
விடுதலைகோரி நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதை அடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் 602ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை, வெலிக்கடை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 602 பேரே இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது பிணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம், எமக்கு விடுதலை அல்லது பிணை அனுமதி வேண்டி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அவை எவற்றையும் உரிய அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. உடலை, உயிரை வருத்தி விடுதலைக்காக நாங்கள் மேற்கொள்கின்ற இந்நடவடிக்கையின் நிமித்தமாக நிச்சயம் எங்கள் எல்லோருக்கும் விரைவில் விடுதலை கிடைக்கப்பெற அரசுடன் தமிழ் அமைச்சர்களாக உள்ள வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் போன்றவர்களும், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுபினர்களும் எங்களுக்கு துணைநின்று ஜனாதிபதியிடம் எமது விடுதலையை வலியுறுத்தி பேசி, எமக்கான விடுதலையை பெற்றுத்தரும்படி அனைவரையும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம். எனவே, கடந்த 5ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து தொடருகின்றோம். இந்த நிலையில் கௌரவ நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட நேரடியாக சிறைச்சாலைக்கு விஜயம் செய்து எமக்கு விடுதலை தொடர்பான வாக்குறுதிகளை வழங்கும் வரை எமக்கு இறப்பு நேர்ந்தாலும் இந்தப் போராட்டத்தைத் தொடருவோம்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’