வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
JVP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JVP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜனவரி, 2010

'லங்கா" செய்தித்தாள் காரியாலயம் சீல் வைப்பு


ஜேவிபியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'லங்கா" செய்தித்தாளின் நுகேகொட பிரதேசத்தில் உள்ள காரியாலயம் இன்று குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த சீல் வைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஐ எம் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பான வழக்கு விசாரணைகளின் பொருட்டு எதிர்வரும் புதன்கிழமை கங்கொடவில நீதிமன்றுக்கு வருகை தருமாறு தமக்கு இரகசிய பொலிஸார் பணித்துள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார்

வியாழன், 10 டிசம்பர், 2009

அரச சொத்துகள் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதை தேர்தல் ஆணையாளரிடம் முறையிடுவோம் - ஜே.வி.பி


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அரச சொத்துகளையும் ஆளணிகளையும் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் தேர்தல் ஆணையாளரை சந்தித்து இவ்விடயம் குறித்து முறையிடப்போவதாகவும் அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

"தேர்தலில் எந்தவொரு பிரதிநிதி போட்டியிட்டாலும் அவரது சுதந்திரமான கருத்துகளை வெளியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். நமது நாட்டைப் பொருத்தவரையில் அரச ஊடகங்கள் உட்பட பெரும்பாலான அரச துறை ஊழியர்களும் சொத்துக்களும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

மாத்தறைப் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய வாகனங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருகின்றன. இதனை ஆதாரத்துடன் நாங்கள் இங்கு தருகிறோம். குறிப்பிட்ட திகதிதகளில் எத்தனை சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும், எந்த விதத்தில் அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்பவற்றை விளக்கமாக எழுதி மாத்தறை பிரதேச சபைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு அநேகமான பகுதிகளில் அரச சொத்துக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

தேர்தல் ஆணையாளருக்கு பாராளுமன்றம் வழங்கியுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு ஏற்புடைய சூழலை பெற்றுத்தருமாறு நாம் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

புதன், 9 டிசம்பர், 2009

பொன்சேகாவின் வெற்றி கடவுளாலும் மக்களாலும் முடிவு செய்யப்பட்ட விடயம்-ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச கூறுகிறார்


சந்தர்ப்பவாத அரசியலுக்காக கட்சி மாறும் அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் என்று அழைக்க தகுதியற்றவர்கள். நல்லா ட்சி, ஜனநாயகம், தேசிய ஒற்றுமை போன்றவற்றுக்கு எதிரான சூத்திரதாரிகளை பொது மக்கள் இனங்கண்டுக் கொள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பமாக அமையும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

யார் கட்சி மாறினாலும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றி இந்த நாட்டு பொது மக்களாலும் ஆண்டவனாலும் முடிவுச் செய்யப்பட்ட விடயம் எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தெளிவுப்படுத்துகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவர் தொடர்ந்தும் கூறுகையில்,

தற்போது இலங்கை அரசியலில் கட்சி தாவும் நிகழ்வுகள் சூடுபிடித்துள்ளன. எஸ்.பி. திசாநாயக்க ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்திற்கு தாவியுள்ளமை ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து அரசியல் சுயநலத்திற்காக கட்சிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகளை பொது மக்கள் இனங்கண்டு எதிர்வரும் தேர்தல்களில் பாடம் புகட்ட வேண்டும்.

கொள்கை இல்லாத அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தேசிய அரசியலின் சீரழிவையே வெளிக்காட்டுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும். எதிரணியில் ஒன்று சேர்ந்துள்ள அரசியல் கட்சிகளின் நோக்கங்கள் வேறு. ஆனால் இலக்கு ஒன்று என்பதை பொது மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். கட்சி மாறுவதால் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியினை தடுத்து விட முடியாது. இனி வரும் தேர்தல்களில் அரசாங்கத்தின் அடக்குமுறைகள் செல்லுபடியாகாது. தேர்தல் சட்டங்கள் மீறப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான போராட்டங்களை ஜே.வி.பி. முன்னெடுக்கும் என்றார்.

திங்கள், 7 டிசம்பர், 2009

ஈ.பி.டி.பி,யின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா?- ஜே.வி.பி. கேள்வி; தெளிவுபடுத்துமாறும் கோரிக்கை


அதிகாரத்தின் மேலுள்ள பேராசையினாலும் ஜனாதிபதிப் பதவிக்காகவும் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ வீரர்கள் பெற்றுக்கொண்ட வெற்றியினை அரசாங்கம் காட்டிக்கொடுக்க முனைகின்றது என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒற்றுமையில்லை எனக்கூறும் அரசாங்கத்தின் கூட்டமைப்பில் பிணக்குகளே காணப்படுகின்ன. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈ.பி.டி.பி. விதித்துள்ள நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா? இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியினை அரசாங்கம் தற்போதுதானாகவே முன் வந்து ஏற்றுக்கொண்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவரல்லர். பல்வேறு நோக்கங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தற்போதைய பிரச்சினையாகவும், நாட்டுக்கு சவாலாகவும் காணப்படும் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்தல் மற்றும் ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்ற காரணிகளுக்காக எதிரணிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

எதிரணியின் பொது வேட்பாளர், பதவிக்கு வந்தவுடன் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுøறப்படுதி சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பார். பின்பு பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வார். இந்த தேர்தலில் குறிப்பாக அரச ஊடகங்கள் பக்கச் சார்பற்ற முறையில் செயற்படும். பொலிஸாரும் அவ்வாறே செயற்படுவர்.

இதன் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கமே நாட்டைக்கொண்டு நடத்துவதோடு, நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா பதவி வகிப்பார்.

எதிரணியின் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களைச் செய்துவருகின்றது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறும் அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் இடையில் கொள்கை ரீதியாக ஒற்றுமை உள்ளதா?

ஈ.பி.டி.பி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பத்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அந்த பத்து நிபந்தனைகளில் முதலாவதாக 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து அதற்கு அப்பால் சென்று தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பத்தாவதாக தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் சுயாட்சிக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா என்பதனை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஜனாதிபதிப் பதவி மீதுள்ள பேராசையினால் தேசிய பாதுகாப்பு, இன ஒற்றுøம, இறையாண்மை போன்றவற்றுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது.

செவ்வாய், 24 நவம்பர், 2009

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவோம் : அனுரகுமார திசாநாயக்க


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து இறக்குவது மட்டுமல்லாது, அவரை வீட்டுக்கு அனுப்பிவைப்பதே ஜே.வி. பி.யின் குறிக்கோளாகும். இதனை மையமாகக் கொண்டே பொது வேட்பாளர் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. மாறாக, கூட்டுக் கட்சிப் பேச்சு என்பதற்கு இடமில்லை" என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

"எதிர்க்கட்சிகளின் ராஜதந்திர அரசியல் நகர்வுகள் அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. பீதியில் குழம்பிப் போயிருக்கும் ஆளும் தரப்பினர் வன்முறைகளினூடாக எதிர்க்கட்சிகளை நசுக்கிவிடலாம் என்று எண்ணுகின்றன. அரசாங்கத்தின் பகற்கனவு பலிக்கப் போவதில்லை" என்றும் அவர் சொன்னார்.

ஜனாதிபதித் தேர்தல், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அனுரகுமார திசாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"ஜே.வி.பி.யானது நிலையான கொள்கையுடன் செயற்பட்டு வருகின்ற கட்சியாகும். அத்துடன் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களைவிட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லை.

அரசாங்கத்தின் பயணமானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். நிறைவேற்று அதிகாரம் என்ற ஆயுதம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டில் ஜனநாயகத்துடனான நல்லாட்சி மலர வேண்டுமானால் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

அதற்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையே தற்போது அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து இறக்குவதாகும்.

ஐ.தே.முவினதும் ஜே.வி.பியினதும் நோக்கம் ஒன்றே

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கும் பட்சத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே எதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் நோக்கமும் ஜே.வி.பி. யின் நோக்கமும் ஒன்றேயாகும். இது தொடர்பிலான பேச்சுக்களே இடம்பெற்று வருகின்றன.

கூட்டு சேருவதற்கான பேச்சுக்கள் எதனையும் ஜே.வி.பி. மேற்கொள்ளவில்லை அப்படியொரு தேவையும் எமக்கில்லை.

நாம் ஜே.வி.பி.யாகவே செயற்பட விரும்புகிறோமே தவிர ஹெல உறுமயவாக செயற்பட விரும்பவில்லை. எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகள் பாரிய சக்தியாக உருவெடுத்து வருவதனால் அரசாங்கம் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றது.

இதனால் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்ற எம்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. மக்களிடம் செல்வதற்கு அரசாங்கத்திடம் திராணியிருக்குமானால் ஏன் இப்படி அச்சம் கொள்ள வேண்டும் எனக் கேட்க விரும்புகிறேன்.

ஊடகங்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கான காரணம் என்ன இருக்கின்றது? அதிகாரம் கையில் இருக்கின்றது என்பதால் ஆட்சியாளர்கள் அப்பட்டமான முறையில் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

தேர்தல் காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பயங்கரமானவை என்பது கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் ஒன்று அறிவிக்கும் முன்னரே எம்மீது தாக்குதல் நடத்துவதானது அரசாங்கத்தின் அச்சத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது" என்றார்.

கட்சி சாராத பொது வேட்பாளருக்கே ஆதரவு:ஜே.வி.பி. தீர்மானம்


எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சரத் பொன்சேகா மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர் இல்லை. எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்த பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை விட கட்சி சாராத ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். அதற்காகப் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நாட்டு மக்கள் நேசிக்கக் கூடிய, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளராக சரத் பொன்சேகா விளங்குகின்றார்.

அதனால்தான் நாம் அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். நாம் அவருடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.இறுதியாக நேற்றிரவு கூட பேசினோம்.

அவர் எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்" எனத் தெரிவித்தார்.

திங்கள், 23 நவம்பர், 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்-ஜே.வி.பி. கோரிக்கை


ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். எதிர்கால அரசியலில் அரசாங்கத்துக்கு சவாலாக அமையவுள்ள சரத் பொன்சேகாவுக்கு தற்போதைய நிலையில் ஆபத்தெதுவும் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் அவருடன் இன்னமும் இரு தினங்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் அவர் கூறினார். ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கவுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் தற்போது சூடுபிடித்துள்ள அரசியல் களத்தில் அனைவராலும் பேசப்படுபவர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆவார். இவர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்கால அரசியலில் சவாலாக இருப்பார் என்ற அச்சத்தினால் அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கெடுபிடிகளை செய்து வருகின்றது.

உண்மையில் சரத் பொன்சேகா மிகவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள நபர் என்றப்படியால் அவருக்கு கூடிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஜெனரலின் பாதுகாப்பினை அரசாங்கம் குறைப்பது ஆபத்தானது. எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கூடிய பாதுகாப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டில் முப்பதாண்டு கால யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் ஜனநாயகத்தை ஏற்படுத்தாத சூழலே காணப்படுகின்றது. எனவே, சிறந்த தலைமைத்துவம் மிக்க ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடைப்பெறவுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை அழிந்துப்போன புலிகள் மீது சுமத்திவிட்டு மௌனம் சாதிக்க அரசாங்கம் முயற்சி செய்யக்கூடாது

சனி, 21 நவம்பர், 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தத் தயார்- ஜே.வி.பி.அறிவிப்பு


ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எந்த தேர்தலை முதலில் வைப்பது என்ற தடுமாற்றத்தில் அரசாங்கம் உள்ளது. எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள ஜே.வி.பி. யும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தயாராகவே உள்ளன எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு, நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தற்போது தேர்தல்கள் தொடர்பான பேச்சுகள் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் அரசாங்கம் நடத்தும் என்ற குழப்பமும் கடந்த காலங்களில் தலைதூக்கியிருந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் குறித்த அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் ஏமாற்றத்தையே பொது மக்கள் சந்தித்தனர். .

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பமே அரசாங்கத்திடம் தற்போது காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் ஏற்படாமையினால் பொது மக்கள் அரசாங்கம் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.

தேர்தல் வெற்றிகள் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் சிந்தித்தமையால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. சம்பள உயர்வுகளை வழங்க முடியாது எனக் கூறி வந்த அரசாங்கம் தற்போது திடீரென பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதேபோன்று அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட செயற்பாடுகளின் பின்னணியில் தேர்தல்கள் மிக விரைவில் வரவிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது..

ஆனால் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பம் இன்னும் அரசாங்கத்தை விட்டு அகலவில்லை. எவ்வாறாயினும் ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பார் என நினைத்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அவரை தேசத் துரோகியாக வர்ணித்து வருகின்றது.

அரசாங்கம் சர்வதேச சதி என்ற போர்வையிலேயே தமது ஆட்சியை முன்னெடுக்கின்றது. தேர்தல்களை வைத்து வேடிக்கை காட்டும் சந்தர்ப்பமாக எதிர்வரும் நாட்களை அரசாங்கம் எண்ணக் கூடாது. ஏனெனில் இலங்கையின் எதிர்காலம் எதிர்வரும் தேர்தலிலேயே தங்கியுள்ளன. சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பொது மக்களின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. .

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது.

திங்கள், 2 நவம்பர், 2009

யுத்தத் குற்றச்சாட்டுக் குறித்து அமெரிக்காவின் விசாரணைகளை தடுக்க நடவடிக்கை அவசியம்- ஜே.வி.பி


அமெரிக்காவில் கிறீன் காட் வதிவிட விசா விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகா மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த அமெரிக்கா முன்னெடுத்து வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. வதிவிட விசாரணை வரையறைகளை மீறிய அமெரிக்காவின் இந்த முயற்சியானது இலங்கையின் இறையாண்மையை மீறும் செயலாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்:

அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அந்த நாட்டின் கிறீன் காட் வதிவிடத்திற்காக விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறானதொரு விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் போது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சால் வதிவிடம் கோருபவரால் அந்நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது தொடர்பாக விசாரணைகளை நடத்துவது வழக்கம். ஆனால் இந்த வரையறையை மீறி ஜெனரல் பொன்சேகாவுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பாக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளை நடத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான விசாரணைகள் நடத்துவதற்கு அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ எந்தவொரு அதிகாரமும் கிடையாது. இது எமது இறையாண்மையை மீறும் செயலாகும். ஜெனரல் சரத் பொன்சேகா அல்லது இலங்கைப் பிரஜை எவரானாலும் கிறீன் காட் வதிவிட விண்ணப்பத்தை முன்வைக்கும் போது அமெரிக்காவினால் ஒரு வரையறைக்குட்பட்ட ரீதியிலேயே விசாரிக்க முடியும். இதனை மீற முடியாது. ரஎனவே பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முன்னின்று உழைத்தவர் அவர் நாட்டுக்கு மிக முக்கியமானவர் அத்துடன் அவர் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் உயர் அதிகாரி. எனவே அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு எமது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான விசாரணைகளை தடுத்து நிறுத்தி நாட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கிய சரத் பொன்சேகாவை பாதுகாக்க வேண்டும். அதனை விடுத்து ஏனைய விசாரணைகளை இராஜதந்திர ரீதியில் அணுகாது உதாசீன மனப்பான்மையோடு செயற்பட்டது போன்று இப்பிரச்சினையிலும் அமைதியாக இருக்காது இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஜே.வி.பி. அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். உயிரைப் பணயம் வைத்து போராட நாம் தயார்.

இப்பிரச்சினையை ஒரு போதும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வில்லை. 30 வருட கால பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்ற தேசப்பற்றாளனைப் பாதுகாத்து தேசத்தின் இறையான்மையை பாதுகாக்கவே முயற்சிக்கின்றோம். ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா என்பது தற்பொழுது உள்ள பிரச்சினையல்ல. அது தொடர்பில் நாம் கவனம் எடுக்கவில்லை. அவர் அரசியலுக்கு வரும் போது சரியான நேரத்தில் வருவார் என்று சோமவன்ச தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பிமல் ரட்ணாயக்க எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

நல்லாட்சியை இலக்காகக் கொண்டு வளமான கூட்டணியை களமிறக்குவோம்- ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச கூறுகிறார்


ஜனநாயகம், நல்லாட்சி, தேசிய சமாதானம் மற்றும் தேசிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வளமான கூட்டணியொன் றை எதிர்வரும் தேர்தல்களின் போது களமிறக்குவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பிற்கான நடவடிக்கைகளை ஐ.தே.க. செயல்வடிவில் காட்டினால் மாத்திரமே அதனை பொதுமக்கள் நம்புவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டதனாலும் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் காணப்பட்டமையால் எதிர்கால அரசியலுக்காக வளமான ஒரு கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே கலந்தாலோசித்து உள்ளோம்.

முடிவுகள் எடுப்பதே தவிர புதிதாக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டியதில்லை. எமது கூட்டணியின் நோக்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் நல்லாட்சி என்பவையேயாகும். ஐ.தே.க வினால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக தற்போது ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐ.தே.க வினர் குரல் கொடுக்கின்றனர். ஆனால் ஜே.வி.பி அப்போதே இம்முறையினை எதிர்த்து போராடியது.

எவ்வாறாயினும் ஐ.தே.க.வின் மீது பொதுமக்களுக்கோ ஏனைய அரசியல் கட்சிகளுக்கோ நம்பிக்கை ஏற்பட வேண்டுமாயின் எதிர்ப்புக்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தாது செயல்வடிவில் காண்பிக்க வேண்டும். நிச்சயமாக எதிர்வரும் தேர்தல்களின் பின்பு நாட்டில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டு நல்லாட்சியே ஏற்பட வேண்டும். ஆனால் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்த இந்த அரசாங்கம் முயற்சிப்பது மக்கள் ஆணையை மீறும் செயலாகும்.

திங்கள், 26 அக்டோபர், 2009

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்-நாளை ஜே. வி. பி. ஏற்பாடு


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டுமெனக் கோரி நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தப் போவதாக அறிவித்துள்ள ஜே.வி.பி. எதிர்ப்புக்களையும் மீறி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அது இரு முனை அல்லது மும்முனைப் போட்டிகளாக அமையலாம் என்றும் எச்சரித்துள்ளது.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழ மை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, ""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2012ஆம் ஆண்டு வரை பதவியை வகிக்கலாம். இதன்போது நாட்டின் அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்களுக்கு சலுகைகளை வழங்கி பதவிக் காலம் முடிந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். இவ்வாறானதொரு நிலையில் ஏன் அவசர அவசரமாக தேர்தலை நடத்த வேண்டும். பதவிக் காலம் முடியுமுன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் 8 வருட பதவிக் காலம் 6 ஆக குறைவடையும். இதனைத் தெரிந்து கொண்டும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவாரெனில் ஏன்? எதற்காக? என்பதை யோசிக்க வேண்டும்.

வேறொன்றுக்கும் அல்ல. குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்தி சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே ஆகும். பாராளுமன்றம், அமைச்சரவை, நிறைவேற்று அதிகாரம் மூன்றும் இணைந்தே "நாடு' தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது. பாராளுமன்றமும், அமைச்சரவையும் நிறைவேற்று அதிகாரத்தினால் தூக்கியெறியப்பட்டு வெறும் இறப்பர் முத்திரைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவே மக்கள் ஆணையை வழங்கினார்கள். இது தொடர்பில் எம்முடன் உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இவற்றை மீறும் தார்மீகக் கடப்பாடு ஜனாதிபதிக்கு இல்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்காது மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த முனைந்தால் அதனை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். அதனையும் மீறி தேர்தல் நடத்தப்படுமானால் அத்தேர்தல் இருமுனை அல்லது மும்முனை போட்டிகளாகவும் மாறலாம். இப் போட்டிகளில் "சரத்' மார் பொன்சேக்காக்களும் பங்கு கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. ஐ. தே. கட்சி அமைக்கவுள்ள கூட்டணியில் ஒருபோதும் நாம் இணைய மாட்டோம்.

ஆனால் எதிர்காலங்களில் ஆரம்பமாகவுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிரான கூட்டணிகளில் ஜே. வி. பி. தன்னை இணைத்துக் கொள்ளும். படையினரிடையே பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. ஆனால் அமைச்சர்கள்தான் படையினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நிறைவேற்று அதிகாரத்தால் நாட்டில் ஜனநாயகம் பின்னடைந்துள்ளது. அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. தனியொரு நபரிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளது.

நாட்டை ஆட்டுவிக்கும் அதிகாரம் தனியொரு நபரிடமும் குடும்பத்தவரிடமும் ஒப்படைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்திற்கு எவ்வாறு இடமளிப்பது. எனவே நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது. கொழும்பு, பொறளை கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை வரை செல்லும்.

திங்கள், 12 அக்டோபர், 2009

புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழகத்தின் எம். பி. க்களையே அரசாங்கம் அழைத்துள்ளது -எதிர்ப்பதாக கூறுகிறது ஜே.வி.பி.


விடுதலைப் புலிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒத்துழைப்பு வழங்கிய இந்தியாவின் தமிழக எம். பி. க்களை இலங்கை அரசாங்கம் வரவழைத்தமையை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது என்று முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நலன்புரி நிலையங்களுக்கு செல்ல முடியுமானால் ஏன் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு முகாம்களுக்கு செல்ல முடியாது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது

தமிழகத்தின் எம்.பி. க்கள் குழுவினர் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் நாங்கள் பல விடயங்கள் குறித்து ஆராயவேண்டியுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அகதி மக்களை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் எங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவின் தமிழக எம். பி. க்கள் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது.

மேலும் இந்திய எம்.பி. க்கள் குழுவில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தொடர்பில் ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். அதாவது 1990 ஆம் ஆண்டு வட பகுதியில் இருந்து முஸ்லிம்கள் புலிகளினால் விரட்டப்பட்டபோது அதனை நியாயப்படுத்தி அன்று தொல் திருமாவளவன் கருத்து வெளியிட்டிருந்தார். எனவே அவரை இலங்கைக்கு வரவழைத்தமை தொடர்பில் எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். இதேவேளை புலிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒத்துழைப்பு வழங்கிய தமிழக எம். பி. க்களை வரவழைத்தமை தொடர்பிலும் எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். அரசாங்கத்தின் இந்திய சார்புத்தன்மையையும் எதிர்க்கின்றோம்.

அத்துடன் இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயம் தொடர்பில் குழப்பமே நிலவுகின்றது. அதாவது இந்திய எம்.பி. க்கள் குழுவினர் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளா? அல்லது இந்திய அரசியல் கட்சிகளின் பிரநிதிகளா? என்ற கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டியுள்ளது. இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள் விஜயம் குறித்து தன்னிடமே விளக்கம் அளிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே தற்போதைய சிக்கலுக்கு அரசாங்கம் பதிலளித்தாகவேண்டும்.