மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை தொலைபேசியில் அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீனை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது. 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் செல்ல மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க உத்தரவிட்டார்.
கடந்த ஜுலை மாதம் 18ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக மன்னார் நீதிமன்றத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதோடு குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிஷாட் பதியுதீன், மன்னார் நீதிபதி ஏ.ஜுட்சனுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த இரண்டு வழக்குகளும் இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அமைச்சர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அனுர மத்;தேகொட தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான என்.எம்.சகீப், எம்.எம்.சுகைர் உட்பட 23 சட்டத்தரணிகளும் மறுதரப்பில் 4 சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அமைச்சர் குறித்த குற்றத்தை செய்யவில்லை என அமைச்சர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அமைச்சருக்கு எதிராக பொலிஸார் மற்றும் இரகசியப் பொலிஸார் குற்றம் சுமத்தும் அளவிற்கு போதிய ஆவணங்கள் எவையும் இல்லை என சிரேஷ்ட சட்டத்தரணி அனுர மத்;தேகொட நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே குற்றம் செய்யாத ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது எனவும் இது சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் இரகசியப் பொலிஸார் மற்றும் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் வழங்கிய அறிக்கையினைத் தொடர்ந்து சாட்சிகளின் அடிப்படையில் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு அரச ஊழியர்களைக் கொண்ட 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதியளித்தார். குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மேலதிக நீதவான் அன்றையதினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு உத்தரவிட்டார். இதேசமயம் மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அரசாங்க உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 18 சந்தேக நபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க உத்தரவிட்டார். (படங்கள் - ரொமேஸ் மதுசங்க,எஸ்.ஜெனி)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’