வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்: ரோசய்யா


முகாம்களில் குடியிருந்துவரும் தமிழர்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட்டு, சிங்களர்களுக்கு சமமான அரசியல் சட்ட உரிமைகளோடும், சுய மரியாதையோடும், கண்ணியத்தோடும் வாழ அனுமதிக்கப்படும் வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாக ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், பாக் ஜலசந்திப் பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடிப்பதையே தமது வா‌ழ்வாதாரமாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரின் துன்புறுத்தலாலும் கொலைவெறித் தாக்குதல்களாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு, மீனவர் பிரச்சனைக்குத் தீர்வுகாண இலங்கை அரசிடம் வலியுறுத்தக் கோரி, 2011 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் இதுவரை 12 முறை முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களின் இன்னல்கள் குறித்து மத்திய அரசு பாராமுகம் காட்டி வரும் நிலையில், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் அல்லல்கள், முடிவில்லாத் துயரமாக தொடர்வது குறித்து இந்த அரசு ஆ‌ழ்ந்த கவலை கொண்டுள்ளது. நமது மீனவர்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியப் போக்கு இந்த அரசை மிகவும் வருத்தம் அடைய செ‌ய்துள்ளது. இந்தியக் குடிமக்களான அப்பாவித் தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும், இதுபோன்ற சமயங்களில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவும், இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களும், தமிழின மக்களின் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலையும் மிகவும் கண்டனத்திற்கு உரியவையாகும். இப்பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் மத்திய அரசு எடுத்துரைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மறு குடியமர்த்தி அவர்களது துயரங்களைத் துடைப்பதற்காக இலங்கை அரசு எடுத்துவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. முகாம்களில் குடியிருந்துவரும் தமிழர்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட்டு, சிங்களர்களுக்கு சமமான அரசியல் சட்ட உரிமைகளோடும், சுய மரியாதையோடும், கண்ணியத்தோடும் வாழ அனுமதிக்கப்படும் வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக இந்திய அரசு மற்ற நாடுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2011-ஆம் ஆண்டு ஜுன் திங்கள் எட்டாம் நாள் இந்தப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று ஆளுநர் ரோசய்யா கூறினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’