வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 டிசம்பர், 2009

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மனமாற்றங்கள் உண்மையாயின் அவை காலங்கடந்ததவையாக இருப்பினும் மனந்திறந்து வரவேற்கின்றோம்!


தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்கால செயற்பாடுகள் சில அவர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் இந்த மனமாற்றம் என்பது உண்மையானதும் நேர்மையானதுமாக இருப்பின் அவை காலங்கடந்தவையாக இருப்பினும் அதை மனந்திறந்து வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய ஈ.பி.டி.பி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் எமது மக்களின் சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்பது என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சாதனை என்றும் அதை எந்த வழிமுறையில் அவர்கள் பெற்றிருந்தாலும் தமிழ் பேசும் மக்களை இருண்ட யுகத்தினுள் இருந்து மீட்பதற்காக அதைப் பயன்படுத்தியிருந்தால் தாம் மன மகிழ்ச்சியோடு ஏற்றிருப்போம் என்றும் ஆனாலும் அந்த அரசியல் பலத்தை அவர்கள் சரிவரப்பயன்படுத்தியிருக்கவில்லை என்ற மனத்துயரங்களினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தாம் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பான தீர்விற்காக கனிந்து வந்திருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி நடை முறை சாத்தியமான வழிமுறைகள் குறித்தும்
எமது மக்களை அவலங்களில் இருந்து மீட்டெடுக்க முடிந்த அரசியல் தந்திரோபாய திட்டங்கள் குறித்தும் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் ஆனாலும் அவர்களில் பலரும் அந்த நியாயமான வழிமுறைகளை ஏற்று வந்திருக்கவில்லை என்றும் இன்று அவர்கள் மனந்திருந்தி வந்திருப்பது போல் அன்றே அவ்வாறு வந்திருந்தால் எமது மக்களின் அவலங்களையும் அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மைக் காலமாக அரசாங்கத்துடன் சுமுகமாக பேசி வருவதோடு தமது கட்சியாகிய ஈ.பி.டி.பி வலியுறுத்தி வரும் நடை முறைச்சாத்தியமான வழிமுறையை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களில் சிலர் மனந்திறந்து கருத்து தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது என்றும் ஈ.பி.டி.பி யின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த கால அனைத்து தவறுகளையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வரும் பட்சத்தில் தாம் அவர்களோடு தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக மட்டும் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைய முடியாததும் ஆபத்து நிறைந்ததுமான வெறும் சுயலாபங்களுக்கான எதிர்ப்பு அரசியலை மட்டும் மையப்படுத்தும் மாயமானை பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் எமது அரசியல் இலக்கை அடைய முடிந்த வழிமுறை நோக்கி எதிர்க்க வேண்டியதை எதிர்க்கவும் ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கவும் எண்ணி அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வெளிப்படையாக வருவார்களேயானால் அந்த நிகழ்வு எமது மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் நிகழ்வாகும் என்றும் தமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசியல் தூரநோக்கோடு முன்வைத்திருந்த வழிமுறை நோக்கி காலம் கடந்தாவது சகலரும் வர நினைப்பது வரவேற்கத்தக்கது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய ஈ.பி.டி.பி விடுத்திருக்கும் ஊடகங்களுக்கான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’