கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது என அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாகவும் ஹக்கீம் தெரிவித்தார். "கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் முதலில் கடமைப்பட்டுள்ளேன். முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட அனைத்து தொகுதிகளிளும் நாம் வெற்றியடைந்துள்ளோம்". "மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு முன்னர், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும். எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம்" என அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’