வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 டிசம்பர், 2009

செய்தியறிக்கை


சம்பவ இடத்தின் அருகில் பதற்றத்தில் மக்கள்
சம்பவ இடத்தின் அருகில் பதற்றத்தில் மக்கள்

கராச்சி தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஷியா முஸ்லீம்களின் மத ஊர்வலத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இத்தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, வன்முறையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் சிலர், பத்திரிக்கையாளர்களை தாக்கியுள்ளனர். சிலர் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்களையும், சிலர் ஆம்புலன்ஸ் வண்டிப் பணியாளர்களைத் தாக்கியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

அடுத்த இரு தினங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மத ஊர்வலங்களை ரத்து செய்யுமாறு பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ஷியா சமூகத்தினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷியா பிரிவினர் அவர்களின் முக்கிய மத பண்டிகையான ஆஷூராவை அனுசரித்து வருகின்றன.


மேற்குலகப் படையினரின் தாக்குதலில் ஆப்கானியப் பொதுமக்கள் 'கொல்லப்பட்டுள்ளனர்'.

குனார் பகுதியைக் காட்டும் வரைபடம்
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் சர்வதேச படையினரால் சனிக்கிழமையன்று, நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பெரும்பாலும் பள்ளிக்கூடச் சிறார்கள் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் எல்லையில் உள்ள குனார் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தனது சோகத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தத் தாக்குதல் நடந்த இடத்தை சென்றடைவது மிகவும் சிரமம் என்றும், அங்கு தலிபான்கள் செயற்படுவது வழக்கம் என்றும் பிறிதொரு செய்திச் சேவை குனார் ஆளுனரை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்கானில் செயற்படும் நேட்டோ படையினரிடம் இருந்து எந்தவிதமான கருத்தும் இதுவரை வரவில்லை.


கிழக்கு ஜெரூசலெத்தில் கூடுதல் யூதக் குடியிருப்புகள்: இஸ்ரேல்

கிழக்கு ஜெரூசலெம்
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலெத்தில் யூதர்களுக்கான 700 புதிய வீடுகளை அமைக்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்த நகர்வு குறித்து அமெரிக்காவும், பாலத்தீனர்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பாலத்தீனர்களுக்கும் இரேலுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை இந்த நடவடிக்கை பாதிக்கும் என்று தனது பெயரை வெளியிடாத அமெரிக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்குக்கரையில் உள்ள குடியேற்றங்களில் வீடுகளை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்துவதாக இஸ்ரேல் அண்மையில் அறிவித்திருந்தது.

ஆனால், கிழக்கு ஜெரூசலெத்தை தமது தலைநகரின் ஒரு பகுதியாக அது பார்க்கிறது.

இருந்தபோதிலும், நகரின் கிழக்குப் பகுதியை சர்வதேசச் சட்டம் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது.


ரஷ்யாவின் தூரக் கிழக்கில் புதிய எண்ணெய் ஏற்றுமதி முனையம்

விலாடிமர் புடின்
ரஷ்யாவில் ஓர் புதிய பெட்ரோல் எண்ணெய் ஏற்றுமதி முனையத்தை அந்நாட்டின் பிரதமர் விலாடிமர் புடின் துவக்கிவைத்துள்ளார். ஆசியாவுக்கான ரஷ்யாவின் பெட்ரோலிய ஏற்றுமதியை இது அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசிஃபிக் கடலோரம் அமைந்துள்ள கோஸ்மினோ துறைமுகத்தில், நடைபெற்ற விழாவில் விலாடிமர் புடின் ஒரு பட்டனை தட்டியதும் எண்ணெய்ல் கப்பல் ஒன்றில் முதலில் எண்ணை நிரப்பும் பணி துவங்கியது.

கிழக்கு சைபீரியாவில் உள்ள எண்ணை வயல்களை இணைத்து அதை பசிஃபிக் கடலுக்கு கொண்டு செல்லும் குழாய் பாதை கட்டமைப்புகளை உருவாக்கும் பெரியதோர் திட்டத்தின் ஒரு படிதான் இது.

இத்திட்டத்தின் படி முதல் இரண்டாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் தூரத்துக்கான குழாய்ப் பாதை ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டன.

இதன் இறுதிக்கட்டம் பூர்த்தியாகும் வரை ரயில் மூலம் எண்ணெய் துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும்.

செய்தியரங்கம்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக் கொடி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக் கொடி

இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி முடிவு

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னதாகவே அக்கூட்டமைப்பில் ஓர் அங்கமாக உள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி தனது இந்த முடிவை எடுத்துள்ளது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் விசேட பொதுக் குழுக் கூட்டம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

சுமார் எழுபத்தைந்து பேர் வரை அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விளக்கங்கள், வியாக்கியானங்களை விவரிக்கும் அறிக்கை ஒன்றைக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு வாசித்தார்.

அந்த அறிக்கை பிரேரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவு தொடர்பில் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாபிள்ளை விநாயகமூர்த்தியின் செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


டாக்டர் சிவபாலனை நீதிமன்றம் விடுவித்துள்ளது

யுத்த காலத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கிவந்தவர் டாக்டர்.சிவபாலன்
இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் போரின் இறுதி வாரங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயல்பட்டுவந்த ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்களில் ஒருவரான சிவபாலன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வன்னியில் மருத்துவ சேவை வழங்கிவந்த மருத்துவர்கள் அங்கு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை, அரசின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு கொடுத்தது தொடர்பாக இவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பிறகு கைதுசெய்யப்பட்டனர்.

பிறகு கொழும்பில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தாம் இந்த விபரங்களை அளித்ததாக இந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு மருத்துவர்கள், அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஐந்தாவது டாக்டரான சிவபாலன், முன்பு அரச சேவையில் இருந்திருந்தாலும், பிறகு அவர் புலிகளுக்காக வேலை பார்த்தாக அரசு முன்பு குற்றம்சாட்டியிருந்தது.

இவை குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


பென்னாகரம் இடைத் தேர்தல் ஒத்திவைப்பு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 20ம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்படும் என முன்னர் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், பொங்கல் நேரத்தில் இடைத் தேர்தலை நடத்த பாமக, அதிமுக, மதிமுக, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

நேற்று தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூட்டியிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவும், காங்கிரசும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேதியிலேயே தேர்தலை நடத்தவேண்டுமென்று கூறின.

ஆனால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக இன்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இதனிடையே நேற்றிரவு போலீசாருடன் நடந்த மோதலையொட்டி முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


விளையாட்டரங்கம் - ஆடுகளத்தில் புல் சீராக இல்லாததே தில்லி ஒரு-நாள் கிரிக்கெட் போட்டி ரத்து ஆகக் காரணம் என்கிறார் ஆடுகளம் தயாரிப்பு நிபுணர்

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே டில்லியில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இடையிலேயே கைவிடப்பட்டதற்கு காரணம் ஆடுகளத்தில் புல் சீராக இல்லாததே என்று தமிழோசையிடம் தெரிவித்தார் சென்னை சிதம்பரம் விளையாட்டு அரங்கில் ஆடுகளத்தை பல ஆண்டுகளாக தயாரித்த பார்த்தசாரதி அவர்கள்.

ஆடுகளத்தில் புற்திட்டுகள் சீராக இல்லாததாலேயே பந்து தாறுமாறாக எகிறிச் சென்றது என்று கருத்து வெளியிடும் அவர், பொதுவாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு, முற்றிலும் புற்கள் இல்லாத ஆடுகளமே தயாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் புற்கள் இல்லாத ஆடுகளமே மட்டை வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறும் பார்த்தசாரதி அவர்கள், டில்லி மைதானத்தில் இருந்த ஆடுகளத்தை சரியாக தயாரிக்காமல் விட்டது ஒரு அவமானமான விடயம் என்றும் தெரிவிக்கிறார்.

இந்தச் சம்பவம் இந்தியாவில் இருக்கும் ஆடுகளங்கள் குறித்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளிடம் கவலையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

இதனிடையே ஆடுகளம் தொடர்பான குழுவை இந்திய கிரிக்கெட் வாரியம் கலைத்துள்ளது. டில்லி சம்பவம் தொடர்பாக ஒரு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

டில்லிப் போட்டி இடையே கைவிடப்பட்டது ஒரு தேசிய தர்மசங்கடம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

பார்த்தசாரதி அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’