சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 620 பேர் கடந்த ஏழு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40பேர் மனிதக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட முகவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விடுவிப்பாளர்கள் என்ற போர்வையில் மனிதக் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் சதித் திட்டங்களுக்குள் பொதுமக்களை சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸ் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த படகுகளை கடந்த 11 மற்றும் 20ஆம் திகதிகளில் கடற்படையினர் கைப்பற்றியதுடன் அவற்றில் பயணித்த 138பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடப்படும் சந்தேகநபர்கள் மூவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்காக மேற்படி 138 பேரிடமிருந்தும் தலா இரண்டு இலட்சம் முதல் 12 இலட்சம் ரூபா வரை மேற்படி சந்தேகநபர்கள் வசூலித்துள்ளார்கள் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வெள்ளத்தம்பி சுரேஸ்குமார் (வயது 38), வெள்ளத்தம்பி சுதாகரன் (வயது 39) மற்றும் தண்டாயுதபானி கரிகாலன் (வயது 39) ஆகிய மூவரமே நேற்று இரவு கைது செய்யப்பட்டவர்களாவர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அரசில்வாதியாகச் செயற்படும் அதேவேளை புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடையவர் என்றும் மனிதக் கடத்தல் மூலம் இவர் சுமார் இரண்டரை கோடி ரூபாவினை வசூலித்துள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. மனிதக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45ஆவது பிரிவின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது. தமிழ் மக்கள், இத்தனை காலமும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள், பணம், நகை போன்றவற்றை விற்று பெற்றுக்கொள்ளும் பணத்தை தமிழ் மக்களின் விடுவிப்பாளர்கள் என்ற போர்வையில் அரசியல் செய்துவரும் நபர்களின் சதித்திட்டத்தில் சிக்கி அவர்களிடம் இழந்து வருகின்றனர். இவ்வாறான நபர்களிடம் மிகவும் கவனமான இருக்குமாறும் அவர்களின் சதி வலைகளுக்குள் சிக்க வேண்டாம் என்றும் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்' என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’