வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 நவம்பர், 2012

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களது ஆங்கிலபாட கற்றலுக்கான வகுப்பறைகளை ஒருவார காலத்திற்குள் சீரமைத்துக் கொடுக்குமாறு துறைசார்ந்தோருக்கு அமைச்சர் பணிப்பு



யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களது ஆங்கிலபாட கற்றலுக்கான வகுப்பறைகளை ஒருவார காலத்திற்குள் சீரமைத்துக் கொடுக்குமாறு துறைசார்ந்தோரிடம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவசர பணிப்புரை விடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு இணைத்தலைமை தாங்கி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்குப் பகுதியில் மின்திட்டத்திற்கென நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்பில் தாம் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய பதிலைப் பெற்றுத் தருவதாகவும் மேலும் வலிதென்மேற்குப் பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாதுள்ள பகுதியிலுள்ள நுணசை வித்தியாலயத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.

இதனிடையே யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் கற்றல் வகுப்பறைகள் சீரமைக்கப்படாத காரணத்தினால் கற்றல் செயற்பாட்டின் போது அவர்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் கற்றலுக்கு ஏற்றவகையில் குறித்த வகுப்பறைத் தொகுதியை ஒருவார காலத்திற்குள் உடனடியாக சீரமைத்துக் கொடுக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர் காண்டீபனிடம் அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கைதடியிலுள்ள தற்போது காணியை பாவிக்கும் அதேவேளை, காணியொன்றினை பெற்றுக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் தீவக மக்களுக்கான போக்குவரத்து தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்தவர்கள் உரிய கவனமெடுக்க வேண்டுமெனவும் தீவகத்திலுள்ள பாலங்களின் புனரமைப்புத் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றினது வீதிப்புனரமைப்புத் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடாத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு காணப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன் மின்சாரம், நீர்விநியோகம், அனர்த்த முகாமைத்துவம், சமுர்த்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக தற்போதைய மழைகாலத்தில் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் அந்தந்தப் பகுதி பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட அரச செயலகத்திற்கு அறியப்படுத்தி அதனூடாக அனர்த்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது அங்கு கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி 2013ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் இரண்டாவது அதிகப்படியான நிதியினை வடமாகாணத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நேரடியாக தலையீட்டு ஒதுக்கியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார். அத்துடன் அடுத்த வருடம் வடமாகாணத்திற்கென 15 பேரூந்துகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்திற்கும் சில பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் “கல்வி தொடர்பான ஆய்வின் போது கருத்துத் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களுக்குள்ளும் ஆசிரியர் வளம் சீராக பங்கீடு செய்யப்பட வேண்டும் இதில் கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்வளப்பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்யும் வகையில் ஆசிரியர் வளப்பங்கீடுகள் அமையவேண்டும் என்பதை மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனகுறிப்பிட்டார்.
அத்தோடு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இசட் புள்ளிமுறைகாரணமாக நீதிமன்ற தீர்ப்பினையடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களை உள்வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்ற நிலையில் அங்கு இடப்பற்றாக்குறையும், நிலப்பற்றாக்குறையும் காணப்படுகின்றமையால் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதைப் போல் ஏனையபீடங்களின் வளாகங்களையும் இடவசதியுள்ள பகுதிகளில் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நெடுந்தீவு, நயினாதீவு போன்ற பகுதிகளுக்கு பயணிக்கும் உள்ளுர் மக்கள் போக்குவரத்திற்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் மேலுமொரு பயணமார்க்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராயவேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் குறித்த கடற்பகுதியில் பயணிக்கும் வடதாரகை எனும் படகு வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது. ஆனால் தொழில்நுட்ப பயிற்சிக்காக கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை படகோட்டிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் மூலமே தொடர்ந்து செலுத்தப்படுமென குறிப்பிடப்பட்டது எனவே அதை மீளப் பெற வீதிஅபிவிருத்தி அதிகாரசபையினர் முயற்சிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதேச சபைகளின் வீதிகள் புனரமைத்தல் தொடர்பாக கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், நெல்சிப் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொண்ட நிதியினை பிரதேச சபையினர் வீதிபுனரமைப்பிற்கே பயன்படுத்த வேண்டும் எனவும் சந்தை உட்பட கட்டிட அமைப்பு செயற்பாட்டினை வேறு திட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்த முடியுமெனவும் ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு வீதிகளில் நீர்தேங்குவதை தடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு உட்பட மாவட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதற்கு வடிகாலமைப்புக்களை சீர்ப்படுத்தல், பாதுகாப்பு மண்அணைகளை அகற்றுதல் போன்ற செயற்பாடுகளும், நீர்வழிந்தோடும் பகுதிகளுக்கு குறுக்காக மதில்களை அமைத்தலை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பினரின் வேலைத்திட்டம் தொடர்பாக ஆராயும் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள், மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் சில ஆரம்பிக்கப்பட்டு இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும், யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் முடிவுறுத்தி மக்களுக்கு குடிநீரை வழங்க வேண்டுமெனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரி பாரதிதாசனை கேட்டுக்கொண்டார்.

இன்றைய கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.











-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’