எல் .ரி.ரி.ஈ. தற்கொலை குண்டுதாரி எனக் கூறிக்கொண்டு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்திற்கு வந்து அடைக்கலம் கோரியவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொஷிங்டனுக்கு 2005 இல் அறிவித்தது என ஒரு விக்கிலீக்ஸ் கேபிள் தகவல் தெரிவிக்கின்றது.
இவரை விசாரித்தபோது அமெரிக்க தூதுவரகத்துக்கு ஆபத்து ஏதும் இல்லை என அறிந்துகொள்ள முடிந்தது. இதைத் தொடர்ந்து இந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜே.லண்ஸ்ரெட் தனது செய்தியில் நவம்பர் 5.2005ஆம் திகதி கூறியுள்ளார். தமிழ் பேசவல்ல தூதுவராலய ஊழியரின் துணையுடன் இவரை விசாரித்ததாக அந்த கேபிள் கூறுகின்றது. இவரது பெயர் ஜீவரட்ணம், பிறந்த திகதி ஓகஸ்ட் 25.1983, பிறந்த இடம் காத்தான்குடி மட்டக்களப்பு. இவர் எச்.எச்.ஆர்.சந்தன என்பவரோடு தூதரகத்துக்கு வந்திருந்தார். சந்தன சண் ஏசியன் ரவல் கம்பனி ஊழியராக இருந்தார். கருணா அம்மான் அல்லது டக்ளஸ் தேவானந்தாவை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்லும் பொறுப்பு தனக்கு தரப்பட்டிருந்ததாக ஜீவரட்ணம் கூறினார். 15 வயதில் தமிழீழ புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட தான் 2003 இல் கரும்புலியாக ஏற்கப்பட்டதாக கூறினார். ஜீவரட்ணம் அமெரிக்க அரசாங்கத்திற்கோ அதன் நிறுவனங்களுக்கோ ஆபத்து இருப்பதாக தான் அறியவில்லை என திரும்பத் திரும்ப கூறினார். இவருடனான நேர்முகத்தின் முடிவில் இவரையும் கூட வந்தவரையும் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கேபிளில் கூறப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணைகளிலிருந்து ஜீவரட்ணம் எல்.ரி.ரி.ஈ.யின் கரும்புலி என அறிந்ததாக பாதுகாப்புப் படைகள் பின்னர் தெரிவித்ததாக கேபிளில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தூதுவரகத்துக்கு ஒருவர் வந்தார். அவரை நாம் பொலிஸில் ஒப்படைத்தோம் என்பதற்கு மேல் பத்திரிகைகளுக்கு தகவல் வழங்கவில்லை எனவும் கேபிளில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’