வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 நவம்பர், 2012

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணை இன்றேல் பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணிக்கவேண்டும்: ராதிகா


இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாவிடின் அங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிப்பதற்கான தீர்மானத்தை கனேடிய அரசு மேற்கொள்ள வேண்டுமென ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்துள்ளார்.
கனேடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தெரியவருவதாகவும் அந்நாட்டு அரசானது சுதந்திரமானதும் பாரபட்சம் அற்றதுமான சர்வதேச மனித உரிமை மீறல் விசாரணையை முன்னெடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கையினை எடுக்காவிடின் மாநாட்டை புறக்கணிப்பதற்கான முடிவினை கனேடிய ஆளும் கட்சி மீள் ஆய்வுக்குட்படுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென தெரிவித்துள்ள அவர் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிப்பதன் ஊடாக மற்றைய நாடுகளும் இதே தீர்மானத்தை மேற்கொள்ளவதற்கு ஊக்குவிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூனை இம்மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையில் மோசமான மனித உரிமைகள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இம்மாநாட்டை இலங்கையில் நடத்துவது தவறான முடிவு எனவும் பிரித்தானிய அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’