
கனடாவின் மேற்கு கரையோரப்பகுதியில் கப்பல் ஒன்றுடன் கடந்தவார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகளென சந்தேகிக்கப்படும் குழுவினர் கப்பலுடன் விக்டோரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பஸ்களில் மேல்விசாரணைக்காக வன்கூவர் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை போட்றென்ஃபுஸ் துறைமுகத்திற்கு அருகில் வைத்து ஓசன் லேடி என்ற இந்த கப்பலை கனடிய பொலிஸார் சோதித்தபோது அதற்குள் 76 ஆண்கள் இருந்துள்ளனர். கனடிய எல்லைச்சேவை நிறுவன அதிகாரிகளும் பொலிஸாரும் இக்குழுவினரைப் பற்றியோ அவர்கள் எவ்வாறு கனடா கடற்பரப்புக்குள் காணப்பட்ட கப்பலுக்குள் வந்தார்கள் என்பது பற்றியோ அவர்களது சொந்த நாடு எது என்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து, சட்டவிரோதமாக ஆட்கள் கனடாவுக்கு கொண்டு வரப்படுகிறார்கள் என்றும் அவர்கள் அகதிஅந்தஸ்து கோர இருக்கும் இலங்கைத் தமிழர்களாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இவற்றில் எதையும் உறுதிப்படுத்தவில்லை. வான்கூவரில் உள்ள விசாரணைப்பிரிவு ஒன்றுக்கு இவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்த எல்லைச் சேவைகள் முகவர்நிலைய அதிகாரி றோப் ஜோன்ஸன், இவர்களை கனடாவிற்குள் அனுமதிப்பது பற்றி தொடர்ந்து விசாரணை நசடத்தப்படும் என்றும் ஞாயிற்றக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இவர்களது உடனடித் தேவைகள் பற்றியும் சுகாதாரநிலை பற்றியும் விரைந்து ஆராயப்படுவதாக தெரிவித்த ஜோன்ஸன் கனடிய சட்டதிட்டங்களுக்கு அமைய அவர்கள் உன்னிப்பாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஓசன் லேடி கப்பலை கனடிய கடற்படையினர் கண்டதும் ஆயுதமேந்திய கனடிய பொலிஸார் கப்பலுக்குள்ஏறி அதனை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். பொலிஸார் பிடித்த படங்களில் கப்பலுக்குள் இருந்தவர்கள் சிவில்உடைகளில் காணப்பட்;டனர். சிலர் சேர்ட்டுக்கள் அணிந்திருக்கவில்லை. அவர்கள் மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரை பார்த்து கைகளை அசைத்தமை படங்களில் தெரிந்தது. நல்ல தேகாரேக்கியத்துடன் காணப்பட்டார்கள். கப்பல் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து நம்பப்படுவதாக கனடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் வேன்லோன் தெரிவித்தபோதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. கனடிய தமிழ் காங்கிரஸை சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை அளித்த பேட்டி ஒன்றில், ஊடகங்களில் வெளியான படங்களில் கப்பல் அகதிகளை பார்த்தபோது அவர்கள் தமிழர்களாக இருக்கலாமென தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். அவர்களது முகங்களையும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் பார்த்தபோது அவை தமிழர்கள் அணியும் பைஜாமா ஆடைகள்போலத் தெரிவதாக அவர் கூறியுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’