முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இன்னமும் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு வட, கிழக்கு பெண்கள் சம்பந்தமாக தயாரித்த அறிக்கை ஒன்றை கண்டி எர்ல்ஸ் ரிஜென்சி ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் கையளித்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தி தொடர்பாக இலங்கை பெண்களுக்கான நிகழ்ச்சித் திட்டம்' என்ற பெயரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'பெண்கள் அமைப்பு இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் மிக பொருத்தமாக உள்ளன. இதனை அமுல்படுத்துவதில் நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக கொழும்பு முதல் கிராமங்கள்வரை அதிகாரப் பகிர்வு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கு பாரிய நிதி ஒதுக்கப்படுதல் வேண்டும். அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் பெண்களுக்கு கிடைக்கும். பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலும் புரிந்துணர்வையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பினால் மட்டுமே பெண்களது அபிவிருத்தியை பூரணமாக முன்னெடுக்க முடியும். உலகில் எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் எந்தக் காலத்தில் நடந்தாலும் அதனால் கூடுதலாகப் பாதிக்கப்படுவோர் பெண்களே. எனவே தீர்மானம் எடுக்கும் அமைப்புக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். எனது கருத்தின்படி ஆகக் குறைந்தது தேர்தல்களில் 30 சதவீதமான பெண்களுக்காவது சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்' என்றார். அமைச்சர் சுமேதா டீ.ஜயசேன, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற லைபீரியவை சேர்ந்த லெமா கோபி, டிஸ்னி நிறுவனத்தை சேர்ந்த அல்பியன் டிஸ்னி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் சுமித்திரா ரத்நாயக்க, தலைவி விசாகா தர்மதாச உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’