வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 மார்ச், 2012

சிறு கைத்தொழிலாளர்களது நலன்கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை


சிறு கைத்தொழிலாளர்களது நலன்கருதி அவர்களுக்குத் தேவையான ஈயத்தை மூலப்பொருளாக இலகுவாகப் பெறக்கூடிய வகையிலான செயற்பாட்டினை சட்டரீதியாக முன்னெடுக்கும் நோக்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிறு கைத்தொழிலாளர்களில் பலர் அறியாமை காரணமாக இதுவரையில் தவறான வழிகளில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலேயே மூலப்பொருளாக ஈயத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். அதேநேரம் அவர்களது உற்பத்திகளின் தேவைக்கேற்ப ஈயத்தினை மூலப்பொருளாகப் பெற முடியாத நிலையும் இருந்து வந்துள்ளது. எனவே இந்நிலையை மாற்றி சட்டரீதியிலான வகையிலும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் மேற்படி ஈய விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனையின் பிரகாரம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வணிக அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளது. இதுவரையில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் ஈயம் அடங்கிய வாகன பற்றரிகள் அரச நிறுவனங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு அவை சிறு கைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பற்றரிகளை கொள்வனவு செய்கின்ற கைத்தொழிலாளர்கள் தங்களது தொழில் நிலையங்களில் வைத்து அவற்றை உருக்குவதால் பாரியளவில் சூழல் மாசுற்றுவரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்கும் சிறு கைத்தொழிலாளர்களது தேவைக்கேற்ப, நியாய விலையில் ஈயத்தை மூலப்பொருளாக வழங்குவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது இந்நடவடிக்கை மூலம் வழிவகுக்கிறது. இதன்படி இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மூலம் அரச நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படுகின்ற பற்றரிகளை இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதென்றும் இந்தத் தனியார் நிறுவனமும் ஏனைய பற்றரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் என்றும் இவ்வாறு சேகரிக்கப்படும் பற்றரிகள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இத்தனியார் நிறுவனத்தின் மூலம் உருக்கப்பட்டு சிறு கைத்தொழிலாளர்களுக்குத் தேவையானளவு ஈயத்தை நியாய விலையில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை வழங்குமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறு கைத்தொழிலாளர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு எஞ்சும் ஈயத் தொகையை மேற்படி தனியார் நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் பிரகாரம் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைத்தொழிலாளர்களுக்கு மட்டும் இச்சபை நியாய விலையில் தேவைக்கேற்ப ஈயத்தை மூலப்பொருளாக வழங்கும். அதேநேரம் இலங்கையில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமாக ஈயத்தை உருக்கும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் இதன் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’