வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 மார்ச், 2010

ஐ.தே கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இரகசியப் பொலிசார் விசாரணை _

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் நடைபெற்ற இந்த விசாரணைகளின் போது ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கட்சிக்குக் கிடைக்கப் பெற்ற நிதியுதவிகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விசாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. _

செவ்வாய், 2 மார்ச், 2010

சர்வாதிகார ஆட்சியை உருவாக்கவே அரசு 3இல் இரண்டு பெரும்பான்மையைக் கோருகிறது : ஐதேக


நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை. மாறாக சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே அதனை கோருகிறதென முன்னாள் எம்.பியும். ஐ.தே.கவின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் 112 அமைச்சர்கள் சிறப்புரிமைகளுடன் பதவியில் உள்ளனர். அப்படியாயின் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை எவ்வாறு குறைப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தமக்கு தேவையென்றும் அதனை மக்கள் வழங்கினால் அரசியலமைப்பை மாற்றியமைத்து தேர்தல்கள் முறைமையினையும் இல்லாதொழிக்க முடியுமெனவும் அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது.

எமது நாட்டு மக்களுக்கு இருக்கும் பிரச்சினை மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதிகாரமா என்பதையிட்டு நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே புதியதொரு பிரசாரத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

மக்களுக்குத் தேவை மூன்றில் இரண்டல்ல, வாழ்க்கைச் செலவு குறைப்பு, வரிகள் நீக்கம், தொழில் வாய்ப்புகள், அடிப்படை வசதிகளாகும்.

ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை பெற்றுக் கொண்டு ஆடைத் தொழிற்துறையைப் பாதுகாத்து ஒரு லட்சத்திற்கும் மேலான இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பைப் பாதுகாப்பது அவசியம். நாடும், மக்களும் இன்று அரசாங்கத்திடமிருந்து இவற்றையே எதிர்பார்க்கின்றனர்.

எனவே இப்பெரும்பான்மை அதிகாரத்தைக் கோருவது வேறெதற்காகவும் அல்ல. சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் 112 அமைச்சர்கள் சிறப்புரிமைகளை அனுபவித்துக் கொண்டு பதவிகளில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராகப் பாரிய ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவ்வாறானதோர் நிலையிலும் இந்த அமைச்சர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அப்படியானால் எவ்வாறு நல்லாட்சியை ஏற்படுத்த முடியும்?

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக குறைக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது எவ்வாறு சாத்தியமாகும்?

இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் மாயாஜால வித்தைகளேயாகும்.

தேசியப் பட்டியல்

ஆர். யோகராஜன், டி.எம். சுவாமிநாதன் ஆகியோரை எமது தேசியப் பட்டியலில் இணைத்துள்ளேõம். அத்தோடு ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் இரண்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

எனவே கொழும்பு மாவட்ட வேட்பு மனு தயாரிக்கப்படும் போது கட்சியின் நடைமுறைகளுக்கு அமையவே தயாரிக்கப்பட்டது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். _

வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான மனுவை சமர்ப்பிக்கக் கூடாது என்ற நோக்கில் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார் : ஐ.தே.க


ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான மனுவை சமர்ப்பிக்கக் கூடாது என்ற நோக்கில் ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
குறித்த மனுவில் ஜெனரல் சரத் பொன்சேகா கைச்சாத்திட வேண்டும் எனவும், அதற்கான சந்தர்ப்பம் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவச் சட்டத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

அடுத்தவாரம் அரசாங்கத்துக்கு அதிர்ச்சி தருவதாக அமையும்-திஸ்ஸ


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஜனநாயக விரோத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே 16 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துள்ளன. பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனோ அல்லது எம்முடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளுடனோ எதுவித இரகசிய ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவில்லை'' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

""அரசாங்கத்திலுள்ள பல அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் எம்மோடிருந்து வெளியேறியவர்களில் பலர் இன்று எம்மோடு இணைவதற்கும் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் அடுத்த வாரம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி தரும் வாரமாகவே அமையப் போகிறது'' என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.இங்கு இவர் மேலும் கூறியதாவது,

""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஜனநாயக விரோதமான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துள்ளன. ஜே.வி.பி.க்கும் எமது கட்சிக்குமிடையே எந்தவிதமான அரசியல் ரீதியான உடன்பாடுகளும் கிடையாது. எமது கட்சியின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது ஜே.வி.பி.யின் கொள்கைகளாகும். ஆனால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்காக ஓரணியில் நாம் திரண்டுள்ளோம்.

அத்தோடு பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் எதுவிதமான இரகசிய உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை. ஆனால் இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் அடிப்படை வசதிகளுடன் குடியேற்றுவதை துரிதப்படுத்தல், கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்துதல், சிறு குற்றங்களை செய்தவர்களை விடுதலை செய்தல், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் மட்டும் அவசர காலச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல், தகவல் பரிமாற்றல் சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாத்தல், பத்திரிகை சபை சட்டமூலத்தை இரத்துச் செய்தல், சுயாதீன ஆணைக் குழுக்களை நியமித்தல், அரசியலமைப்பு சபைக்கு உடனடியாக அங்கீகாரத்தை வழங்கல், நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளருடன் இணக்கப்பாடு கண்டுள்ளோம். இந்த இணக்கப்பாடுகளை ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் மக்கள் முன்பாக சமர்ப்பிக்கவுள்ளோம். கடந்த காலங்களில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் வெற்றுப் பத்திரங்களாக தூக்கியெறியப்பட்டதை நாம் கண்டுள்ளோம். எனவே இரகசிய ஒப்பந்தமென்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றோம்.

அரசாங்கம் அச்சமடைந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெறுவார் என்ற அச்சம் அரசாங்கத்தை ஆட்கொண்டுள்ளது. எனவே இன்று எமது எம்.பி. தயாசிறி ஜயசேகரவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எம்மோடு இணைந்தவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

ஜே.வி.பி. ஒட்டிய சுவரொட்டிகள் பொலிஸாரை பயன்படுத்தி அகற்றப்படுகின்றன. எம்மோடு இணைந்தவர்களின் "பழைய பைல்களை' மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

மக்கள் சொத்துக்கள்

இன்று ஆட்சியிலிருப்பவர்கள் அதிகாரிகளின் உதவிகளுடன் கோடிக் கணக்கு பெறுமதி வாய்ந்த மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறு சொத்து சேர்ப்பதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது. இவ்வாறான ஊழல் மோசடிகள் தொடர்பாக ஐ.தே.கட்சி தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டதும் உரிய விசாரணைகளை நடத்தி உரியவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த வாரம் அரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் அரசாங்கத்திலுள்ள பல அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் எம்மோடிருந்து வெளியேறிய பலர் இன்று எம்மோடு இணைவதற்கு, ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அடுத்த வாரத்தில் முக்கிய நிகழ்வுகள் பல நிகழலாம். அனைத்தும் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியமாக அமையப் போகின்றது.

பதவிகளில் நாட்டமில்லை

ஜனாதிபதித் தேர்தலில் எமது பொது வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னரான காபந்து அரசாங்கத்தில் ஐ.தே. கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்க மாட்டார். அதனை உறுதியாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடத்தப்படும் பொதுத் தேர்தலில் ஐ.தே. கட்சி தலைமையிலான ஆட்சி ஏற்படுவது உறுதி. அதன்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்பார்.அத்தோடு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆகக் குறைக்கப்படும்.

எஸ்.பி. சரத்திற்கு ஆதரவு

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்கா ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைய மாட்டார் என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் உறுதியாகத் தெரிவிக்கின்றேன்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற எஸ்.பி. உறுதியளித்துள்ளார்.

தமிழ் மக்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எம்மோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. தமிழ் மக்கள் தாம் சந்தித்த துயரங்களை நன்கறிவார்கள். எனவே ஐ.தே.கட்சியை ஆதரிப்பார்களென்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதி மக்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.