
பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் இன்று வெலிக்கடை சிறைச்சாலையின் முன்பாக ஆர்ப்பட்டமொன்றை நடத்தினர்.
மனித உரிமைகள் இல்லம், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் கண்காணிப்புக் குழு, ஐக்கிய சோஷலிசக் கட்சி போன்றவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
கைதிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி தமது உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களை விடுதலை செய்வதாகத் தெரிவித்து காலம் தாழ்த்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
அதேவேளை, தமது விடுதலை தொடர்பிலும், விசாரணைகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் கனகசபை தேவதாஸ்(வயது 53), இம்மாதம் முதலாம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவரது மனைவி எமக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறைச்சாலை உதவி ஆணையாளர் கெனத் பெர்னாண்டோவுடன் தொடர்பு கொள்ள முற்பட்டபோது, அவர் அங்கு இல்லையென எமக்குத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’