வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழகத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜனவரி, 2010

சென்னையில் சினிமா நடிகர்கள் சூர்யா - வடிவேலு - டைரக்டர் வீடுகளில்., வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு


சென்னை: தமிழக திரைப்பட நடிகர்கள்- மற்றும் டைரக்டர்கள் வீடு , அலுவலகங்களில் வருமான வரி துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் எவ்வளவு சிக்கியது என்ற விவரத்தை அதிகாரிகள் இன்று மாலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகின்றனர். தமிழ் நடிகர்கள் பலர் வருமான வரி பாக்கி வைத்திருப்பதாகவும், கணக்கில் காட்டாத சொத்துக்கள் வைத்திருப்பதாகவும் அதிகாரிகளுக்கு ரகசிய புகார் வந்தது. இதனையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் சார்பில் அதிரடியாக சென்னையில் திரைப்டத்துறையினர் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.


சிரிப்பு நடிகர் வடிவேலு வீடும் தப்பவில்லை : காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் இந்த சோதனையில் அதிகாரிகள் இறங்கினர். இதன்படி சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சூர்யா வீடு, விருகம்பாக்கத்தில் உள்ள சிரிப்பு நடிகர் வடிவேலு வீடு, ரமணா, கஜினி உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் ஏ. ஆர்., முருகதாசின் வளசரவாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. டைரக்டர் கே. எஸ்., ரவிக்குமார், இத்துடன் சில தயாரிப்பாளர்கள் வீடு அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

மதுரையில் உள்ள வடிவேலு வீட்டிலும் சோதனை: சென்னையில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில், மதுரை ஐராவதம் நல்லூர் பகுதியில் உள்ள வடிவேலு வீட்டிற்கு வந்த வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர். இங்கு பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இங்கிருந்தும் முக்கிய ஆவணஙகள் அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை கமிஷனர் வெளியிடுகிறார்: காலை முதல் அதிரடியாக நடந்து வரும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஏராளமான கணக்கில் காட்டாத ரொக்கப்பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. கணக்கில் காட்டாத சொத்து விவரம் மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்பு பணம் குறித்த விவரங்கள் இன்று மாலையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வருமான வரித்துறை கமிஷனர் வெளியிடுகிறார். சென்னையில் அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையால் திரைப்படத்துறையினர் கலங்கி போயுள்ளனர்.

செவ்வாய், 8 டிசம்பர், 2009

வெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு ரகசிய எண்ணை பயன்படுத்தி போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை


atm-vavuniyaஇலங்கையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் கைது; இலங்கை அரசு அதிகாரி தலைமறைவு

வெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்குகளின் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்த, இலங்கையை சேர்ந்த 4 தமிழ் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கூடுவாஞ்சேரி போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தரணி, போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு ஆட்டோ தாம்பரம் பக்கம் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், அந்த ஆட்டோவை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அந்த ஆட்டோவில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் ஒரு `லேப்டாப் கம்ப்ïட்டர்', ஏராளமான ஏ.டி.எம். மற்றும் `கிரெடிட் கார்டு'கள் வைத்து இருந்தனர்.

செங்கல்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேவியர்தன்ராஜ் உத்தரவுப்படி, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுந்தர்ராஜன், அலெக்சாண்டர், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையிடம் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். தனிப்படை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் தனித் தனியாக விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர்கள் இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் ராஜேந்திரன் (வயது 47), கோனேஸ்வரன் (34), ராஜரத்தினம் (43), தர்ம நிஷாந்தன் (19) என்பது தெரிய வந்தது. இவர்கள், வெளிநாட்டில் உள்ள தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம் கார்டுகளின் ரகசிய குறியீடு எண்ணை தெரிந்து கொண்டு, பின்னர் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து, ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்த மோசடி கும்பல் ஆகும். இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் ராஜேந்திரன் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:- நான் 1 வருடத்திற்கு முன்பு இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தேன். சென்னை தாம்பரத்தில் உள்ள ஆட்டோ டிரைவரான என் மச்சான் ராஜரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு, வவுனியாவில் இருந்து வந்து, தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் தங்கி இருந்த எனது நண்பர்களான கோனேஸ்வரன், தர்ம நிஷாந்தன் ஆகியோருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவேன். அவர்களும் சரியான வேலை இல்லாமல் இருந்ததால் என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

அப்போது வவுனியா மாவட்டத்தில், அரசு விளையாட்டுத் துறையில் அதிகாரியாக வேலை செய்து வரும் தன்ராஜ் (35) என்பவரின் நட்பு, இலங்கையில் உள்ள நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்தது. அவர் மூலம், போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தோம்.தன்ராஜ் போலி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வித்தையை கற்றுத்தர, தமிழ்நாட்டிற்கு வந்தார். கணினி உதவியுடன் எப்படி செயல்பட வேண்டும் என்று கற்று தந்து விட்டு சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து, நான், ராஜரத்தினம், கோனேஸ்வரன், தர்ம நிஷாந்தன் ஆகிய 4 பேரும் பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரம் பகுதியில் உள்ள மடம் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தோம். பின்னர் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க `கம்ப்ïட்டர்' மற்றும் `கார்பன் ரைட்டர்', ஏ.டி.எம். மையங்களில் உள்ள கதவை திறக்கப் பயன்படுத்தும் கருவி ஆகியவை வாங்கினோம்.

இந்த தகவல்களை, இலங்கையில் உள்ள தன்ராஜிடம் கூறினோம். நான் அனுப்பும் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து பணம் எடுத்தால், கமிஷன் பணத்தை எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை நான் சொல்லும் நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.அதன்படி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களின் வங்கி கணக்குகளின் ரகசிய குறீயிட்டு எண்களை, அங்கு உள்ளவர்களிடம் இருந்து வாங்கி, அதனை எங்களுக்கு தன்ராஜ் இ.மெயில் மூலம் அனுப்பினார். வாரம் 3 அல்லது 4 தொழில் அதிபர்களின் வங்கி ரகசிய எண்களை அவர் அனுப்புவார்.

நாங்கள் 30-க்கும் மேற்பட்ட பெட்ரோ கார்டுகளை வாங்கி சேகரித்தோம்.அந்த பெட்ரோல் கார்டின் பின்புறம் இருக்கும் ரகசிய எண்களை, கணினி மற்றும் கார்பன் ரைட்டர் மூலம் அழிப்போம். பின்னர் அதே இடத்தில், கணினி மூலம் தன்ராஜ் அனுப்பிய வெளிநாட்டு தொழில் அதிபர்களின் ரகசிய எண்களை பதிவு செய்து விடுவோம். இதேபோல வாரத்தில் சுமார் 5 போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்வோம். பின்னர், கார் மற்றும் ஆட்டோவில் பல்லாவரம், வேளச்சேரி, மேடவாக்கம், கிழக்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கனரா வங்கி, சிட்டி ïனியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று, போலியாக தயாரித்த கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்தோம்.

இப்படி கடந்த 7 மாதமாக இத்தொழிலில் ஈடுபட்டு, கோடி கணக்கில் பணத்தை எடுத்தோம். இதில் கமிஷன் போக, மீதிப் பணத்தை, தன்ராஜிடம் கொடுத்து விடுவோம். நாங்கள் போலி ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி எடுத்த பணம் எல்லாமே, வெளி நாட்டினர் பணம் என்பதால் இதுவரை எந்த வித சிக்கலிலும் நாங்கள் மாட்டிக் கொள்ள வில்லை.

ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய்வரை பல்வேறு மையங்களில் இருந்து எடுத்து வருவோம்.இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக ரூ.9 லட்சம் ரொக்கம், 20 சவரன் நகைகள், 4 செல்போன்கள், 50 போலி ஏ.டி.எம். கார்டுகள், ஒரு லேப்டாப் கம்ப்ïட்டர், வெப்கேமரா, இலங்கை அரசின் பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ், ஏ.டி.எம். நம்பரை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகள், கொள்ளையடிக்கப் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான 4 பேரையும், போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.முக்கிய குற்றவாளியான இலங்கை அரசு விளையாட்டுத்துறை அதிகாரி தன்ராஜ் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

-தினத்தந்தி-

வெள்ளி, 4 டிசம்பர், 2009

தமிழக கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்பட்ட நான்கு மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ளனர்


தமிழகம் வேதரான்யம் கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்பட்ட நான்கு மீனவர்கள், கடந்த செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் தரையிறங்கியமையை, தமிழக மீன்பிடி சங்கத்திற்கு அறிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களின் படகுகளில் எரிபொருள் தீர்ந்துப் போனதன் காரணமாவே அவர்கள் இலங்கை கடற்பரப்புக்கு வர நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 20 நவம்பர், 2009

கருணாநிதியைக் கண்டித்து போஸ்டர்கள் - பரபரப்பு


விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் போஸ்டர்களை பெரியார் தி.க. அல்லது நாம் தமிழர் அமைப்பினர் ஒட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.

புதன், 4 நவம்பர், 2009

2010 இல் 2 கிரகணங்கள் : தமிழகத்தில் விரிவான ஏற்பாடு


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2 கிரகணங்கள் நிகழ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்று ஜனவரி முதல்நாளான புத்தாண்டு அன்று நிகழ உள்ள சந்திரகிரகணம், 2 ஆவது 15ஆந் திகதி நிகழ உள்ள சூரியகிரகணம்.

சூரியகிரகணம் 108 ஆண்டுகளுக்கு பிறகு வரக்கூடிய ஒரு கங்கண சூரிய கிரகணமாகும்.

புவியை நிலவு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3,57,200 கிலோ மீட்டர் தூரத்திலும் புவியை விட்டு வெளியில் செல்கையில் 4,07,100 கிலோ மீட்டர் தொலைவிலும், சுற்றிவர நிலவு இருக்கும். தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்ற அளவு சற்று சிறியதாக இருக்கும்.

எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் ஒரு சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழு மையாக மறைக்க முடியாது. அதிகபட்ச கிரகணத்தின் போது சூரியனின் வெளி விளிம்பு ஒரு கங்கணம்போல வட்டமாக ஒளியுடன் தெரியும். இதுவே கங்கண சூரிய கிரகணம் எனப்படும்.

1901 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆந் திகதி கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிந்தது. 108 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்வரும் ஜனவரி 15ஆந் திகதி மீண்டும் சூரிய கிரகணம் தெரிய உள்ளது.

தமிழகத்தில்......

தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலும் சந்திரனின் நிகழ்வின் மையப்பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கு அதிகபட்ச சூரிய கிரகணத்தின்போது ஓரளவு வட்டமான வளைய வடிவில் சூரியன் தோன்றும், மேலும் கங்கண சூரிய கிரகணம் நிகழும்கால அளவு அதிகமாக இருக்கும்.

கன்னியாகுமரியில் கங்கண சூரிய கிரகணத்தைக் காண்பதற்கான விசேஷ ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கலைச் செல்வன், சுற்றுலா அதிகாரி அரிராதா கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், ஆர்.டி.ஓ.நடராஜன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நிருபர் களிடம் கூறுகையில்,

"108 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தெரியும் கங்கண சூரிய கிரகணம் கன்னியா குமரியில் முற்பகல் 11.04 மணிக்குத் தொடங்குகிறது. மதியம் 3.05 மணிவரை கிரகணம் தெரியும். 1.14 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிகழும்.

இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது , அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும். கண் பார்வை கூட இழக்க நேரிடலாம்.

எனவே தகுந்த அறிவியல் முறைப்படி சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு தமிழ்நாடு 'சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' உதவியுடன் கண் கண்ணாடிகள் மூலமாகவும், திரைகள் மூலமாகவும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் சூரிய கிரகணத்தை தெளிவாகப் பார்க்க ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றார்.

தமிழகம், கேரளா தவிர இந்தியாவின் பிறபகுதிகளில் இது பகுதி அளவில் சூரிய கிரகணமாக தெரியும். அவர்கள் சூரியனின் ஒரு பாதியை சந்திரன் மறைப்பதுபோல் இருப்பதை காண்பார்கள். சென்னையில் கிரகணத்தின் போதுசுமார் 88.5 விழுக்காடு வரை சூரியன் மறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.