ம க்கள் ஒன்றிணைந்து ஆதரவு தரும் பட்சத்தில் வடமாகாணத்தை நாம் சொக்கபுரியாக மாற்றியமைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபை என்பது எமது இலட்சியக் கனவு என்பது மட்டுமல்லாமல் அதனூடாக யுத்தத்தால் அழிவடைந்த எமது பகுதியை மீளக்கட்டியெழுப்ப முடியுமென்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.
அத்துடன், எமது மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேலும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிலை காணப்படும் அதேவேளை, அவற்றை நிறைவேற்றிக் கொடுப்பது மட்டுமல்லாமல் அரசியல் உரிமைகளை வென்றெடுத்து அதனூடாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதும் எமது தலையாய கடமையாகவுள்ளது.
இதனிடையே மக்கள் ஒன்றிணைந்த ஆதரவை எமக்கு தரும் பட்சத்தில் யுத்தத்தால் அழிவடைந்த வடபகுதியை மீளவும் கட்டியெழுப்பி சொர்க்கபுரியாக மாற்றியமைப்போம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனவே மக்கள் சரியான வழியை தெரிவு செய்வதன் மூலமே இது சாத்தியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வடமாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது சேர்ந்து போட்டியிடுவதா? என்பது குறித்து இதுவரையில் நாம் தீர்மானிக்கவில்லை. இப்போது அதுவல்ல பிரச்சினை எமது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திடமானதொரு அத்திவாரமிடுவதே காலத்தின் கட்டாயமாகும்.
மாகாணசபையை நாம் வென்றெடுக்கும் பட்சத்தில் எமது மக்களின் சகலவிதமான பிரச்சினைகள் மற்றும் தேவைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணமுடியுமென்றும் தெரிவித்தார்.
இதனிடையே அங்கு பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அமைச்சர் அவர்கள் இதன்போது பதிலளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’