நீதித்துறை தொடர்பான திட்டங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே. சிசேன் தெரிவித்தார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும் நீதித்துறை தொடர்பான திட்டங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என அவர் குறிப்பிட்டார்.
நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே. சிசேனிற்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. நீதி அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பிலேயே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் தெரிவித்தார். அத்துடன், அமைச்சர் ஹக்கீமை பதவி விலகுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வினவினார்.
தடுப்புக் காவலில் உள்ள தமிழ் சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் விவகாரம் தமது அமைச்சோடு மாத்திரம் சம்பந்தப்பட்டது அல்ல. இதில் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஆகியன தொடர்புபட்டுள்ளன என அமைச்சர் ஹக்கீம் இதற்கு பதிலளித்தார்.
அத்துடன், இந்த கைதிகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றமற்றவர்களை விடுவிப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு புதிதாக மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம்,
"நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம் மயப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒரு தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது.
அதில் தமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.
சட்டக் கல்லூரிக்கு இம்முறை முஸ்லிம் மாணவர்கள் கூடுதலாக தெரிவு செய்யப்பட்டதோடு தம்மை தொடர்புபடுத்தி கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை.தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் பற்றியும் தூதுவர் அமைச்சரிடம் கேட்டறிந்தார்.
ஹலால் சான்றிதழ் விவகாரத்தை தொடர்புபடுத்தி ஆடை வர்த்தக நிலையங்களின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வது அர்த்தமற்ற செயலாகும். வர்த்தக போட்டி மனப்பான்மையே இந்த இனவாத செயல்களுக்கு பின்னணியில் இருப்பதாகவும் அரசாங்கத்தின் ஸ்திரத் தன்மையை சீர்குலைப்பதும் இதன் நோக்கமாக உள்ளது" என்றார்.
அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி வில்லியம் லின்ஸன்மீயர், நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’