வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 ஜூன், 2012

அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் விழுவது இதுவே முதல் முறை!



செ ன்னை மாநகரம் எத்தனையோ விபத்துக்களை சந்தித்திருக்கிறது. கோரமான, மோசமான விபத்துக்களை சந்தித்திருக்கிறது. ஆனால் சென்னை மாநகரின் முத்திரை அடையாளமான அண்ணா மேம்பாலத்திலிருந்து ஒரு பஸ் விழுந்து இதுவே முதல் முறை என்பதால் சென்னை முழுவதும் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
முன்பு ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்பட்டது அண்ணா மேம்பாலம். இதற்குக் காரணம், அப்பகுதியில்தான் ஜெமினி ஸ்டூடியோ முன்பு இருந்தது. பிறகுதான் இதற்கு அண்ணா மேம்பாலம் என பெயர் மாற்றினர். மத்திய சென்னையின் மிக முக்கிய பாலம் இது. 1973ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் இது. மேலும் இதுதான் சென்னை மாநகரின் முதல் மேம்பாலமும் கூட. அண்ணா சாலை, உத்தமர் காந்தி சாலை என அழைக்கப்படும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. அண்ணா சாலையின் நட்ட நடுவில் இருக்கும் இந்த மேம்பாலத்தால் அண்ணா சாலையின் இரு பக்கம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஜிஎன் செட்டி சாலை உள்ளிட்டவை பயன் பெறுகின்றன. இந்த மேம்பாலத்தின் ஒரு முனையில்தான் அமெரிக்க தூதரகம் உள்ளது. மறுபக்கம் முன்னாள் சபையர் தியேட்டர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகம் உள்ளிட்டவை உள்ளன. முன்பு ஜெமினி ஸ்டுடியோ இருந்த இடத்தில் இப்போது பார்சன் மேனார் அடுக்குமாடிக் கட்டடம் வந்து விட்டது. அதேபோல பார்க் ஹோட்டலும் வந்து விட்டது. இந்த பாலத்திற்கு அடுத்த பக்கம்தான் கடந்த திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா உள்ளது. இந்த மேம்பாலத்திற்குக் கீழ்தான் கிண்டியில் குதிரைப் பந்தயம் ஒழிக்கப்பட்டதன் நினைவாக குதிரையுடன் கூடிய வீரன் சிலை நிறுவப்பட்டது. இந்த மேம்பாலத்தை ஒரு நாளைக்கு குறைந்தது லட்சம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் பிரிக்க முடியாத ஒரு அடையாளமான அண்ணா மேம்பாலத்தி்ல இதுவரை பெரிய அளவில் விபத்து நடந்ததில்லை. சிறிய அளவிலான விபத்துக்கள் நடந்துள்ளன. அதேசமயம், அந்தப் பாலத்திலிருந்து ஒரு பேருந்து விழுவது என்பது இதுதான் முதல் முறையாகும். எனவே சென்னை முழுவதும் இந்தவிபத்துச் செய்தி காட்டுத் தீ போல பரவி விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் விழுந்த பஸ்ஸை பார்க்க அங்கு கூடியதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய் விட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’