வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 செப்டம்பர், 2012

வலிவடக்கின் மேலும் சில பகுதிகள் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா



லிவடக்கின் விடுவிக்கப்படாதுள்ள பெரும்பாலான பகுதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதிகளிலும் மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளதாகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றைய தினம் (11) அமைச்சர் தலைமையில் செயலக மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் விடுவிக்கப்படாதிருந்த பல பகுதிகள் கட்டம் கட்டமாக ஏற்கனவே விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியேறியுள்ள நிலையில், மேலும் பல பகுதிகளும் இதேபோன்று விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளிலும் மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் போதுமான அளவில் பூர்த்தி செய்யப்படவில்லையென்றும், அத்தேவைகளையும் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் துறைசார்ந்தோரூடாக மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் யுத்தத்தின் போது தமது வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய அரசின் வீட்டுத்திட்டம் கிடைக்க வழியேற்படுத்தப்படும் அதேவேளை, யுத்தகாலத்தின் போது அரச உத்தியோகத்தர்களின் வீடுகள் சேதமடைந்திருப்பின் அவற்றின் புனரமைப்பிற்கு வங்கிகள் ஊடாக இலகு கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் இதுவரையில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது நலன்புரி முகாம்களில் வாழும் மக்களது நலன்கள் விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் உறுதிமொழி வழங்கியதுடன் அரசின் கொள்கைப்படி எதிர்காலங்களில் இப்பகுதியில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்க முடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இதனிடையே வெளியூரிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதால் உள்ளூரில் பயிரிடப்படும் வெங்காயத்தை விற்பனை செய்வதில் தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியதற்கு எதிர்காலங்களில் வெங்காயம் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளின் இறக்குமதியை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், விவசாய உற்பத்திகளின் உள்ளூர் சந்தை வாய்ப்புத் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

சேந்தான்குளம் கடற்கரைப்பகுதியில் துறைமுகமொன்றை அமைப்பது தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்படுமென்பதுடன், அப்பகுதி கடற்றொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு வீதிகளில் மின்விளக்குகளைப் பொருத்துமாறு பிரதேச சபையினரிடம் பணிப்புரை விடுத்த அமைச்சர் அவர்கள் இவ்வாறு வீதிவிளக்குகளை குறைந்த கட்டணத்தில் பொருத்துமாறும் இலங்கை மின்சார சபையினரையும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே தற்போது வடக்கு புன்னாலைக்கட்டுவன் வரையிலான வடபிராந்திய இலங்கை போக்குவரத்துச் சேவையை பொன்பரமானந்தா மகாவித்தியாலயம் வரை நாளை முதல் விஸ்தரிக்குமாறும் துறைசார்ந்தோரிடம் பணிப்புரை வழங்கினார்.

அத்துடன் கால்நடை, சுகாதாரம், மற்றும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபை ஆகியவற்றின் கீழான வீதிகளின் புனரமைப்புப் கணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, வலிவடக்குப் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன், ஈ.பி.டி.பியின் வலிகாமம் அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்), ஈ.பி.டி.பியின் வலிவடக்கு அமைப்பாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்டவர்களுடன் துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.






-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’