வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 டிசம்பர், 2012

ஆஸி. தொடரின் பின்னர் மஹேலவின் பதவி விலகல் உறுதி


அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளே இலங்கை அணியின் தலைவராக மஹேல ஜெயவர்தனவின் இறுதிப் போட்டிகளாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் திலகரட்ண டில்ஷான் அப்பதவியிலிருந்து விலகியதையடுத்து மீண்டும் தலைவராகப் பதவியேற்ற மஹேல ஜெயவர்தன, ஒரு வருடகாலத்திற்கு மாத்திரமே அப்பதவியில் இருப்பேன் எனவும், அதன் பின்னர் தனது எதிர்காலம் தொடர்ந்து ஆராயவுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அவுஸ்திரேலியத் தொடரின் பின்னர் அணித்தலைமையிலிருந்து விலகுவதாக மஹேல ஜெயவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மஹேல ஜெயவர்தன இதை உறுதிப்படுத்தினார். 12 மாதகாலத்திற்கு மாத்திரமே தான் அணித்தலைமைப் பொறுப்பை ஏற்றதாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, அந்தக் காலம் இந்தத் தொடருடன் நிறைவடையவுள்ளதாகவும், இத்தொடரே அணித்தலைவராகத் தனது இறுதித் தொடராக அமையும் எனத் தெரிவித்த அவர், இத்தொடரின் பின்னர் அணித்தலைமைப் பதவியில் தொடர விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இத்தொடர் நிறைவடையும்வரை இதை அறிவிப்பதற்காகக் காத்திருக்க எண்ணியிருந்ததாகவும், ஆனால் தற்போதே அதை அறிவிப்பதாக முடிவு செய்ததாகத் தெரிவித்த அவர், தேர்வாளர்களுடனும் இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மஹேல ஜெயவர்தன பதவி விலகியதன் பின்னர் புதிய தலைவராக அன்ஜலோ மத்தியூஸ் நியமிக்கப்படுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’