
ஹரியாணா மாநிலம் மனேசரில் நடைபெற்ற தேசிய சிறப்பு அதிரடிப் படை வெள்ளி விழாவில், சிறப்பாகப் பணிபுரிந்த அதிரடிப் படை வீரரைப் பாராட்டி, விருது வழங்குகிறார்
மனேசர், அக். 16: பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க சிறப்பு அதிரடிப் படைக்கு (என்எஸ்ஜி) நவீன ஆயுதங்கள் வாங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
சிறப்பு அதிரடிப் படையின் வெள்ளி விழா ஹரியாணா மாநிலம் மனேசரில் நடைபெற்றது. இதில் சிதம்பரம் பங்கேற்று படை வீரர்களிடையே பேசினார். அப்போது இந்தத் தகவலைக் கூறினார்.
நவீன ஆயுதங்கள் மற்றும் தேர்ந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உபகரணங்களைக் கொண்டதாக வரும் நாள்களில் தேசிய அதிரடிப் படை திகழும் என்று அவர் கூறினார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் அதிரடிப் படை வீரர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்ததை இந்த நாடு ஒருபோதும் மறந்துவிடாது.
கடந்த நவம்பரில் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த நட்சத்திர ஹோட்டல்களை மீட்க தில்லியிலிருந்து அதிரடிப் படை வரவழைக்கப்பட்டது. அதிரடிப் படையினர் தீரமாகப் போரிட்டு பயங்கரவாதிகளை முறியடித்தனர்.
மும்பைக்கு தில்லியில் இருந்து அதிரடிப் படை வரவழைக்கப்பட்டதால் சற்று காலதாமதம் ஆனதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிரடிப் படை பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் பயங்கரவாதிகள் நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதால் அவர்களை முறியடிப்பதற்காக அதிரடிப் படை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்படும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
கதவை உடைக்கும் கருவி: மும்பை தாக்குதல் அனுபவத்திலிருந்து கதவை உடைக்கும் வெடிகருவிகள் தேவை என்பதை உணர்ந்துள்ளோம். அதுபோல் இரவு நேரத்தில் செயல்படும் வகையில் நவீன தொழில்நுட்பக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்று விழாவில் பங்கேற்ற தேசிய அதிரடிப் படை இயக்குநர் ஜெனரல் என்.பி.எஸ். அவ்லாக் கூறினார்.
4 இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அதிரடிப் படை மையங்களில் மும்பை, ஹைதராபாத் மையங்கள் நவம்பர் 30- தேதி முதல் செயல்படும். சென்னை, கோல்கத்தா மையங்கள் டிசம்பர் 15 முதல் செயல்படத் தொடங்கும் என்றார் அவர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’