வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 அக்டோபர், 2012

கூட்டமைப்போடு மு.கா. தலைமை முரண்பட்டதில்லை: ஹக்கீம்


மிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் ஆதரவு வழங்காமையினை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எமது கட்சிபற்றியும் அதன் தலைமையை பற்றியும் தாறுமாறாக ஒவ்வொரு நாளும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒரு போதும் முரண்பட்டது கிடையாது. அவர்களை விமர்சித்ததும் கிடையாது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
'கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியினை அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் சேதம் இல்லாத விட்டுக்கொடுப்பினை செய்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வந்த திவிநெகும சட்டமூலத்திற்கான ஆதரவானது சேதம் இல்லாத விட்டுக்கொடுப்பல்ல என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதனை எமது கட்சி பக்குவமாகவும், நேர்மையாகவும் கையான்றுள்ளது. இவைகளைப் பற்றி விமர்சிப்பவர்களைப் பற்றி எமக்கு கவலையில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, 'கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு விட்டுக் கொடுத்தமை சேதம் இல்லாத விட்டுக் கொடுப்பாக பார்க்கிறது. அதனை அடுத்த கட்டமாக ஜனாதிபதி எமக்கு வழங்குவார். எந்த நோக்கத்திற்காக திவிநெகும சட்டமூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியது என்பது பற்றி மாகாணசபை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளேன். இதுபற்றி மாகாணசபை உறுப்பினர்களின் பார்வை வித்தியாசமாக இருந்தாலும், அணியின் ஒற்றுமை அவசியமாகும். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை எத்தரப்பினரோடு சேர்ந்து அமைப்பது என ஆராய்ந்த போது எமக்கு முதலமைச்சர் என்ற விடயத்தினைவிட கட்சியை காப்பாற்றுவது என்ற விடயமே முக்கியத்துவம் பெற்றது. இதனால் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்ததினால் கட்சியும், அதன் தலைமையும் பல்வேறு தரப்பினரினால் விமர்சிக்கப்பட்டன. அதனைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. நாம் சரியான தருணத்தில் சரியான முடிவினை எடுக்க வேண்டும். பிழையான நேரத்தில் சரியான முடிவு எடுத்தால் அது பிழையாக அமைந்துவிடும். இதனால் எமது எதிரிகள் தங்களுடைய இலக்கினை அடைந்து விடுவார்கள். முஸ்லிம் காங்கிரஸை மூக்கனங்கயிறு போட்டு விரும்பிய திசைக்கு கொண்டு போகலாம் என சில சக்திகள் நினைக்கின்றனர். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்படவில்லையென்றால் கட்சியை பிளவுபடுத்தும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளனர். வருகின்ற காலங்கள் ஆபத்தாக அமையலாம். 13ஆவது திருத்தச்சட்டத்தினை கூட இல்லாமல் செய்வதற்கு சில சக்திகள் வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன. இதனை நாம் அங்கிகரிக்கப்போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற போதிலும். நாங்கள் வெறும் போடுகாயாக இருக்கப் போவதில்லை. எமது இயக்கத்தினுடைய அரசியல் பலத்தினை பாதுகாத்துக் கொள்வதுதான் இன்று நமக்கு மத்தியிலுள்ள பாரிய சவாலாகும். எமது பலம் எமது ஒற்றுமையில் தான் உள்ளது. எமக்கு ஆசை வார்த்தைகள் காட்டி எமது பலத்தினை பிரித்து விடலாம். அதற்கு சோரம் போகக்கூடாது. எனவே கிழக்கு மாகாண சபை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தூரநோக்கோடும், எந்தச் சுயநல நோக்குமில்லாம் மக்களின் நலனுக்காக தெளிவான முடிவுகளை எடுத்துள்ளது. இந்த இயக்கம் அரசாங்கத்தின் அங்கமாக இருந்து கொண்டு நமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க தொடர்ந்தும் போராடயுள்ளது. என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’