கொடிய யுத்தத்தின் நினைவுகளைச் சுமந்துள்ள மக்களிடையே நிலைத்திருக்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறுபட்ட சவால்களை இலங்கை இன்னும் எதிர்நோக்க வேண்டியுள்ளது என பிரித்தானியா கூறியுள்ளது.
சிறுவர் போராளிகளை பயன்படுத்திய மற்றும் வேறு சில பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடூரத்தைப் பற்றியும் நாம் அறிந்துள்ளோம் எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் றொபி புலொச், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சீனன்குடா கடற்படை முகாம், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளங்கள், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து பின்னர் அரசாங்கத்தால் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களையும் அவர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
'இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல நல்ல திட்டங்களையும் நாம் கண்டோம்' என புலொச் கூறியுள்ளார்.
'ஐக்கிய இராச்சியம், இலங்கையின் சகல பகுதிகளிலும் நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தை கொண்டுவர தனது உதவியை தொடர்ந்து வழங்கும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது விஜயத்தின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், கிழக்கு கடற்படை பிரதித் தளபதி, முல்லைத்தீவு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.விஜேதிலக்க ஆகியோரையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’