முஸ்லிம்களைப் பற்றிய ஒரேவிதமான வரலாற்றுப் பார்வை கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணப்போக்குகளில் புதிய மாற்றங்கள் வேண்டும். அறிவார்ந்த ஒரு சமூகமாக உலகம் பூராவும் புலம் பெயர் ஈழத் தமிழர்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிடம், இலங்கைவாழ் முஸ்லிம்கள் பற்றி இதுகாறும் இருந்து வரும் பழமைவாத கருத்துப் பார்வைகளிலிருந்து, நவீனத்துவப் பார்வை கொண்ட அணுகுமுறை அவசியம்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இலங்கைவாழ் சிறுபான்மைச் சமூகங்கள் என்ற வகையில் சிறந்த இணக்கப்பாடான நல்லுறவைப் பேணுவதற்கும், பெரும்பான்மைச் சமூக ஆட்சியாளர்களின் அகங்கார அடக்குமுறை முறைகளிலிருந்து விடுபடுவதற்கும், ஸ்ரீலங்காவில் சிறப்பான எதிர்காலமொன்றை நமக்கென நிலைநிறுத்தவும் இது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்தமை வருமாறு:- மிக நீண்ட காலமாக இருந்து வரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான், தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம்களில் பலரும், தமது வெற்றிக்குப் பின்னர் பெரும்பான்மையினர் கட்சிகளுக்குத் தாவினர் அமைச்சுப் பதவிகளை ஏற்று, தமிழர் சமூகத்தை ஏமாற்றினர் என்பதாகும். இன்றும் இது பற்றி ஊடகங்களில் கருத்துக்களை முன்வைக்கின்ற தமிழ் புத்திஜீவிகள் ஒருபுறம். மக்கள் சந்திப்புகளிலும், கூட்டங்களிலும், ஊடக நேர்காணல்களிலும் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் இன்னொருபுறம். இவ்விதமாக குற்றச்சாட்டுகளை அடுக்கும் அவர்கள் அத்தகைய கட்சித் தாவல்களெல்லாம் தனிநபர்களின் பொறுப்புக் கூறலே என்பதை மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள். இவர்களில் எவரையும் முஸ்லிம் சமூகம் தள்ளிக்கொண்டுபோய் அமைச்சர்கள் ஆக்கவில்லை. அவர்கள் தேவைக்கும் விருப்புக்கும் ஏற்றவகையில் அவை நடந்தேறின. தொடர்ச்சியாக தமிழர்கள் முஸ்லிம்களை வேட்பாளராக நிறுத்தியும், அவர்கள் வெற்றிபெறவே செய்தனர். முஸ்லிம்கள் தமிழர் அரசியலை விட்டும் நீங்க விரும்பவில்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும். இதேவேளை, அதே அமைச்சர்களை முஸ்லிம் சமூகம் தோற்கடிக்கவும் செய்தது. இத்தகைய அரசியல் போக்கு என்பது முஸ்லிம்களிடம் மட்டுமல்ல, தமிழர்களிடமும் உண்டு. பெரும்பான்மை தரப்பாரிடம் சேவகம் பண்ணிவரும் தமிழ் அரசியல்வாதிகள் அன்று தொடக்கம் இன்றுவரை கணிசமாக உண்டு. இவையெல்லாம் தனிநபர்களின் செயற்பாடே தவிர, சமூகத்தின் பிரதிபலிப்புக்கள் அல்ல. தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்களுக்கு உண்டு. முஸ்லிம்களில் ஏதோ ஓரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த சமூகமும் அந்நாட்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தது. வடக்கே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது உள்ளடங்களாக பல்வேறு காயங்கள் வரலாற்றில் அழிக்கமுடியாத வடுக்களாக இருக்கின்றன. தமிழர் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வரும் மற்றுமொரு விடயம்தான், அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளுடன் முஸ்லிம்களும் உடன்பாடு கொள்ள வேண்டுமென்பது. இதுவும் ஒரு தவறான புரிந்துணர்வாகும். உலக வரைபடத்தில் இந்தியா என்றொரு தேசம் உள்ளவரை தமிழ் ஈழம் என்பது சாத்தியமற்ற விடயமாகும். தனது மாநில ஆட்சிக்கு பங்கம் வருவதை இந்தியா ஒரு போதும் விரும்பாது. இத்தகைய சாத்தியப்பாடற்ற விடயங்களுடன் முஸ்லிம்கள் உடன்படுவது பொருத்தப்பாடாகாது. அதேவேளை அசாதாரண நிலைமைகளை உருவாக்கி, மக்களை அனாவசியமான பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும் அரசியல் போக்குகளை ஸ்ரீலமுகா முன்னெடுக்க விரும்பவில்லை என்பதையும் தமிழர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’