வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வாழ்க்கை முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்............


திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. முன்னோர்கள் சொன்னபடி சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் இன்றய பல திருமணங்கள் அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி உடனடியாக முடிவடைந்துவிடுகின்றன.

முதலில் உங்கள் நண்பர் திருமணம் செய்வார். அவர் திருமணம் முடிந்து வெளியே வரும்போது அவரின் முகத்தில் தெரியுமே ஒரு ஆனந்தக் களை, அந்தக் களையைப் பார்த்து நானும் அடுத்த முறை முயற்சி செய்யலாமே என்று எங்காளு நினைப்பார்.

திருமணம் முடிந்த பின்னர் அவர் எதிர்ப்பார்த்த்து இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்டு ஒரேயடியாக மனம் குழம்புவர். அடுத்த ஒரு மாதத்தினுள் இறைவா என்னைக் காப்பாற்றி அருள் என்று வேண்டத் தொடங்குவார்.

காதலில் இருக்கும் போது முன்மாதிரியாக இருக்கும் ஜோடிகள் திருமணமானதும் தடம் புரளுவதேன்?. இதற்கு முதல் காரணம் காதலிக்கும் காலத்தில் மதித்த இரு சொற்களை இருவரும் முற்றாக மறந்தமைதான். அந்த இரு சொற்கள்தான் “விட்டுக்கொடுத்தல், தியாகம் செய்தல்”

காதலிக்கும் போது எத்தனை தடவை விட்டுக் கொடுப்பார்கள், தியாகம் செய்வார்கள் ஆனால் திருமணமானதும் ஒருத்தர் மேலே ஒருத்தர் அதிக உரிமை எடுப்பதுடன் அவர் செய்தால் என்ன எதுக்கு நான் போன்ற மனப்பாண்மையை வளர்த்துக் கொள்கின்றனர்.

இதைவிட ஆண்கள் பெண்கள் இருவரது உளவியலும் வேறுபட்ட தன்மை கொண்டது. அதாவது ஆண்கள் சிந்திப்பது, செயற்படுவது போன்றவை பெண்களில் இருந்து மாறுபடும். ஒருத்தர் உளவியலை ஒருத்தர் அறிந்து நடப்பது மிக்க நன்று. இந்த விடையத்தை ஒரு ஆங்கலப் புத்தகம் (Men are from Venus, women are from Mars) வாசிக்கும் போதே அறிந்துகொண்டேன்.

ஆண்கள் இயந்திரங்கள், விளையாட்டுகள் என்று வீரியம் கூடிய துறையில் ஆர்வம் செலுத்துவர். இவர்களின் எண்ணப்படி இவர்களின் ஆளுமையில் பெண்கள் குறை கூறவோ சந்தேகப்படவோ கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் எல்லாம் துலைந்தது.
உதாரணத்திற்கு

ஒரு திருமண வீட்டிற்கு உங்கள் கணவரோடு செல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். செல்லும் வழியில் இந்த வழி பிழை அந்த வழியால் போக வேண்டும் என்று திருப்பித் திருப்பி நச்சரிக்கின்றீர்கள். கடைசியில் அவர் தான் நினைத்த வழியால் சென்று பெரும் கஷ்டத்துடன் திருமண மண்டபத்தை அடைந்து விடுகின்றார்.

இந்த நிகழ்வால் இருவருக்குமிடையில் ஒரு இறுக்கமான உணர்வு நிலவுவதை பார்க்கலாம். திருமணம் முடிந்து வீடு சென்று பின்னரும் இந்த இறுக்கம் குறைய நேரம் எடுக்கும். ஏனேனில் ஆண்களுக்கு அவர்களின் செயல் திறமையில் நீங்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் ஒரேயடியாக மனமுடைந்துவிடுவார்கள்.

இதே போல பெண்கள் இளகிய மனம் கொண்டவர்கள் அத்துடன் அவர்கள் மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய விரும்புவதில்லை. இவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பு ஆனால் ஆண்கள் கொடுக்க விரும்புவது தீர்வுகள். இதனால்தான் இருவருக்குமிடையில் குழப்பம் வருகின்றது. பின்வரும் ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

கீதா: இண்டைக்கு அலுவலகத்தில சரியான வேலை.
குமார்: எந்த நாளும் இதத் தானே சொல்றீங்க?
கீதா: இல்லை இண்டைக்கு உண்மையிலேயே அதிக வேலை
குமார்: ஏன் என்ன நடந்தது?
கீதா: மனேஜர் இண்டைக்கு கனக்க வேலை தந்திட்டார்
குமார்: அவரிட்ட ஏலாது எண்டு சொல்றது தானே?
கீதா: சொன்னா வேலையை விட்டு நிக்க வேண்டியதுதான்
குமார்: அப்ப வேலையை விட்டு நிக்கிறது
கீதா: இப்ப என்னதுக்கு வேலையை விட்டு நிக்கச் சொல்றீங்க. நீங்க எந்த நாளும் இப்படித்தான் என்னைப் புரிந்து கொள்வதே இல்லை.

இவ்வாறு கூறி அழுதவாறே அவ்விடத்தை விட்டு கீதா நகர்ந்து விடுகிறாள். குமாருக்கு என்ன நடந்து முடிந்தது என்றே புரியவில்லை. இங்கு இந்த நிகழ்வை குமார் கையாள வேண்டிய முறையே வேறு. இப்ப பாருங்க

கீதா: இண்டைக்கு அலுவலகத்தில சரியான வேலை.
குமார்: ஏனப்பா?
கீதா: மனேஜர் கடுமையா வேலை தந்திட்டார்.
குமார்: ஐயோ படுபாவி. என்ற அழகான மனைவியை இப்படியா வதைக்கிறது???
கீதா: வேலைய விட்டிடலாம் போல இருக்கு.
குமார்: இங்க வாப்பா (என்று கட்டியனைத்து) I do understand, don’t worry honey, soon it’ll be over!!!


இப்போ கீதா வலும் சந்தோஷம். இப்போ கீதாவும் குமாரும் ஐடியல் ஜோடியாகிவிட்டார்கள். அவர்களுக்கு ஆண்களிடம் இருந்து தேவை அன்பே. தீர்வுகள் அல்ல. பொதுவாக ஆண்கள் தன் நம்பிக்கையுக்குரியவரிடம் சென்று தன் பிரைச்சனைகளைக் கூறி தீர்வு கேட்பார். ஆனால் பெண்கள் பிரைச்சனைகளைச் சொல்வது தீர்வுகளுக்காக அல்ல, ஒரு ஆறுதல் தேடவே. ஆண்களே அவதானம்!!!

இன்றல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் நீங்களும் அழகான வாழ்க்கை எனும் ஓடத்தில் ஏறிப் பயனிக்கப் போகின்றீர்கள். அந்த நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுப்பதுடன் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து நடந்துகொண்டால் சொர்க்கத்தையே வீட்டு வாசலுக்குக் கொண்டுவந்துவிடலாம்.

நல்லா தூங்கணுமா ? சில வழிமுறைகள்................


சரியான தூக்கமின்மை இன்று பெரும்பாலானவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிக்கல். சிலர் படுத்த உடனே தூங்கிப் போகிறார்கள், சிலர் அரை மணி நேரம் புரண்டு படுத்தால் தான் தூங்குகிறார்கள், சிலர் தூங்கினாலும் அவ்வப்போது விழித்துக் கொள்கிறார்கள், சிலர் விடியற்காலையில் விழித்தெழுந்து பின் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள்.

எப்படியாவது தூக்கம் வரவேண்டும் என்று மக்கள் கடவுளர்களையும், மாத்திரைகளையும் நாடி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

தொலைந்து போகும் தூக்கம் பல்வேறு விதமான நோய்களையும் மனிதனுக்குத் தந்து செல்கிறது என்று பல்வேறு ஆராய்ச்சிகள் விளக்கியிருக்கின்றன.

உடலையும், மனதையும், வாழ்க்கையையும் சோர்வடையைச் செய்யும் இந்த தூக்கமின்மையை எப்படி சரி செய்வதற்கு பல்வேறு உளவியலார்கள், மருத்துவர்கள் பல வழிகளைச் சொல்லியிருக்கின்றனர்.

1. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். எப்பாடு பட்டாவது அந்த நேரத்தில் தினமும் தூங்க முயலுங்கள். உடலும், மனமும் அந்த நேரத்திற்குப் பழகி விடும்.

தூங்கச் செல்லும் போது அன்றைய தினத்தின் சோகங்களையும், தோல்விகளையும், துயரங்களையும் தலையணையாய் கட்டி படுக்கையில் போடாதீர்கள். எதுவாய் இருந்தாலும் விடிந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விடுங்கள்.

இரவில் அதிக நேரம் விழித்திருந்தால், அதை ஈடுகட்ட விடியலில் சற்று நேரம் அதிகமாய் தூங்கினால் போதும் என்று நினைப்பது தவறு. இரவில் தொலையும் தூக்கத்தை பகலில் மீண்டெடுக்க முடியாது.

ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் தான் நமக்குத் தேவையானது. அதை விட அதிகம் தூங்குவது உடலை சோர்வடையச் செய்யுமே தவிர உற்சாகமூட்டாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

2. தூங்குவதற்குரிய நல்ல சுகாதாரமான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதிக குளிர், அதிக வெப்பம் தாக்காத இடம் தூக்கத்துக்கு மிகச் சிறந்தது.

சன்னலை சற்றே திறந்து வைத்துக் கொண்டு தூங்குவது நல்ல காற்றோட்டத்துக்கும், ஆழமான சுவாசத்துக்கும் உத்தரவாதம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சுற்றுப் புற சத்தம் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறது எனில் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு தூங்கலாம்.

இலகுவான ஆடை அணியுங்கள். படுக்கையறையில் இருக்கும் ஏதேனும் பொருள் உங்கள் தூக்கத்தைச் சிதைக்கிறதெனில் அதை மாற்றுங்கள்.

படுக்கை உங்கள் தூக்கத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். பெரிய படுக்கையும், சரியான தலையணையும், போர்வையும் இருப்பது அவசியம்.

உங்களுக்கு வசதியான முறையில் தூங்க முயலவேண்டும். ஒருக்களித்துப் படுப்பதோ, கவிழ்ந்து படுப்பதோ அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

3. படுக்கையறையின் வண்ணமும், வெளிச்சமும் தூக்கத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணிகள். படுக்கை அறை அடர் நிறத்தில் இல்லாமல் இலகுவான நீலம் போன்ற நிறங்களில் அமைந்திருப்பது தூக்கத்தை வருவிக்கும் என்கின்றனர் உளவியலார்.

4. பகல் பொழுதில் நீங்கள் செய்யும் வேலைக்கும், இரவு நேர தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பகலில் உடலை வருத்தி உழைப்பவர்கள் இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது இயல்பு.

பகலில் உடலுழைப்பு தேவைப்படாத பணிகளைச் செய்பவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உடலுக்குத் தேவையான உயிர்வழியும், நுரையீரலுக்கு பலமும், இரவில் நிம்மதியான உறக்கத்தையும் உடற்பயிற்சி தவறாமல் தரும்.

தூக்கத்துக்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும். காலை, அல்லது மாலையில் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது.

5. தூங்கச் செல்லும் போது மனதை இலகுவாக வைத்திருக்கவேண்டும். தியானம் செய்யும் பழக்கமுடையவர்களுக்கு தூக்கம் ஒரு சிக்கலாய் இருப்பதே இல்லை. காரணம் அவர்களுடைய உடல் தியானத்தினால் இலகுவாகிறது.

தியானத்தில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள் மனதை இலகுவாக வைத்திருக்க ஒரு கற்பனைப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்கின்றனர் உளவியலார். அதாவது மனதை அதற்கு விருப்பமான ஆனந்தமான, உடல் இறுக்கம் தளர்க்கும் கற்பனைச் சூழலுக்கு கொண்டு சென்று உடலை இலகுவாக்குதல். உடல் இலகுவாக இருப்பது தூக்கம் எளிதில் பற்றிக்கொள்ள உதவும்.

6. தூங்கச் செல்லும் முன் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மூச்சை நன்றாக உள்ளிழுத்து அது உடலெங்கும் செல்வதாக கற்பனை செய்து கொண்டே நான்கு வரை மெதுவாக எண்ணுங்கள். பின் மெதுவாக எட்டு வரை எண்ணிக் கொண்டே சுவாசத்தை வெளிவிடுங்கள். இதே போல பத்து முறை செய்யுங்கள்.

யோகாசனம் செய்யும் விருப்பமுடையவர்கள் யோகாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூச்சுப் பயிற்சியைச் செய்யலாம்.

தரையில் படுத்துக் கொண்டு கால்களையும், கைகளையும் உடலோடு ஒட்டாமல் வைத்துக் கொண்டு உடலின் ஒவ்வோர் உறுப்பாக ஓய்வு பெறட்டும் என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே வாருங்கள். மிக அற்புதமான ஓய்வை உணர்வீர்கள்.

மாலையில் நல்ல வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல் போடுவதும் இரவில் நல்ல தூக்கத்துக்கு பெருமளவில் உதவும்.

7. நல்ல இசை கேட்பது மனதை இலகுவாக்கும். நல்ல இசை எது என்பது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்து மாறுபடும். குழந்தையாய் இருக்கும்போது தாலாட்டு கேட்டு தூங்கிப் பழகிய மனம், நல்ல இசையில் தாயின் தாலாட்டு சுகத்தை திரும்பப் பெறுகிறது. மனம் நிம்மதியான தூக்கத்துக்குத் தயாராகிறது.

தூக்கத்துக்கெனவே நிறைய தியான வகை இசை இப்போதெல்லாம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

8. படுக்கைக்குச் செல்லும் முன் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். படுக்கை அறையில் இரவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை அறவே நிறுத்த வேண்டும்.

இரவில் தொலைக்காட்சி பார்ப்பது தவிர்க்க முடியாது என நீங்கள் நினைத்தால், மனதை இலகுவாக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

அதிக நேரம் தொடர்கள் பார்த்து அதையே உள்வாங்கிக் கொண்டிருந்தால், அல்லது மனதை பாதிப்படையச் செய்யும் ஏதேனும் திரைப்படங்கள் பார்த்தால், உங்கள் தூக்கம் பாதிப்படையும்.

அதேபோல, தூங்கச் செல்லும் முன் காஃப்பைன் பொருட்கள், சாக்லேட், குளிர்பானம், புகை, மது இவற்றை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர், பால் ஏதேனும் அருந்தலாம்.

9. பகல் நேரத்தில் நாம் என்ன உண்கிறோம் என்பது கூட இரவு நேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக கொழுப்பு, இனிப்பு போன்றவற்றை பகல் நேரத்தில் உண்பது இரவு நேர தூக்கத்தைப் பாதிக்கும். பகல் நேரத்தில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையும் போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல தூக்கத்துக்கு துணை செய்யும்.

இரவு நேரத்தில் அதிக காரமான உணவுகளையோ, மிதமிஞ்சிய அளவுக்கு உணவுகளையோ உண்பதை தவிர்க்க வேண்டும்.

தினமும் சுமார் இரண்டு லிட்டர் தண்ணீராவது சராசரியாகக் குடிக்க வேண்டும். உடலுழைப்பை அதிகம் செலுத்தி பணி செய்பவர்கள் அதிக நீர் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் தூங்கச் செல்வதற்கு சுமார் ஒருமணி நேரத்திற்குள் தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது.

10. மூளையின் மையத்திலிருக்கும் ஒரு சிறு பாகத்திலிருந்து சுரக்கும் மெலடோனின் எனும் ஹார்மோனுக்கும் தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மெலடோனின் தேவையான அளவுக்கு சுரக்கும் போது எளிதில் தூக்கம் கிடைக்கிறது. வயதாக வயதாக இந்த சுரப்பி குறைவாக சுரக்கிறது. அதுவே முதியவர்களுக்கு தூக்கம் தொடர்பான சிக்கல்கள் உருவாக காரணமாகிறது. மெலடோன் சரியான விகிதத்தில் சுரக்க மேற்கூறிய வழிகள் பயன்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

தூக்கம் வந்தால், துக்கம் விடை பெற்றுப் போய்விடும். நல்ல தூக்கத்துக்குத் தேவை மாத்திரைகளல்ல நம்முடைய வாழ்க்கை முறையில் செயல்படுத்த வேண்டிய சில மாற்றங்கள் மட்டுமே என்பதைப் புரிந்து செயல்படுவோம்

அதிகாலையில் ஓடலாமா?


மலைப்பாதைகளில் சைக்கிள் ஓட்டுவது, நல்ல பனியிலும் மலை ஏறுதல், பனிச்சறுக்கு விளையாட்டு, சாலைகளில் ரோலர் ஸ்கேட்டிங் செல்லுதல் என்று திறந்த வெளியில் செய்யும் விளையாட்டுக்களில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும், காலையில் திறந்த வெளியில் ஓடும் அல்லது துரித நடையில் செல்லும் அனைவருக்கும் கிடைக்கும்.

தினமும் அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசும் போது முப்பதே முப்பது நிமிடங்கள் மட்டும் ஓடுங்கள். அதுவும் இலக்கு நிர்ணயிக்காமல் இன்று அந்தப்பக்கம், நாளை இந்தப் பக்கம் என்று ஓடுங்கள். நகரத்தின் சாயல்கள் இல்லாத இடமாக இருந்தால் மிக நல்லது.

உடற்பயிற்சி நிலையங்களிலும், வீட்டிலும் உடற்பயிற்சி செய்வதை விட இது நல்லது.

பிரிட்டனில் நடப்பதில் அலுக்காத மக்களுக்காக பிரிட்டீஷ் ராம்பிளர்ஸ் உள்ளது. இதில் 1,12,000 பேர் உறுப்பினர்கள், இவர்களில் 42 சதவீதத்தினர் பேர் பெண்கள். கடந்த மூன்றாண்டுகளில், இப்படி அதிகாலையில் ஓடவும், நடக்கவும், வந்துள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

காரணம் என்ன? உடல் மெலிவது மட்டுமல்லை; வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ, இப்படி அதிகாலையில் 30 நிமிடங்கள் மட்டும் ஓடுவது அல்லது துரிதமாக நடப்பது உதவுகிறது என்று விளையாட்டுத் துறையைச் சேர்ந்த மனோதத்துவ டாக்டர் டாம்காக்ரில் கூறுகிறார்.

காலையில் சாலைகளில் ஓடுபவர்கள் ஒரு மைல் தூரத்தை (1.6 கி.மீ) நிமிடங்களில் கடந்தால், கால்கள் விரைந்து அழகிய வடிவமாக மாறும். காரணம், இச்செயலால் 337 கலோரி எரிக்கப்படுகிறது.

கவலையும் பிரச்னையும் உள்ளவர்கள் பக்கத்து ஊர்களுக்கு ஓடலாம். துரித நடை நடக்கலாம். இதனால், 266 கலோரி எரிக்கப்படுகிறது. மனமும் உடலும் புதுப்பிக்கப்படும். திரும்பும்போது, அந்த ஊரிலிருந்து உடனடியாக பேருந்தில் வரவேண்டும்.

சிறு பிராயணப் பையை முதுகில் சுமந்துகொண்டு நடந்து சென்றால், தொடைகளும் நுரையீரல்களும் நன்கு பலம் பெறும். இதன் மூலம் 228 கலோரி செலவாகும்.

உள்ளுக்குள் நம்பிக்கையையும் வெளியில் அழகான துடிப்பான தோற்றத்தையும் காலை நேர ஓட்டம் தருவதால், அதற்காக தினமும் 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள். இதனால் உடல் நலம் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் ஃபிட்னஸ் நிபுணரான டாக்டர் ஏஜெக்ஸ் ரீஸ்.

என்ன, ஓடத் தயாராகிவிட்டீர்களா?

மூட்டு வலி குணமாக!

மூட்டு வலி, முழங்கால் வீக்கம், இரத்தக் கொதிப்பு, கல்லீரல் மற்றும் பித்தக் கோளாறுகள் உள்ளவர்கள் தினமும் இரண்டு அல்லது நான்கு வாழைப்பழங்கள் சாப்பிடவும். உடனே குணமாகும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு விரைவாக உடல் திசுக்களை சுத்தம் செய்து சீரமைப்பு செய்து விடுவதால் மூட்டு வலி உடனடியாக குணமாகும். உணவுக்கு முன்பு நான்கு பழங்கள் சாப்பிட்டால் எப்போதும் சாப்பிடுவதைவிட 1/4 பங்கு உணவு மட்டும் சாப்பிடுவது நல்லது. இதனால் நெஞ்சு வலியும் இரத்தக் கொதிப்பும் குணமாகும்.

ஊளைச்சதை உடனே குறைய!

சிஸ்டைன் என்ற அமினோ அமிலமும் வைட்டமின் சியும் தொடர்ந்து உணவில் இடம் பெற்றால் நலம். உணவுக்குப் பிறகு வைட்டமின் ‘சி’யை மாத்திரையாகவும் சாப்பிடலாம். சோயாபீன்ஸ், கீரை, பால், பேரீச்சம்பழம், அரிசி இந்த ஐந்திலும் சிஸ்டைன் அமிலம் நிறைய இருக்கிறது. ஊளைச் சதைக்காரர்கள் முதலில் 15 நாட்களுக்கு தினமும் 5 எலுமிச்சம் பழங்களை மட்டும் மூன்று வேளை சர்பத்தாக மாற்றி அருந்தினால் உடனே ஊளைச்சதை குறையும். இந்த உண்ணாவிரத நாளில் ஓய்வு எடுக்காமல் உங்கள் அன்றாடப் பணிகளைப் பார்க்கலாம். 15 நாட்கள் கழித்து அளவான உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் போதும். பதினைந்து நாட்களும் எலுமிச்சையிலேயே வைட்டமின் சி தொடர்ந்து கிடைப்பதால் உடலும் சோர்வுறாமல் இருக்கும். வைட்டமின் சியும, சிஸ்டைன் அமிலமும் ஊளைச்சதை ஏற்படாமல் கட்டுப்படுத்துவதாக நியூயார்க்கில் உள்ள நாசெள கன்ட்ரி மெடிக்கல் சென்டரின் சத்துணவு ஆய்வுக் கமிட்டி கண்டுபிடித்துள்ளது.
வாயைக்கட்டும் மன உறுதி மட்டுமே நமக்குத் தேவை!.

நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!


முன்பெல்லாம் 80 வயதிற்கு மேற்பட்டவர்களைப் பொது இடங்களில் பார்த்தால் அது அதிசயத் செய்தி. இப்போதெல்லாம் 1900 ஆம் ஆண்டில் பிறந்தவர்களைச் சாதாரணமாக பார்க்க முடிகிறது. அதுவும் ஆரோக்கியமாக! இதற்கான காரணம் என்ன?

ஹண்ட்டர் டேவில் என்ற பிரிட்டன்காரர் 1900 ஆம் ஆண்டு முதல் 1905க்குள் பிறந்த 26 பேர்களை இதற்காகத் தேர்ந்தெடுத்தார். இவர்களிடம் பேட்டி எடுத்தார். வாழ்க்கை முறை பற்றிய ஆய்வையும் மேற்கொண்டார். இவர்களுள் ஒருவர் யார் தெரியுமா? 1999ஆம் ஆண்டு 99வது பிறந்தநாளைச் சமீபத்தில் கொண்டாடிய பிரிட்டீஷ் ராணியின் தாயார். இந்த அரசி நேரடிப் பேட்டியே தராத போதும் அவ்வப்போது கடிதம் மூலம் பதில் தெரிவித்திருந்தாராம்.

மீதமுள்ள 25 பேர்களுள் இருவர் முன்னாள் டாக்டர்கள். ஒரு வக்கீல், ஒரு சுரங்கத் தொழிலாளி, ஓர் அச்சகர், ஒரு பணிப்பெண், இராணுவ அதிகாரி, போலீஸ்காரர், கொத்தனார், கட்டட காண்ட்ராக்டர், மூன்று தொழிற்சாலைப் பெண்கள், சொகுசுக் கப்பலின் கேப்டன், மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர் என்று பலதரப்பட்ட மனிதர்களும் இவர்களுள் அடங்குவர். இவர்கள் தவிர, புகழ்பெற்ற இரு பெண்கள். ஒருவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை டேம் எலிசபெத் ஹில், இன்னொருவர் ஹாலிவுட் நடிகை மேரி எலிஸ்.

இவர்கள் அனைவரும் தனியாக, சுறுசுறுப்பாக பிறர் உதவியின்றி வாழ்கிறார்கள். 96 வயதுக்காரரான எலன்வேலி ஆன்ஸ்லோ என்பவர் பிரிம்ஹாமில் இன்றும் கார் ஓட்டிச் செல்கிறார்.

இதே வயதுக்காரரான லியோனார்ட் இந்த 97 வயதிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறார்.

இரண்டு பேர் நர்ஸிங் ஹோமிலும் ஒருவர் தனிப்பட்ட வீட்டிலும் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த வீட்டிலோ, மகன் அல்லது மகள் வீட்டிலோ வசிக்கின்றனர்.

இந்த 26 பேர்களும் தாங்கள் பிறந்த ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் அதிகம் சென்றதில்லை. ஆனால், உலக ஞானம் நிறைய உண்டு. தம் பத்து வயதில் தம் வகுப்பில் உடன்படித்த நண்பர்களின் பெயர்களை நினைவாகச் சொல்கிறார்கள். 1914, ஆகஸ்ட் 4-இல் உலக யுத்தம் ஆரம்பமானதைச் சொல்லுகிறார்கள்.

இந்த 26 பேர்களின் அப்பாவோ, அம்மாவோ 80 வயதுக்கு மேல் வாழ்ந்துள்ளனர். பிரிட்டீஷ் ராணியின் அப்பா 89 வயதிலும், அம்மா 78 வயதிலும் மரணமடைந்தவர்கள். இரண்டு உலகப்போரிலும் பங்கேற்ற வீரர்களும் இந்த 90 வயதுக்கு மேற்பட்டவர்களுள் உண்டு.

ராணி உட்பட மற்ற 24பேர்களும் தினமும் ஒருமுறை அல்லது இருமுறை கொஞ்சம் மது அருந்துகின்றனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ஆயுளை அதிகரிக்கும் மூலிகையைச் சாப்பிடுகிறார். மற்றவர்கள் காலையிலேயே கோழி வறுவல் சாப்பிடுகின்றனர்!

இவர்கள் அனைவரது உணவும் என்னவோ சாதாரண உணவுதான். பிறகு இவ்வளவு நாட்கள் வாழ என்ன காரணம்?

அனைவரும் சொந்த ஊரிலேயே பணி ஓய்வுக்குப் பிறகு வசிக்கின்றனர்.

தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்கின்றனர். வாழக்கை ஒழுங்குமுறை, மதச் சடங்குகள் முதலியவற்றில் அக்கறையாக உள்ளனர்.

எல்லாக் குழந்தைகளிடமும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்துகின்றனர். 98, 99 வயதில் உடல் நலம் கொஞ்சமாவது கெட்டிருக்கும். இருந்தும் இவர்கள் மகிழ்ச்சியுடன் தினசரி நடக்கின்றனர்.

பழுத்த வயதில் உங்களை அனைவரும் கவனிக்க வேண்டும் என்று விரும்பாதீர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள். சிறந்த சத்துணவு, சுகாதாரம் இவற்றை விட இதுபோன்று சிந்தித்து வாழந்தால் எந்த வயதிலும் நாய்க்குணம் ஏற்படாமல் ஆரோக்கியமாக 90 வயதுக்கு மேலும் வாழமுடியும் என்று இந்த ஹண்ட்டர் டேவிஸ் கண்டுபிடித்துள்ளார்.

கோபத்தைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் அதன் மூலமும் ஆயுள் நீடிக்கும்.