
சிங்கள அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், இலங்கை பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்தை விடுவிக்க கோரியும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று சென்னையில் இலங்கை துணைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைசெயலாளர் சி.மகேந்திரன், விஜய டி.இராஜேந்தர், ரவீந்திரதாஸ், சீ.ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ் பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசைநாயகத்தை பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டித்து சிறையில் அடைத்துள்ள இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்றுபோது காவல் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் மீது போர் தொடுத்த இலங்கை அரசு, முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு உணவு கூட கொடுக்காமல், உணவையே போர் கருவியாக்கி தமிழர்களை ஒடுக்குகிறது என்று பத்திரிக்கையாளர் திஸ்ஸநாயகம் எழுதினார். இதற்காக அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து 20 ஆண்டுக் கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரவீந்திர தாஸ் தலைமையில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன், துணைச் செயலர் சி.மகேந்திரன், இலட்சியத் திமுக தலைவர் டி. இராஜேந்தர், சி.ஐ.டி.யு. பொதுச் செயலர் செளந்தரராசன், பத்திரிக்கையாளர்கள் பாஸ்கரன், அய்யநாதன் ஆகியோர் சிறிலங்க அரசின் மனித உரிமை மீறல்களையும், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அது மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் கண்டித்துப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் ராஜபக்ச அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிறிலங்கத் துணைத் தூதரகத்தை நோக்கி முன்னேறினர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ராஜபக்ச அரசைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய பொலிஸார், பத்திரிகையாளர்களை பொலிஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்று தேனாம்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைத்தனர்.. டி. இராஜேந்தர், பாஸ்கரன், பாஸ்கரதாஸ் ஆகியோர் உட்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’