இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே நடத்தப்பட்டது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையே கூறியது. அதனை இந்தியாவும் நம்பியது' என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதுவர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அச்செவ்வியில் இலங்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இந்தியாவைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பாதுகாப்புத் துறையும் வெளிவிவகார அமைச்சும் 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. இலங்கையின் வட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு முதன்முதலாகச் சென்றுவந்த வெளிவிவகார செயலாளர் என்ற முறையில் சொல்கிறேன், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இல்லை. வீதி புனரமைப்பில் தொடங்கி வீடு கட்டித் தருவதுவரை 500 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை இந்தியாவே செய்து கொண்டிருக்கிறது. இதேவேளை, இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைசச்ர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் சி.ஆர்.ஜயசிங்க உள்ளிட்டோருடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்தியக் கடல் எல்லையில் இருந்து சர்வதேசக் கடல் எல்லை மிகவும் அருகில் 18 கடல் மைல் தொலைவில் அமைந்திருப்பதே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அதற்காகச் சட்டப்படி வழக்குகளைப் பதியலாம். எக்காரணம் கொண்டும் தாக்கக் கூடாது என்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அத்துடன், இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டை மடிப்பு வலை, விசைப் படகுகள் ஆகியவை இலங்கையின் வட பகுதியில் நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் பெரும்பாலான தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது என்பதோடு இலங்கையின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என்றும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஆனால், ஒரு முடிவுக்கு வராமலேயே அந்தப் பேச்சுவார்த்தை பாதியில் நின்று விட்டது. தமிழக மீனவர்களின் சிக்கல்களையும் இலங்கை மீனவர்களின் சிக்கல்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டு இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவ அமைப்புகளுடன் பேசி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வடிவமைத்துக் கையெழுத்திட்டால் தான் தீர்வு காணமுடியும். இப்போது போர் முடிந்து இலங்கையில் அமைதி நிலவுவதால், அதற்கான சாத்தியங்கள் அதிகம். இலங்கை என்பது இந்தியாவின் நட்பு நாடு. அதனால், அவர்களுக்கு இந்தியா சில உதவிகள் செய்ததாக அறிகிறேன். அண்டை நாடு என்ற முறையில் இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை கூற முடியுமே தவிர, ஆணையிட முடியாது. விடுதலைப் புலிகளுடனான போரில் அப்பாவிப் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என இந்திய பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வேண்டுகோள் வைத்தனர். நானும் பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனனும் பல முறை அலரி மாளிகையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பாகப் பேசினோம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போர் நடக்கிறது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு என்ன கோபம்? விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள் என ஒட்டுமொத்த ராஜபக்ஷ அமைச்சரவையே கூறியது. அதனை இந்தியாவும் நம்பியது. இலங்கைப் போர் முற்றிலும் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்த ஒன்று. மரணம், எல்லாவித சமாதானத்துக்கும் சமாளிப்புக்கும் அப்பாற்பட்டது என்பதை இந்த உலகம் உணர வேண்டும். போரின்போது அப்பாவிகள் பாதிக்கப்படும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’