ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள முக்கியமான 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாகாணசபைத் தேர்தல் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் முன்பாகவே பாரிய கூட்டத்தை நடத்திவிட்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் கூடிய விரைவில் இணையவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சசர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டம் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்டத்திற்கான இணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை வேட்பாளருமான நஜீப் ஏ.மஜீத் தலைமையில் கிண்ணியாவில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'இந்தத் தேர்தல் மட்டுமன்றி எந்தத் தேர்தலிலும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றி பெறமுடியாது. அவரால் நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் இல்லையென்றே அவர்கள் எங்களுடன் இணையவுள்ளதான நல்ல செய்தியை கூறுகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னர், அப்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கட்சியும் வேண்டாம், ரணில் விக்கிரமசிங்கவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துகொண்டனர். அவ்வாறு இணைந்துகொண்டவர்களில் நானும் ஒருவன் ஆவேன். தற்போது யானைகள் அனைத்தும் காட்டுக்கு சென்றுவிட்டன. ஐக்கிய தேசியக் கட்சி அழிந்துவிட்டது. யானை பலம் இன்றிப் போய்விட்டது. இன்று தண்ணீர் குடிப்பதற்குக் கூட அதற்கு சக்தி இல்லை. உணவை உட்கொள்ளவும் வழி இல்லை. அது இப்போது எங்கள் கடைக்கு வாழைப்பழம் உட்கொள்ள வருகின்றது. இந்த நிலையில், உங்கள் பொன்னான வாக்குகளை யானைக்கு போட்டு வீணாக்க வேண்டாம். ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் 22 இற்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்துள்ளர். மாகாணசபைத் தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்துள்ளர். மரண சங்க கமிட்டித் தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்துள்ளர். தற்போதைய அரசியல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு ஓடுவதற்கும் பாய்வதற்கும் இரும்புகளைத் தூக்கி வீசுவதற்கும் கூட அவரிடம் ஆட்கள் இல்லை. அவரை மீண்டும் தோல்வி அடையச் செய்வதற்கு நாம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும். தோற்கடிக்கும் பட்டியலில் அவரை இணைத்துக்கொள்வோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலஹெதர கிராமத்தின் வேட்பாளர். அவர் கிண்ணியாவில் வாக்கு கேட்பதற்கு என்ன உரிமை இருக்கின்றது? கலஹெதர கிராமத்தில் எனது நண்பர் ஒருவர் போட்டியிடுகிறார். இவருக்கு அங்கு நடைபெறும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை விட அதிகூடிய வாக்குகள் கிடைக்கும். அவர் (ரவூப் ஹக்கீம்) உங்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றார். எங்கள் கட்சியைச் சேர்ந்த ஜானதிபதியைச் சந்திப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பின்னால் வரவேண்டியது இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எமது ஜனாதிபதியை நாம் நேரடியாக சந்திக்கலாம். எமது குறைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். இந்தத் தேர்தலானது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்தற்கான தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலானது நாடாளுமன்றத்தை மாற்றி அரசாங்கத்தை மாற்றி அமைப்பதற்கான தேர்தலும் அல்ல. இந்தத் தேர்தலானது உங்கள் கிராமத்தில் அபிவிருத்திகளை மேற்கொண்டு கிராமத்தில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான தேர்தல் ஆகும். உங்களின் பிரச்சினைகள், பிள்ளைகளின் பிரச்சினைகள், சமுர்த்தி பிரச்சினைகள், வீதி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் கட்சி எங்களது கட்சியே ஆகும். எனவே, எதிர்வரும் 8ஆம் திகதி நேரத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று உங்கள் பொன்னான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்புக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என்றார். இந்தக் கூட்டத்ததில் வேட்பாளர் ஆதம்பாவா தௌபீக், முன்னாள விவசாய அமைச்சரும் வேட்பாளருமான துரையப்பா நவரெட்னராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’