இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் இறைச்சிக் கடைக்காரர்களையே உருவாக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை மீது மாத்திரமன்றி, இந்திய கிரிக்கெட் சபை மீதும் விமர்சனங்களை முன்வைத்த அர்ஜுன ரணதுங்க, இந்திய கிரிக்கெட் சபை ஐ.பி.எல் போட்டிகள் மூலம் கிரிக்கெட்டைச் சிதைப்பதாக குற்றஞ்சாட்டினார். இலங்கை கிரிக்கெட் அணி முக்கியமான தொடர்களிலெல்லாம் தோல்விகளைச் சந்தித்து வருவதற்கு இலங்கையில் கிரிக்கெட்டிற்குள் அரசியல் புகுந்தமையே காரணம் எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதியிலிருந்து அனைவரும் கிரிக்கெட்டிற்குள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தவது வெளிப்படையானது எனத் தெரிவித்தார். தான் விளையாடிய காலத்தில் அரசியல்வாதிகளால் விளையாட்டு வீரர்கள் தங்களது முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்த ரணதுங்க, ஜனாதிபதி உட்பட அனைவரும் இப்போது அதைச் செய்து வருவதாகத் தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் தனது விரலை அனைத்திலும் தற்போது புகுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இலங்கை கிரிக்கெட் சபை திறனற்றவர்களால் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தற்போதைய கிரிக்கெட் சபையைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் தலையை அசைப்பவர்களாகவே உள்ளனர் எனத் தெரிவித்தார். தான் கிரிக்கெட் சபைத்தலைவராக இருந்த காலத்தில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தனது தேர்தல் செலவுகளுக்காக இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிதியைப் பயன்படுத்த முனைந்தார் எனவும், அதைத் தான் எதிர்த்து நின்றதாகவும் ரணதுங்க தெரிவித்தார். தற்போதைய நிலையில் பணத்தை எவ்வாறு ஈட்டுவது என்பது குறித்தே அனைவரது கவனமும் காணப்படுவதாகத் தெரிவித்த ரணதுங்க, அப்பணத்தை தேவையற்ற ரீதியில் செலவழிப்பது குறித்தே கவனம் செலுத்தவதாகக் குறிப்பிட்டார். இலங்கையின் பாடசாலைக் கிரிக்கெட் மிகவும் செழிப்பானதாகக் காணப்படுகின்ற போதிலும், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை அணியின் வளர்ச்சி குறைவாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வியுறும் என ஒரு வருடத்திற்கு முன்னர் தான் குறிப்பிட்டதாகவும், அண்மையில் அதுவும் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியக் கிரிக்கெட் அணி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கவில்லை எனக்குறிப்பிட்ட ரணதுங்க, தற்போது அவர்களால் கவாஸ்கர், வெங்சாக்கர், விஸ்வானத், டெண்டுல்கர், ட்ராவிட், லக்ஸ்மன் போன்ற வீரர்களை உருவாக்க முடியவில்லை எனவும், ஐ.பி.எல் போட்டிகள் மூலம் இறைச்சிக் கடைக்காரர்களையே அவர்களால் உருவாக்க முடிகிறது எனவும் அவர் தெரிவித்தார். முத்தையா முரளிதரன் பந்தை எறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டபோது அவர் பந்தை எறியவில்லை என்பது தனக்குத் தெரிந்ததன் காரணமாக நடுவர்களுடன் மோதியதாகவும், அப்போதே கிரிக்கெட்டின் விதிகள், நடைமுறைகளை வாசித்து அறிந்துகொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதன் காரணமாக முரளிதரனின் கிரிக்கெட் வாழ்வைக் காப்பாற்ற முடிந்ததாகத் தெரிவித்த அவர், எனினும் தற்போது பந்துவீசும் சில பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறையைப் பார்க்கும் போது தான் செய்தது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது எனவும் தெரிவித்தார். அத்தோடு தற்போதைய அணித்தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கிரிக்கெட் விதிகளைப் பற்றிய அறிவு கிடையாது எனவும், அவர்கள் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் அதற்காகத் தங்கியிருப்பதாகவும் ரணதுங்க தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’