கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. கிழக்கில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடற்படையினரும ஆயுதங்களை வைத்துள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அவர்கள் கூறுவது போன்று கிழக்கு மாகாணத்தில் ஓர் ஆயுதக் குழுவும் இல்லை. மாறாக அரசியல் கட்சிகளே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடற்படையினருமே ஆயுதங்களை வைத்துள்ளனர். வேறு எவரிடமும் ஆயுதங்கள் இல்லை. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டது. வேறு யாரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. மேலும் ஆயுதக் குழுக்கள் குறித்து எமக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. எனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இல்லை என்பதனை தெரிவிக்கின்றோம். இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தை முடித்து அப்பகுதிகளில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் அரசாங்கம் நாட்டை ஒற்றுமைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அரசாங்கம் யாரையும் இனத்துவ அடையாளம் கொண்டு நோக்குவதில்லை. மாறாக அனைத்து மக்களும் தேசிய இனம் என்ற அடிப்படையிலேயே பார்க்கின்றோம். எமது கட்சி மட்டுமே கிழக்கில் அனைத்து இன வேட்பாளர்களையும் உள்ளடக்கி தேர்தலில் போட்டியிடுகின்றது. அந்த வகையில் இன ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. நான் திருகோணமலை மாவட்டத்துக்கு பொறுப்பாக செயற்பட்டுவருகின்றேன். நாட்டில் கிழக்கு மாகாணத்தை சிறந்த அபிவிருத்தி அடைந்த மாகாணமாக உருவாக்குவதில் நாங்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். மேலும் இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாரிய வெற்றியை பெறும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’