ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தை கட்டியெழுப்பல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி நாளை இலங்கைக்கு வரவுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஆகியன தொடர்பாக அவரின் விஜயம் அமைவதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்வார இறுதிவரை அவர் கொழும்பில் தங்கியிருப்பார். இவ்விஜயத்தின்போது, அரசாங்க அதிகாரிகள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரை அகாஷி சந்திக்கவுள்ளதுடன் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார். இலங்கையின் வட பகுதிக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானின் விசேட சமாதான தூதுவராக 2002 ஆண்டு அகாஷி நியமிக்கப்பட்ட பின்னர் அவர் 22 ஆவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’