ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 4 ஆவது போட்டியில் இந்திய அணியை பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றது. சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பங்களாதேஷ் அணி தனது முதல் விக்கெட்டை 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இழந்தது. நஸிமுதீன் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் ஏனைய முன்வரிசை வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். தமீம் இக்பால் 70 ஓட்டங்களைப் பெற்றார். ஜஹுருள் இஸ்லாம் 53 ஓட்டங்களைப் பெற்றார். சகீப் அல் ஹசன் 31 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பௌண்டரிகள் உட்பட 49 ஓட்டங்களைப் பெற்று அணியை பலப்படுத்தினர். அவர் 4 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தபோது பங்களாதேஷ் அணி 41.5 ஓவர்களில் 224 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால் பங்களாதேஷின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக வாண வேடிக்கைகளை நிகழ்த்தினார் அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹீம். கடைசி 3 ஓவர்களில் பங்களாதேஷ் அணிக்கு 33 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இர்பான் பதான் வீசிய 48 ஆவது ஓவரின் 2 ஆவது மற்றும் 3 ஆவது பந்துகளில் முஷ்பிகுர் ரஹீம் அடித்த இரு சிக்ஸர்கள் போட்டியை பங்களாதேஷ் பக்கம் திருப்பியது. பிரவீன் குமார் வீசிய 49 ஆவது ஓவரின் முதல் இரு பந்துகளில் பௌண்டரி ஒன்றையும் சிக்ஸர் ஒன்றையும் முஷ்பிகுர் ரஹீம் அடித்தபோது பங்களாதேஷின் வெற்றி தவிர்க்க முடியாததாகியது. அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் நஸீர் ஹொஸைன் 54 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் ரஹீமும் மஹ்மதுல்லாவும் பங்களாதேஷின் வெற்றியை உறுதிப்படுத்தினர். முஷ்பிகுர் ரஹீம் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பௌண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்றார். மஹ்மதுல்லா 2 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 4 ஓட்டங்களைப் பெற்றார். 260 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றிய பங்களாதேஷ் அணி பெற்ற 71 ஆவது வெற்றி இதுவாகும். இந்தியாவுக்கு எதிராக அவ்வணி பெற்ற மூன்றாவது வெற்றி இது. பங்களாதேஷ் அணி இன்றை போட்டியில் கடந்த 290 ஓட்ட இலக்கானது அவ்வணி ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வெற்றிகரமாக கடந்த அதிகூடிய ஓட்ட இலக்காகும். 2009 ஆம் ஆண்டு அவ்வணி ஸிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 313 ஓட்ட இலக்கை வெற்றிகரமாக கடந்தமை குறிப்பிடத்தக்கது. ஷகீப் அல் ஹசன் இப்போட்டியின் சிறப்பாட்டக்காராகத் தெரிவானார். தனது 100 ஆவது சர்வதேச சதம் குவித்த சச்சின் டெண்டுல்கருக்கு விசேட பரிசொன்று வழங்கப்பட்டது. இவ்வெற்றிமூலம் இறுதிப்போட்டிக்குதகுதி பெறுவதற்கான எதிர்பார்ப்பை பங்களாதேஷ் அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. இத்தொடரில் எதிர்வரும் ஞாயிறன்று பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 20 ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இறுதிப்போட்டிக்கு தெரிவாகுவதற்கு, இலங்கையுடனான போட்டியில் பங்களாதேஷ் பெறும் புள்ளிகளைவிட பாகிஸ்தானுடனான போட்டியில் அதிக புள்ளிகளை பெற வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அணி உள்ளது. பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியுற்று, அதேவேளை பங்களாதேஷை போனஸ் புள்ளியுடன் இலங்கை வென்றால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’