருபது வருட காலமாக இருந்துவந்த குடிவரவுத் தடையை அமெரிக்க அரசாங்கம் விலக்கிக்கொண்டுள்ளது.

1980களின் கடைசி கட்டத்தில் எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களுக்கு அமெரிக்கா குடிவரவுத் தடை விதித்திருந்தது.

எய்ட்ஸ் நோய் உலகெங்கும் வேகமாகப் பரவுவதாக அச்சம் எழுந்திருந்த ஒரு காலகட்டம் அது.

சமூக ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக விளங்கிய தொழுநோய், காசநோய் போன்ற நோய்களின் பட்டியலில் எய்டஸையும் சேர்ப்பதென்பது மாதிரியான ஒரு முடிவாக அமெரிக்காவின் இந்த முடிவு அமைந்திருந்தது.

எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. உள்ளவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் லிபியா, சவுதியரேபியா உள்ளிட்ட 12 நாடுகளில் ஒன்றாக அமெரிக்காவும் நேற்றுவரை இருந்துவந்துள்ளது.

எய்ட்ஸுக்கு எதிரான போராட்டத்தில் உலகில் முக்கியப் பங்காற்றும் ஒரு நாடாக விளங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் இலட்சியத்துடன் இந்தப் பயணத் தடை பொருந்திப்போவதாக இல்லை என அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

இரண்டு வருடங்களுக்கு முறை நடந்துவருகின்ற எய்ட்ஸ் ஒழிப்பு உலக மாநாடு வரும் 2012 ஆண்டுதான் முதல் தடவையாக அமெரிக்காவில் நடக்கவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’