வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 டிசம்பர், 2009

செய்தியறிக்கை


கோபன்ஹேகனில் அதிபர் ஒபாமா
கோபன்ஹேகனில் அதிபர் ஒபாமா

"உலக நாடுகளின் தலைவர்கள் இணைந்து செயற்படவேண்டும்" -அதிபர் ஒபாமா

காலநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டின் இறுதியில் வெளியாகவுள்ள முடிவுகள் குறித்த சந்தேகங்கள் நீடிக்கின்ற நிலையில், உலக நாடுகளின் பிரதிநிதிகள் உடன்படிக்கையொன்றை எட்டுவது தொடர்பில் இணைந்து செயலாற்றவேண்டுமென அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

சமரசங்கள் குறித்து சீன பிரதமர் வென்ஜியாபோவுடன் சுமார் ஒரு மணிநேரம் அதிபர் ஒபாமா கலந்துரையாடிய போதிலும், தமது கடப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புக்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

"அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கூடுதல் விட்டுக்கொடுப்புக்களை செய்யக் கட்டாயப்படுத்துவது நியாயமானதல்ல"- பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் லுய்ஸ் இனாசியோ லூலா ட சில்வா
பிரேசில் அதிபர் லுய்ஸ் இனாசியோ லூலா ட சில்வா

இதற்கிடையில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கூடுதல் விட்டுக்கொடுப்புக்களை செய்தாக வேண்டும் என்பது நியாயமானதல்லவென பிரேசில் அதிபர் லுய்ஸ் இனாசியோ லூலா ட சில்வா தெரிவித்தபோது அவரின் அந்தக் கருத்துக்கு பெரும் கரகோசத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் பெரும் காரசாரமான விவாதங்கள் இடம்பெறுவதாக தெரிவித்த பி.பி.சியின் சுற்றுச் சூழல் தொடர்பான செய்தியாளர், இவற்றின் மூலம் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் எவையும் வெளியாகுமா என்பதில் தெளிவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோபன்ஹேகன் மாநாடு குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அவுஸ்விச் நாஜி வதை முகாம் வாசகப் பலகை திருடு போனது

'வேலை உங்களுக்கு விமோசனம் பெற்றுத்தரும்' - வதைமுகாம் வாசகம்
'வேலை உங்களுக்கு விமோசனம் பெற்றுத்தரும்' - வதைமுகாம் வாசகம்

போலந்தின் அவுஸ்விச் என்ற இடத்திலுள்ள முன்னாள் நாஜி வதை முகாம் ஒன்றின் நுழைவு வாயிலில் மாட்டப்பட்டிருந்த வாசகப் பலகை திருடுபோயிருப்பது அருவருக்கத்தக்க ஒரு சம்பவம் என்று இஸ்ரேல் கண்டித்துள்ளது.

அர்பெய்ட் மஷ்ட் ஃப்ரெய் அதாவது 'வேலை உங்களுக்கு விமோசனம் பெற்றுத்தரும்' என்ற கண்டனத்துக்குப் பேர்போன வாசகம் இந்தப் பலகையில் அடங்கியிருந்தது.

யூதமக்களுக்கு எதிரான வெறுப்பும் வன்முறையும் அழிந்துவிடவில்லை என்பதை இந்த திருட்டு சம்பவம் காட்டுவதாக இஸ்ரேலிய துணைப் பிரதமர் சில்வன் ஷலோம் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் அவுஸ்விச் வதை முகாமில் பெரும்பாலும் யூதர்களாக கொல்லப்பட்டிருந்த பத்துலட்சத்துக்கும் அதிகமானோர் பற்றிய நினைவுகளைத் தூண்டும் ஹோலோகாஸ்ட் யூத இன அழிப்பு சின்னமாக இந்த வாசகப் பலகை இருந்துவந்தது.


முன்னாள் கமரூச் ஆட்சியாளர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு

கமரூச் படுகொலைகளை நினைவு படுத்தும் காட்சியகம்
கமரூச் படுகொலைகள் நினைவு காட்சியகம்
கமரூச் அரசாங்கத்தின் முன்னாள் தலைவரான கெயு சம்பன் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, கம்போடியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான போர்க்குற்ற நீதிமன்றத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் கூறியிருக்கிறார்.

கம்போடியாவின் வியட்நாமிய இனத்தவர்கள் மற்றும் ஷம் முஸ்லிம் சிறுபான்மையினர் ஆகியோரை கொலை செய்ததாக 78 வயதான இவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

1970 களில் கமரூச்சின் ஆட்சிக்காலத்தில் 20 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கெயு சம்பன் மீது ஏற்கனவே, போர் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.

செய்தியரங்கம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் - பிரதான வேட்பாளர்களின் பிரசாரங்கள் சூடு பிடிக்கின்றன

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்த மறுதினமே அந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்ற ஜெனரல் சரத் பொன்சேகாவும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமது பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

22 பேர் இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், இந்த இரு முக்கிய வேடபாளர்களும் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள இன மக்களின் தேசிய வாத உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலேயே தமது பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா
இலங்கையில் சிங்கள மக்களின் புனித நகரங்கள் இரண்டில் தமது பிரச்சார நடவடிக்கைகளை மத குருமாரின் ஆசிர்வாதங்கள் மற்றும் பெரும் கூட்டங்களுடன் இருவரும் ஆரம்பித்துள்ளனர்.

புத்தபெருமானின் புனித தந்தம் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள மத்திய மலையகத்தின் கண்டி நகரில் ஜெனரல் பொன்சேகாவின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கண்டி நகர மையமே அவரது கூட்டத்துக்காக நிரம்பி வழிந்தது. கூட்டத்தை சரியாக பார்ப்பதற்காக கூரைகளிலும், மரங்களின் கிளைகளிலும் மக்கள் ஏறி நின்றனர். பலத்த மழைக்கு மத்தியிலும் அவர்கள் அவ்வாறு கூடிநின்றனர்.

சிங்கள பௌத்தர்களின் மற்றுமொரு புனித நகரான அநுராததபுரத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. பொன்சேகாவினதைப் போன்ற பெரிய கூட்டம் அங்கும் திரண்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய கசாப் முன்னைய குற்ற ஒப்புதலை வாபஸ் பெற்றுக் கொண்டார்

தாக்குதலின் போது கசாப்
தாக்குதலின் போது கசாப்
கடந்த வருடம் மும்பாய் நகரின் மீதான தாக்குதலை நடத்தியவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் ஒரேயொரு தாக்குதலாளியான பாகிஸ்தானைச் சேர்ந்த கசாப், தான் முன்னர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

கொலை மற்றும் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகியவை உட்பட முகமட் அஜ்மல் கசாப் மீது 86 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

தன்னை பொலிஸார் பலதடவவைகள் தாக்கி குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட பலவந்தப்படுத்தியதாக அவர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார்.

160க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான மும்பாய் தாக்குதலை நடத்திய 10 பேரில் கசாப்பும் ஒருவர் என்று இந்திய அரச சட்டத்தரணிகள் கூறுகிறார்கள்.


"இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரிலிருந்து 30 ஆயிரம் படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்" - இந்திய பாதுகாப்பு அமைச்சர்

காஷ்மீர் எல்லை வரைபடம்
காஷ்மீர் எல்லை வரைபடம்
இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் கடந்த இரண்டு வருட காலமாக ஆயுததாரிகளின் தாக்குதல்கள் குறைந்துள்ளதால் அங்கிருந்து சுமார் முப்பதாயிரம் படையினர் மீள அழைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவிக்கின்றார்.

எதிர்காலத்தில் அந்தப் பிராந்தியத்தில் மேலும் படைக்குறைப்பை மேற்கொள்ள அராசாங்கம் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் இந்திய மற்றும் பாகிஸ்தான் நிர்வாகங்களுக்குட்பட்ட காஷ்மீரின் எல்லைகளைப் பிரிக்கும் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்​கை குறைக்கப்படவில்லையென இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

படையினர் மீள அழைக்கப்படவுள்ளமை குறித்து சுயாதீனமான உறுதிப்படுத்தல் ஒன்று அவசியம் என தெரிவித்துள்ள இந்தியக் கட்டுப்பாட்டுக் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள், பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்த தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’