ம காத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த போது எழுதிய அரிய கடிதங்கள், அவருடைய ஆவணங்கள், புகைப்படங்களை விலைக்கு வாங்க, ஏல நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் அடுத்த வாரம் நடக்க இருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்காவில் கடந்த 1904ம் ஆண்டில் காந்தி பணி செய்த போது, அவருடைய நெருங்கிய நண்பராக ஹெர்மான் கலன்பேக் இருந்தார். அப்போது காந்தி நிறைய கடிதங்கள் எழுதியுள்ளார். இந்த அரிய கடிதங்களில் காந்தியின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் அடங்கி உள்ளன. காந்தியின் முதல் மகன் ஹரிலால், ஹெர்மனுக்கும் காந்தியின் 2வது மகன் மணிலாலுக்கும் இருந்த நெருங்கிய நட்புறவு, 3வது மகன் ராம்தாஸ், மற்ற குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பற்றிய விவரங்கள் இந்த கடிதங்களில் இடம்பெற்றுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமான இந்த அரிய கடிதங்கள், ஆவணங்கள், புகைப்படங்களை சர்வதேச ஏல நிறுவனமான சோத்பி வரும் 10ம் தேதி ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து, ஏல நிறுவனத்துடன் இந்திய கலாசாரத் துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காந்தியின் அரிய கடிதங்கள், படங்களை விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இதனால் 10ம் தேதி நடக்க இருந்த ஏல நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சோத்பி நிறுவனம் நேற்று அறிவித்தது. காந்தியின் அரிய கடிதங்கள் 5 லட்சம் பவுண்ட் முதல் 7 லட்சம் பவுண்ட் வரை விலை போகும் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசு எவ்வளவு பணம் தரப் போகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. காந்தியின் அரிய கடிதங்கள் விலைமதிப்பற்றவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த கடிதங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’