
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஆளணிகள் சொத்துகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 45 நிமிட நேரம் வழங்கப்படும். அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி எமது திணைக்களத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்கள் சமூகம் தர வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம்.
தமது உருவப்படங்களை காட்சிப்படுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன சட்டத்துக்கு முரணானவை. எனவே அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
பிரசாரங்களின் போது ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக மற்றுமொரு வேட்பாளர் பேசுவதையும் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். தேர்தல் தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அத்தொகுதிக்கான முடிவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன். ஒருவரை பலவந்தமாக தமக்கு வாக்களிக்குமாறு கோருவதும் தவறான செயலாகும்.
தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இன்றைய தினம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரது மனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தார்.
எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா ஓர் அமெரிக்கப் பிரஜை என்றும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாதென்றும் சட்டத்தரணி ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவுமில்லை என அவரது ஆட்சேபனை கடிதத்தை ஆணையாளர் நிரகரித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’