கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்ட தமிழ்ப் பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபரொருவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலையுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. சுதர்ஷனி சகிலா கனகசபை (48) என்ற இப்பெண் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். இவர் ஏற்கனவே அங்கு திருமணமானவர் என்பதுடன் 2 குழந்தைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவர் இங்கு வேறொரு நபரை மறுமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் அறையொன்றில் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த அறையானது கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் காணப்பட்டதால் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அறையைத் திறந்து பார்த்த போது குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்தமையைக் கண்டுள்ளனர். கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்ட நிலையிலேயே சடலம் கிடந்துள்ளது. உடனே அவ் ஊழியர்கள் கொள்ளுப்பிட்டிய பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர். பெண்ணின் நகைகள் மற்றும் பணம் ஆகியன அறையில் பத்திரமாக இருந்ததால் கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காக இக்கொலை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ___
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’