வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 செப்டம்பர், 2009

முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்க கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்


இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களை அவர்களின் விருப்பத்தின்பேரில் தமது சொந்த இடங்களில் மீளகுடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வென்றெடுப்பதற்கான இயக்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், சோஷலிசக் கட்சி, இடதுசாரி முன்னணி உட்பட பல்வேறு அரசியல் மற்றும் அரச சார்பற்ற இயக்கங்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இருபது வருடகால கடூழிய சிறைத்தண்டணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மூத்த ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியையும் அரசையும் வலியுறுத்தியும் இங்கு எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குமாறும், நாட்டின் அவசரகால நிலையை போக்குமாறும், பொதுமக்கள் கடத்தல் மற்றும் காணாமல்போதல்களை தடுத்து நிறுத்துமாறும் இந்த ஆர்ப்பாட்ட போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’