இ லங்கை அரசிடம் புலி போல் பாய வேண்டிய இந்திய அரசு, சுண்டெலி போல் பணிந்து செல்வதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவின் வேறு மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்படும் விவகாரத்தில் கருணாநிதி நழுவலாக பேசியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்தும், எனது கடும் கண்டனத்தையடுத்தும், இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சியை சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்திலிருந்து பெங்களூரில் உள்ள 'எலகங்கா' விமானப்படை நிலையத்திற்கு மாற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நான் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், 'தமிழினத் தலைவர்' என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்க காரணமாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவிகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், தமிழ் உணர்வே இல்லாமலும், நழுவலாகவும் பேசியிருக்கிறார். இதை நினைக்கும் போது,முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து, அதை கேரள அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றி, கடைசியில் அதையும் கைவிட்ட நிகழ்ச்சிதான் நினைவிற்கு வருகிறது. தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி.திமுக தலைவர் கருணாநிதியின் இந்த நடவடிக்கைகள் 'உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகின்றன. தமிழ் இனத்தின் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தான் தாங்கிப் பிடித்திருக்கும் மத்திய அரசை வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும் இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மத்திய அரசை மிரட்டி சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கைத் தமிழர் நலனுக்காக அவ்வாறு செயல்படாதது அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது. புலி போல் பாய வேண்டிய இந்தியப் பேரரசு, சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்' என ஜெயலலிதா தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’