அ மெரிக்காவின் சி.ஐ.சி எனப்படும் நிறுவனத்திற்கு வாழைத்தோட்ட செய்கைக்காக 5000 மற்றும் 10000 ஏக்கர் காணிகளை வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள காணிகள் அமெரிக்காவுக்கு இலங்கை அரசாங்கத்தினால் தாரை வார்த்துக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களும் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் அமெரிக்காவின் பிரஜாவுரிமையையும் பெற்றுள்ளனர்' என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களின் பிரச்சினையாக காணிப்பிரச்சினை உள்ளது. கிழக்கு மாகாணத்திலும் கூட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் காணிப்பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் இந்த அரசாங்கம் வெளிநாடுகளுக்கு காணிகளை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.சி எனப்படும் நிறுவனத்திற்கு வாழைத்தோட்ட செய்கைக்காக 5000 மற்றும் 10000 ஏக்கர் காணிகளை வழங்கியுள்ளது. இந்த காணிகளில் செய்யப்படும் வாழைப்பங்களை கூட இந்த நாட்டு மக்களால் சாப்பிடமுடியவில்லை. அதையும் கூட வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இதேபோன்று பல காணிகள் அமெரிக்காவுக்கு இந்த அரசாங்கத்தினால் தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதர்களான பசில்ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகிய இருவரும் மற்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் அமெரிக்காவின் பிரஜைகளாகவும் இலங்கை பிரஜைகளாகவுமுள்ளனர். இவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக எதுவுமே பேசமாட்டார்கள். ஜனாதிபதி யுத்த வெற்றியை தனது தனிப்பட்ட சொந்த வெற்றியாக காட்டி வருகின்றார். யுத்த வெற்றியை ஜனாதிபதி தனது குடும்பத்திற்கும் தனது சுற்றுப்புறத்திலுள்ளவர்களுக்கும் பயன்படுத்தி வருகின்றார். இந்த நாட்டிலுள்ள முப்படைகளும் மக்களும் செய்த தியாகம் தான் இந்த யுத்த வெற்றிக்கு காரணமாகும். இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வரிப்பணம் செலுத்துகின்றனர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் ஒரு புறம் பொருளாதாரப்பிரச்சினை மற்றொரு புறம் இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளாகும். இளைஞர்கள் இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகி சமூகச் சீரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் இடம்பெற்று வருகின்றன. இன்று நீதிமன்றத்திற்கு கற்கள் வீசப்படுகின்றன. நீதித்துறை கூட மலினப்படுத்தப்படும் அளவுக்கு இந்த நாட்டு அரசாங்கம் செயற்படுகின்றது. இதனால் சட்டத்தரணிகளும் வீதிகளில் இறங்கி போராடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கூட அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படமுடியாத நிலைமை உள்ளது. இன்று இந்த நாட்டிலுள்ள புத்தி ஜீவிகள் விவசாயிகள், மின்சார சபை ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், அதன் பேராசிரியர்கள், சுகாதாரத்துறையினர் அனைவருமே வீதிகளில் இறங்கி இந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுகின்ற ஒரு நிலையை பார்க்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் மோகன் மற்றும் வேட்பாளர்களான ஏ.றவூப், எம்.அஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’