சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் தெருநாய்களைப் போன்றவர்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விமர்சித்துள்ளார்.
ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எவரும் கிரிமினல் குற்றங்கள், ஊழல் அல்லது மோசடிகளில் குற்றவாளிகளாக காணப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தங்காலை ஐ.ம.சு.கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக அவர் கூறுகையில், நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து தான் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்தார். 'இந்நபர்களுக்கு என்ன கோளாறு என்று எனக்கு புரியவில்லை. என்னை போன்று ஸ்ரீல.சு.க. அரசியல்வாதிகள் பலர் பல தசாப்தங்களாக இத்தகைய குற்றச்சாட்டுகளின்றி அரசியலில் ஈடுபடுகின்றோம். ஆனால், இப்போது ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசியல்வாதிகள் பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவi நாம் காண்கிறோம். இவை கட்சியின் மதிப்பை களங்கப்படுத்துகின்றன. இது நிறுத்தப்படுவது அவசியம். நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு எதிராக மாத்திரமல்லாமல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தொடர்பாகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என அவர் கூறினார். நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்படுபவர்கள் கட்சியிலும் அரசாங்கத்திலும் வகிக்கும் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவார்கள். அத்தகைய நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட நியமனப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’