
வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்து சபையின் ஊழியர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கென ஊழியர் சங்கத்தின் அலுவலகமொன்று வவுனியா பஸ் டிப்போவில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கம் என்ற பெயரில் அதற்கான புதிய அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.
நாட்டின் போர்ச் சூழல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதிகரித்துள்ள போக்குவரத்து தேவையினை ஈடு செய்யும் வகையில் போதிய பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட வவுனியா சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து கணிசமான பஸ்கள் இதற்கென சேவையில் ஈடுபடுத்தப்படுவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு தேவையான பாதைகளுக்கு பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாக குறித்த சாலையின் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதனைவிட பஸ் சாரதிகள் நடத்துனர்கள் திருத்துனர்களுக்குமான ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் சாலையில் தரித்து நிற்கும் பஸ் வண்டிகளைக் கூட சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாகவும் ஊழியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா டிப்போ எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒரளவுக்காவது தீர்த்து வைக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் இப்பிரச்சினையை முன்வைத்து கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அவர்கள் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’