வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 ஜனவரி, 2010

அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை இன்று: பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரனின் இறுதிக்கிரியை இன்று தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் 4 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கல்லை லிந்துல நகரசபை மண்டபத்தில் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை முதல் வைக்கப்பட்டுள்ள அமைச்சரின் பூதவுடலுக்கு மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தலவாக்கல்லை லிந்துலை நகரசபை கட்டிடத்திற்கு வருகை தந்திருந்தார்.

இ.தொ.கா. பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், ஊவா மாகாண சபை உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார், ம.ம. முன்னணி அரசியல் அமைப்பாளர் எல். பாரதிதாசன் முதலானோர் ஜனாதிபதியை வரவேற்றார்கள்.

அமரர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திருமதி சாந்தினி சந்திரசேகரன் மற்றும் அமைச்சர் சந்திரசேகரனின் தாயார், பிள்ளைகள் எல்லோருக்கும் ஆறுதல் கூறினார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் நகரசபை மண்டபத்தின் முன்றிலில் குழுமியிருந்த மக்களைச் சந்திப்பதற்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியை அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற ஜனாதிபதியை சோகத்துக்கு மத்தியிலும் மகிழ்ச்சி பொங்க குழுமியிருந்த மக்கள் கையசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
பின்னர் ஜனாதிபதி ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு திரும்பினார்.

நேற்றைய அஞ்சலி நிகழ்வில் பங்கு கொண்டோர் நேற்று தலவாக்கல்லை லிந்துலை நகரசபை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அமரர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு பிரதியமைச்சர்கள் வீ. புத்திரசிகாமணி, நவீன் திஸாநாயக்க, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணம், இ.தே.தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம். நடராஜபிள்ளை உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மலையகத்தின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்ததோடு கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’